தமிழ்நாட்டில் முதலில் வேல் யாத்திரை சென்றவர் கருணாநிதி: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி

கருணாநிதி

பட மூலாதாரம், STR/AFP via Getty Images

    • எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
    • பதவி, பிபிசி தமிழ்

திருத்தணியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்திய மக்கள் கிராமசபை கூட்டத்தின் இறுதியில், அவருக்கு வெள்ளி வேல் பரிசளிக்கப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் கடவுள் நம்பிக்கை இல்லாத ஸ்டாலினுக்கு வேல் பரிசளிக்கப்பட்டதை விமர்சித்து வருகின்றன. ஸ்டாலினுக்கு மரியாதை நிமித்தமாக வேல் கொடுத்ததை, அதிமுக கூட்டணி தவறாக சித்தரிப்பதாகவும், தமிழ்நாட்டில் முதல் முதலில் வேலுக்காக பயணம் சென்றவர் மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.கருணாநிதிதான் என்றும் திமுக-வினர் வாதிடுகின்றனர்.

தமிழ்நாடு முழுவதும் பல ஊர்களில் மக்கள் கிராம சபை என்ற பெயரில் கூட்டம் நடத்தி மக்களிடம் நேரடியாக உரையாடிய ஸ்டாலின், அடுத்ததாக, 234 தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் தொடங்கவுள்ளார். இந்த நேரத்தில், கிராமசபை கூட்ட நிகழ்ச்சி முடிவில், திருத்தணி திமுகவினர் அவருக்கு வெள்ளி வேல் ஒன்றை பரிசாக கொடுத்தனர்.

கோயம்புத்தூரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் பேசிய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, கடவுளை விமர்சித்துப் பேசிய ஸ்டாலின் கையில் வேல் கொடுத்திருக்கிறார்கள் என்று குறை கூறினார்.

"முருகன் வரம், அதிமுகவுக்குதான் கிடைக்கும். ஸ்டாலின் கையில் வேல் ஏந்துவது பகல் வேடம்தான். அவருக்கு முருகன் வரம் தர மாட்டார்,'' என்றார் பழனிசாமி.

''உண்மையான பிரார்த்தனை செய்யவேண்டும். நாம் மனப்பூர்வமாக பிரார்த்தனை செய்பவர்கள். ஸ்டாலின் வெளியில் பேசுவது ஒன்றாகவும், உள்ளே நினைப்பது ஒன்றாகவும் இருப்பதால், அவர் வேலை கையில் எடுத்தாலும், முருகனின் அருள் அவருக்கு கிடைக்காது,'' என்றும் பழனிசாமி பேசியுள்ளார்.

ஆர்.எஸ். பாரதி

பட மூலாதாரம், RS BHARATHI/FACEBOOK

பாஜக தமிழ்நாடு தலைவர் முருகன் பேசுகையில், ஸ்டாலின் வேல் ஏந்தியது, தங்கள் கட்சியின் வெற்றி என்றும், தாங்கள் நடத்திய வேல் யாத்திரை வெற்றி பெற்றுள்ளதாகவும் கூறினார்.

அதிமுக கூட்டணிக் கட்சியினர் தெரிவித்துள்ள இந்த விமர்சனங்களில் உண்மை இல்லை என்றும் தமிழ்நாட்டில் முதலில் வேல் யாத்திரை நடத்தியவர் மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதிதான் என்றும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.

பிபிசி தமிழிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி, ''மனதில் உண்மை உள்ளவர்களுக்கு முருகன் அருள் கிடைக்கும் என பழனிசாமி பேசியது சரிதான். அதனால், அறுபடைவீடு முருகனின் மொத்த அருளும் ஸ்டாலினுக்குதான் கிடைக்கும். அவர் மனதில் பட்டதை தெளிவாகப் பேசுபவர்.

திமுகவில் கடவுள் நம்பிக்கை இருப்பவர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அவர்கள் பக்தியோடு இருப்பதற்கு எந்த தடையும் இல்லை. திருத்தணி பகுதி மாவட்ட கமிட்டியில் இருக்கும் செயலாளர் திருத்தணி கோயிலில் காண்ட்ராக்ட் வேலை செய்து வருகிறார். மரியாதை நிமித்தமாக அவர் தனக்கு பிடித்த வேலை பரிசாக கொடுத்துள்ளார். அதில் எந்த தவறும் இல்லை,'' என்கிறார் பாரதி.

பாஜக மாநிலத் தலைவர் முருகன் பேசிய கருத்தை சுட்டிக் காட்டியபோது ''தமிழ்நாட்டில் முதலில் வேலுக்காக யாத்திரை நடத்தியவர் கலைஞர் கருணாநிதிதான். 1982ல் திருத்தணி கோயில் வேல் காணவில்லை என்பதை அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் ஏற்க மறுத்தார்.

திருச்செந்தூர் கோயில் வேல் மீட்கப்படவேண்டும், திருடப்பட்ட வேல் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையோடு நடைபயணம் சென்றவர் கருணாநிதி. இறுதியில், வேல் கண்டறிய அமைக்கப்பட்ட கமிட்டி அறிக்கையை எம்ஜிஆர் வெளியிடவில்லை. கலைஞர் தனது திறமையால் அந்த அறிக்கையை வெளியில் கொண்டுவந்தார்,'' என்று கூறினார் பாரதி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :