இந்திய - சீன எல்லையில் இருநாட்டு ராணுவ வீரர்கள் இடையே மீண்டும் மோதல்

பட மூலாதாரம், Getty Images
இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையிலான சர்ச்சைக்குரிய எல்லைப்பகுதியில் மீண்டும் இருநாட்டு ராணுவ வீரர்கள் மோதலில் ஈடுபட்டதாகவும், இதில் இரண்டு தரப்பிலும் வீரர்களுக்கு காயங்கள் ஏற்பட்டதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிக்கிம் மாநிலத்தின் வடக்குப்பகுதியிலுள்ள எல்லைப்பகுதியில் மூன்று நாட்களுக்கு முன்னர் இந்த மோதல் ஏற்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இருநாட்டு ராணுவ வீரர்களுக்கிடையே மற்றொரு சர்ச்சைக்குரிய எல்லைப்பகுதியில் கடந்த ஆண்டு நடைபெற்ற மோதலை அடுத்து இந்தியா மற்றும் சீனாவுக்கிடையேயான உறவில் பதற்றம் நீடித்து வரும் நிலையில் இந்த செய்தி வெளிவந்துள்ளது.
கடந்த ஆண்டு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கத்தில் இருநாட்டு ராணுவ வீரர்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பில் குறைந்தது 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். எனினும், தங்களது தரப்பில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து சீன ராணுவம் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில், மூன்று நாட்களுக்கு முன்னர் சிக்கிமில் உள்ள நாகு லா கணவாய் என்ற இடத்தில் இருநாட்டு ராணுவ வீரர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டதாக இந்திய ராணுவ அதிகாரிகளை மேற்கோள் காட்டி இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஒரு சீன ரோந்து படை இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றபோது, அவர்கள் வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக சீன தரப்பிலிருந்து இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இந்திய ராணுவம் விளக்கம்

பட மூலாதாரம், Getty Images
இந்த நிலையில் இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள இந்திய ராணுவம், இருநாட்டு ராணுவ வீரர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டதை உறுதிசெய்துள்ளது.
"கடந்த ஜனவரி 20ஆம் தேதியன்று சிக்கிமின் வடக்குப்பகுதியிலுள்ள நகுலா என்ற பகுதியில் சிறிய அளவில் இருநாட்டு வீரர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் இது இருநாடுகளிடையே ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைகளின்படி, உள்ளுரிலுள்ள ராணுவ அதிகாரிகளால் தீர்த்து வைக்கப்பட்டது. எனவே, உண்மைக்கு புறம்பான தகவல்களையோ அல்லது மிகைப்படுத்த செய்திகளையே வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்" என்று இந்திய ராணுவத்தின் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய இந்திய - சீன எல்லை

பட மூலாதாரம், Getty Images
இந்தியா, சீனாவுடன் 3,488 கி.மீ எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. இது மெய்யான கட்டுப்பாட்டுக் கோடு (Line of Actual Control - LAC) எனப்படுகிறது.
ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகியவற்றை ஒட்டி இந்த எல்லை செல்கிறது.
மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ள இந்த எல்லையின் மேற்குப் பகுதியில் ஜம்மு-காஷ்மீர், மத்தியப் பகுதியில் இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மற்றும் கிழக்குப் பகுதியில் சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசம் இடம் பெற்றுள்ளன.
இரண்டு நாடுகளுக்கிடையே ஒரேயொரு முறை கடந்த 1962இல் போர் ஏற்பட்டது, அதில் இந்தியா தோல்வியுற்றது.
பிற செய்திகள்:
- ஒரே ராக்கெட்டில் 143 செயற்கைக்கோள்கள் ஏவி உலக சாதனை படைத்த ஸ்பேஸ் எக்ஸ்
- மும்பையிலும் திரண்டனர் விவசாயிகள்: மகாராஷ்டிரம் முழுவதிலும் இருந்து பேரணியாக வந்தனர்
- தமிழ்நாட்டில் முதலில் வேல் யாத்திரை சென்றவர் கருணாநிதிதான்: ஆர்.எஸ்.பாரதி
- நேபாள பிரதமர் கே.பி.ஷர்மா ஒளியை கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கிய எதிர் கோஷ்டி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












