கொரோனாவை சிறப்பாக கையாண்டதாக பாராட்டப்பட்ட கேரளத்தில் தொற்று அதிகம் பரவக் காரணம் என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், இம்ரான் குரேஷி
- பதவி, பிபிசி ஹிந்தி சேவைக்காக
கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்டதாகப் பாராட்டப்பட்ட கேரளாவில் இப்போது மீண்டும் நோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அரசால் இதைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
கடந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்றை சிறந்த முறையில் கையாண்டு கட்டுப்படுத்தியமைக்காக கேரள மாநிலம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது. ஆனால் இப்போது நிலைமை மோசமடைந்துள்ளது.
நாளுக்கு நாள் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிக அளவில் அதிகரிக்கவில்லையெனினும் இந்த எண்ணிக்கை குறைவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
பொது சுகாதார அறக்கட்டளையின் லைஃப் சோர்ஸ் தொற்றுநோயியல் பிரிவுத் தலைவரும் பேராசிரியருமான டாக்டர் கிரிதர் பாபு பிபிசி-க்கு அளித்த பேட்டியில், "இந்த போக்கு எந்த நிலைக்கு இட்டுச் செல்லும் என்பதை மதிப்பிடுவதற்கு இன்னும் ஓரிரு வாரங்கள் காத்திருக்க வேண்டும். இப்போது இது குறித்து எதுவும் சொல்வதற்கில்லை" என்று கூறுகிறார்.
டாக்டர் பாபுவின் கருத்தை ஏற்றுக் கொள்ளும், பெயர் வெளியிட விரும்பாத கேரள சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர், "மாநிலத்தில் கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்துள்ளது. இந்த நிலைமை கவலைக்குரியது. கடந்த மூன்று வாரங்களை விட இப்போது அதிகரித்துள்ளது. தொடர்ந்து இந்த வாரமும் இது அதிகரித்தே உள்ளது." என்று கவலை தெரிவிக்கிறார்.
எந்த அளவுக்கு அதிகரித்துள்ளது?
டிசம்பர் முதல், இந்த மாநிலத்தில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா நோய்த்தொற்றுகள் பதிவாகின்றன. சில நாட்களில் இந்த எண்ணிக்கை ஆறாயிரத்தைத் தாண்டியும் உள்ளது.
கடந்த ஆகஸ்ட் முதல் மாநிலத்தில் கொரோனா தொற்று படிப்படியாக அதிகரித்து வருகின்றது. ஆகஸ்ட் 9 முதல் 24 வரை, மாநிலத்தில் கொரொனா நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்களின் எண்ணிக்கை 12,347 லிருந்து 20,323 ஆக உயர்ந்தது.
ஆகஸ்ட் 25 முதல் மாநிலத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆகஸ்ட் 25 அன்று ஒரே நாளில், கொரோனா தொற்று காரணமாக 10 பேர் உயிரிழந்தனர். 2,375 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டனர். அடுத்த நாள், 13 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். 2,476 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டனர்.
அன்றைய தினம் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தோர் எண்ணிக்கை 22,344 ஆக அதிகரித்தது.
பண்டிகைகள் மற்றும் தேர்தல் காரணமா?
நிபுணர்களின் கூற்றுப்படி, கொரோனா தொற்று மாநிலத்தில் அதிகரித்து வருகிறது. ஆகஸ்ட் மாதத்தில், மாநிலத்தின் மிக முக்கியமான திருவிழாவான ஓணம் கொண்டாடப்படுகிறது, அதன் பிறகு புத்தாண்டு வரை தொடர்ந்து பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன.
மாநிலத்தின் கோவிட் ஆலோசனைக் குழுவின் தலைவர் டாக்டர் இக்பால் பாபு குஞ்சு பிபிசியிடம் பேசுகையில், "பண்டிகைகளின் போது ஏராளமான மக்கள் ஒன்று கூடினர். ஓணம் தவிர, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சமூகத்தின் திருவிழாக்கள், புத்தாண்டு கொண்டாட்டங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல்கள் எனப் பல சமயங்களில் மக்கள் ஒன்று கூடிவருகிறார்கள். இது மாநிலத்தில் கொரோனா தொற்று ஏற்படுவதை அதிகரித்துள்ளது."என்று கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
மேலும் பேசிய டாக்டர் இக்பால், "கோவிட் பாதுகாப்பு நெறிமுறையைப் பின்பற்றும் மக்களும் சலிப்பில் உள்ளனர். நீண்ட காலமாகக் கட்டுப்பாட்டில் இருந்ததால் இது புரிந்து கொள்ளக்கூடியதே. ஆனால் ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டியது அவசியம் - கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்திருக்கலாம், ஆனால் மாநிலத்தில் உயிரிழப்பு விகிதம் மிகக் குறைவு. மருத்துவமனைகளின் மொத்த கொள்ளளவில் 60 சதவீதத்துக்கும் அதிகமான தேவை இதுவரை இருந்ததில்லை" என்று விளக்குகிறார்.
புள்ளிவிவரங்கள் டாக்டர் இக்பாலின் கருத்தை உறுதிப்படுத்துகின்றன. ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில், கேரளாவில் தினசரி 12 முதல் 20 பேர் வரை கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். டிசம்பரில் இந்த எண்ணிக்கை அதிகபட்சம் 26-27 பேர் வரை எட்டியது.
செப்டம்பர் 13 அன்று, மாநிலத்தில் நோய் குணமாகாமல் இருந்தவர்கள் எண்ணிக்கை முப்பதாயிரத்தை தாண்டியது. ஒரு வாரத்தில் இந்த எண்ணிக்கை 40 ஆயிரத்தை எட்டியது.
செப்டம்பர் 25 அன்று, இது 48,892 ஆக அதிகரித்தது. அடுத்த நாளே, இந்த எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியது. செப்டம்பர் 29 அன்று, மாநிலத்தில் 61,791 குணமாகாத கொரோனா நோயாளிகள் இருந்தனர். அக்டோபர் 7 ஆம் தேதி, இந்த எண்ணிக்கை 92,161 ஐ எட்டியது.
உச்சத்தை எட்டியுள்ளதா கொரோனா?
நவம்பர் மாதத்தில் இந்த எண்ணிக்கை சற்றே குறைந்து 60 ஆயிரத்தை எட்டியது.
இந்திய மருத்துவ சங்கத்தின் கேரளப் பிரிவின் துணைத் தலைவர் டாக்டர் சுல்ஃபி நூஹு, பிபிசி-யிடம் பேசிய போது, "மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. இங்கு மக்கள்தொகை அடர்த்தி மிக அதிகமாக உள்ளது. கிராமங்களிலும் கடைகளிலும் அதிகம் மக்கள் கூடுகின்றனர். மேலும், வணிக மற்றும் கல்வி நிறுவனங்களும் திறக்கப்பட்டுள்ளன" என்று கூறினார்.
டாக்டர் சுல்ஃபி மாநிலத்தில் கொரோனா தொற்றுப் பரவல் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சுகிறார். "வேறு எங்கும் இல்லாத அளவுக்கு அதிகமானவர்கள் முகமூடி அணியாமலே வெளியே செல்கின்றனர். இது தவிர, அடுத்த இரண்டு-மூன்று மாதங்களில் சட்டமன்றத் தேர்தலும் வருகிறது. " என்று அவர் கூறினார்.
கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த நீண்ட காலம் பிடிக்கலாம் என்று இவர் கருதுகிறார்.
"இது உச்சத்தை அடைந்துள்ளது. இது இப்போதைக்கு குறையாது. நீண்ட காலம் ஆகும்" என்று இவர் கணிக்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
டாக்டர் இக்பால், டாக்டர் சுல்ஃபியின் கருத்திலிருந்து மாறுபடுகிறார். "கொரோனா பரவலின் அதிகரிப்பு இப்போது நிலையான அளவுக்கு வந்துவிட்டது. இப்போது இது 'தட்டை வரைபடம்' ஆகிவிட்டது. இது மிக முக்கியமான விஷயம். எங்கள் சுகாதார வசதிகளின் நிலைமை சிறப்பாகவே உள்ளது." என்று இவர் நம்பிக்கை தெரிவிக்கிறார்.
பரவல் வேகமாக அதிகரிப்பது சாதாரணமானதா?
கேரள சுகாதாரத் துறையின் ஆலோசகரும் முன்னாள் கூடுதல் தலைமைச் செயலாளருமான ராஜீவ் சதானந்தன் பிபிசி-யிடம் பேசிய போது, "ஆரம்ப நாட்களில் கொரோனா பரவலை மாநில அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது உண்மைதான்.
பொது மக்களும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வந்தனர். ஆனால் இப்போது மக்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறைந்துவிட்டது. இந்நிலையில், மாநிலத்தில் கொரோனா பரவல் எப்போது குறையும் என்று சொல்வது கடினம். அதை மதிப்பிடுவதற்குப் போதுமான தேவையான புள்ளிவிவரங்கள் எங்களிடம் இல்லை" என்று கூறினார்.
கேரளாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை எந்தவொரு அசாதாரண சூழ்நிலையையும் பிரதிபலிக்கவில்லை என்பது டாக்டர் பாபுவின் கருத்தாக உள்ளது.
அவர், "மற்ற நகரங்களில் நடப்பது போலத்தான் கேரளாவிலும் நடக்கிறது. மும்பையில் குடிசைப் பகுதிகளிலிருந்து இந்நோய், மற்ற பகுதிகளுக்கும் பரவியது. பெங்களூரில் ஓரிரண்டு பகுதிகளில் தொடங்கி, பிறகு, மற்ற பகுதிகளுக்குப் பரவியது. கேரளாவில் இதன் பரவல் சற்றுத் தாமதமாக நிகழ்கிறது.
அது பரவத் தொடங்கும் போது, கேரளாவாகட்டும் நியூசிலாந்தாகட்டும், அது ஒரு உச்சத்தை எட்டத்தான் செய்கிறது. தாமதமாகப் பரவத் தொடங்கியும் பரிசோதனைகள் சிறப்பாகச் செய்யப்பட்டும் இதன் பரவல் அதிகரிக்கத் தான் செய்கிறது.
பொதுவாக, நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கையைப் பொருத்தே உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் உள்ளது. நோய்ப் பரவல் அதிகரிக்கும் போது உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. தொடக்க காலத்தில், நோய் பாதிப்பு குறைவாக இருந்ததால், உயிரிழப்புகளும் கட்டுக்குள் இருந்தன. அடுத்த ஒரு வாரம் இதன் போக்கைக் கவனமாகக் கண்காணிக்க வேண்டியது அவசியம். " என்று அவர் கூறுகிறார்.
பிப்ரவரி முதல் நிலைமை சீரடையத் தொடங்கும் என்று டாக்டர் இக்பால் கணிக்கிறார். இது குறித்து டாக்டர் பாபுவிடம் கேட்ட போது, "சீரடைய வேண்டும். ஆனால் அது முற்றிலும் மக்கள் கூடுவதைப் பொருத்தே இருக்கும். நான் நிலைமையை மதிப்பிட, ஒரு வாரம் காத்திருக்கவே விரும்புகிறேன்" என்று பதிலளித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












