பிரிட்டனில் பரவும் கொரோனா வைரஸ் புதிய வகை பற்றி நமக்கு எந்த அளவு தெரியும், யாரை எல்லாம் பாதிக்கும்?

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஜேம்ஸ் கலேகர்
    • பதவி, சுகாதாரம் மற்றும் அறிவியல் செய்தியாளர்

பிரிட்டனில் வாழும் மில்லியன் கணக்கிலான மக்கள் மீது கடுமையான நான்காம் கட்ட கட்டுப்பாடுகள் விதித்ததற்கும், கிறிஸ்துமஸ் விழாவில் மக்கள் ஒன்று கூடாமல் இருக்க கடுமையான விதிமுறைகளை விதித்ததற்கும், மற்ற நாடுகள் பிரிட்டன் மீது பயணத் தடை விதித்திருப்பதற்கும், இந்த புதிய வகை கொரோனா வைரஸ் காரணமாகக் கூறப்படுகிறது.

இந்த புதிய ரக கொரோனா வைரஸ், எப்படி பிரிட்டனில் அதிகமாகப் பரவும் வைரஸ் ரகமாக மாறியது?

மற்ற ரக கொரோனா வைரஸை விட, இந்த புதிய ரக கொரோனா வைரஸ் அதிகமாகப் பரவலாம் என அரசு ஆலோசகர்கள் நம்புகிறார்கள்.

இந்த புதிய வகை கொரோனா வைரஸ் குறித்து நிறைய சந்தேகங்களும், நிறைய விடை தெரியாத கேள்விகளும் இருக்கின்றன. இந்த வைரஸ் குறித்த ஆராய்ச்சிகள் மற்றும் பணிகள் எல்லாமே தொடக்க நிலையில் தான் இருக்கின்றன.

ஏன் இந்த புதிய ரக வைரஸ் கவலையளிக்கிறது?

மூன்று விஷயங்களால் இந்த புதிய ரக கொரோனா வைரஸ் கவனம் பெறுகிறது.

1. இந்த புதிய ரக கொரோனா வைரஸ், மற்ற ரக வைரஸ்களை விட அதிவேகமாக பரவிக் கொண்டிருக்கிறது.

2. இந்த ரக வைரஸின் முக்கிய பகுதியில் மரபியல் மாற்றங்கள் நடந்திருக்கிறது.

3. இதில் சில மரபியல் மாற்றங்கள், முன்பே சோதனை கூடங்களில் காணப்பட்டன. புதிய ரக கொரோனா வைரஸில் காணப்படும் இந்த மாற்றங்களில், மனித செல்களை பாதிக்கும் தன்மை அதிகமாக இருக்கின்றன.

புதிய ரக கொரோனா வைரஸ், அதிகமாக பரவும் கொரோனா வைரஸ் ரகங்களில் ஒன்றாக மாற வாய்ப்பிருக்கிறது. சரியான நேரத்தில் சரியான இடத்தில் பரவுவதன் மூலம் இது சாத்தியமாகும். உதாரணத்துக்கு லண்டனில் சமீப காலம் வரை, இரண்டாம் கட்ட கட்டுப்பாடுகள் தான் நடைமுறையில் இருந்தன. இந்த நகரத்தில், புதிய ரக கொரோனா வைரஸ் பரவினால், அது எளிதில் பிரிட்டன் முழுக்க அதிகமாக பரவ வாய்ப்பிருக்கிறது.

இந்த புதிய ரக கொரோனா வைரஸ் பரவலைக் குறைக்க, பிரிட்டனின் பல பகுதிகளிலும் நான்காம் கட்ட கட்டுப்பாட்டு விதிமுறைகள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன.

"பரவுவது புதிய ரக கொரோனா வைரஸ் தானா என்பதைக் கண்டுபிடிக்க, சோதனைக் கூடங்களில் பல பரிசோதனைகளைச் செய்ய வேண்டும். அதுவரை நீங்கள் வாரக் கணக்கிலும் மாதக் கணக்கிலும் காத்திருக்க விரும்புகிறீர்களா? முடிவுகளைத் தெரிந்து கொண்ட பின் புதிய ரக கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கப் போகிறீர்களா? நிச்சயமாக இந்த சூழலில் இல்லை" என்கிறார் கோவிட் - 19 ஜீனாமிக்ஸ் யூ கே கன்சார்டியத்தைச் சேர்ந்த பேராசிரியர் நிக் லோமன்.

புதிய ரக கொரோனா வைரஸ் எவ்வளவு வேகத்தில் பரவுகிறது?

இந்த புதிய ரக கொரோனா வைரஸ் கடந்த செப்டம்பரில் கண்டுபிடிக்கப்பட்டது. லண்டன் நகரில், கடந்த நவம்பரில் சுமாராக 25 சதவீத கொரோனா நோயாளிகள், இந்த புதிய ரக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். டிசம்பர் மத்தியில், லண்டன் நகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில், மூன்றில் இரண்டு பங்கு நோயாளிகள், இந்த புதிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

மில்டன் கீன்ஸ் லைட் ஹவுஸ் பரிசோதனைக் கூடம் போன்ற சில சோதனைக் கூடங்களின் தரவுகளில், இந்த புதிய ரக கொரோனா வைரஸ் எப்படி ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது என்பதைப் பார்க்க முடிகிறது.

இந்த புதிய கொரோனா வைரஸ், எந்த அளவுக்கு பரவும் என கணிதவியளாலர்கள் கணக்கிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மற்ற ரக கொரோனா வைரஸை விட, இந்த புதிய ரக கொரோனா வைரஸ், சுமாராக 70 சதவீதம் கூடுதலாக பரவலாம் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் குறிப்பிட்டார். இது ஆர் எண்களை அதிகரிக்கலாம் எனவும் குறிப்பிட்டார் ஜான்சன். ஆர் எண் என்பது ஒரு தொற்று நோயின் பரவலைக் குறிக்கும் அளவீடு.

லண்டன் இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த எரிக் வோல்ஸின் விளக்கக் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதிலும் இந்த 70 சதவீதம் என்கிற எண் இடம்பெற்றிருந்தது.

"புதிய ரக கொரோனா வைரஸ் பரவுவது குறித்து இப்போதே கருத்து வெளியிடுவது, மிகவும் முன் கூட்டிக் கூறுவதாக அமையும். ஆனால் புதிய ரக கொரோனா வைரஸ், மற்ற எந்த ரக கொரோனா வைரஸை விடவும் அதிவேகமாகப் பரவுகிறது. இதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்" என என்னிடம் குறிப்பிட்டார் எரிக் வோல்ஸ்.

புதிய ரக கொரோனா வைரஸ் எந்த அளவுக்கு பரவலாம் என்பதற்கு சரியான தரவுகள் இல்லை. புதிய ரக கொரோனா வைரஸ் 70 சதவீதத்தை விட மிக கூடுதலாகப் பரவலாம் என்றும், 70 சதவீதத்தை விட மிகக் குறைவாகவே புதிய ரக கொரோனா வைரஸ் பரவலாம் என்றும் விஞ்ஞானிகள் தங்களின் மாறுபட்ட கணிப்புகளை என்னிடம் கூறினார்கள். இவர்களின் ஆராய்ச்சி முடிவுகள் இதுவரை வெளியாகவில்லை.

தற்போது இருப்பதை விட, புதிய ரக கொரோனா வைரஸ் கூடுதலாகப் பரவுமா என்கிற கேள்வி, விடையின்றி தொக்கி நிற்கிறது.

"புதிய ரக கொரோனா வைரஸ் அதிகமாக பரவுகிறதா என்பதைக் கூற, பொதுவெளியில் இருக்கும் தகவல்கள் & ஆதாரங்கள் போதுமானதாக இல்லை" என்கிறார் நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் வைராலஜிஸ்ட் பேராசிரியர் ஜானதன் பால்.

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், Getty Images

எவ்வளவு பரவி இருக்கிறது?

இந்த புதிய ரக கொரோனா வைரஸ், பிரிட்டனில் ஒரு நோயாளியிடம் உருவாகி இருக்கலாம் அல்லது வெளிநாட்டில் இருந்து பிரிட்டனுக்குப் பரவி இருக்கலாம்.

தற்போது, வடக்கு அயர்லாந்து தவிர, பிரிட்டனின் பல பகுதிகளில் இந்த புதிய ரக கொரோனா வைரஸ் காணப்படுகிறது. குறிப்பாக லண்டன், தென் கிழக்கு மற்றும் கிழக்கு பிரிட்டனில் அதிகம் காணப்படுகிறது. பிரிட்டனின் மற்ற பகுதிகளில், புதிய ரக கொரோனா வைரஸ் பெரிதாகப் பரவத் தொடங்கவில்லை.

டென்மார்க் மற்றும் ஆஸ்திரேலியாவில் பரவி இருக்கும் புதிய ரக கொரோனா வைரஸ், பிரிட்டனில் இருந்து வந்ததாக, நெக்ஸ்ட்ஸ்ட்ரெயின் (Nextstrain) எனும் நிறுவனத்தின் தரவுகள் கூறுகின்றன. இந்த நிறுவனம், கொரோனா மாதிரிகளின் மரபணுக் குறியீடுகளை உலகம் முழுக்க கண்காணித்து வருகிறது. நெதர்லாந்திலும் இந்த புதிய ரக கொரோனா வைரஸ் பரவி இருக்கிறது.

இதே போன்ற, ஆனால் பிரிட்டனில் பரவிக் கொண்டிருக்கும் புதிய ரக கொரோனா வைரஸுக்குத் தொடர்பில்லாத, வேறு ஒரு புதிய ரக கொரோனா வைரஸ், தென் ஆப்பிரிக்காவிலும் பரவி வருகிறது.

இதற்கு முன் இப்படி நடந்திருக்கிறதா?

ஆம், நடந்திருக்கிறது.

தற்போது உலகில் பரவலாக இருக்கும் கொரோனா வைரஸ், தொடக்கத்தில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் காணப்பட்ட கொரோனா வைரஸ் கிடையாது.

கடந்த பிப்ரவரியில், ஐரோப்பாவில் உருவான D614G என்கிற கொரோனா வைரஸ் தான் தற்போது உலகம் முழுவதும் பரவலாக காணப்படுகிறது.

A222V எனப்படும் மற்றொரு ரக கொரோனா வைரஸ் ஐரோப்பா முழுமைக்கும் பரவியது. இது ஸ்பெயின் நாட்டின் கோடை கால விடுமுறையுடன் தொடர்புடையது.

புதிய மரபணு மாற்றமடைந்த கொரோனா வைரஸ் குறித்து நமக்கு என்ன தெரியும்?

இந்த புதிய ரக கொரோனா வைரஸ் குறித்த ஆய்வுகள் சமீபத்தில் வெளியானது. அதில் 17 முக்கிய மாற்றங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனிதர்களின் உடலில் நுழைய கொரோனா வைரஸ் பயன்படுத்தும் முக்கிய பகுதியான புரத ஸ்பைக்குகள் (Protein Spike) பல மாற்றங்களைக் கண்டிருக்கின்றன.

"Receptor-Binding Domain" என்றழைக்கப்படும் ஒரு முக்கிய பகுதியில், N501Y என்கிற மரபணு மாற்றம், புதிய ரக வைரஸில் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

வைரஸின் இந்தப் பகுதி தான், மனித செல்களுடன் முதலில் தொடர்பு கொள்ளும். கொரோனா வைரஸின் இந்தப் பகுதியில் ஏற்பட்டிருக்கும் மாற்றம், மனித உடலில் எளிதில் உட்புக முடியும் என்றால், அது வைரஸுக்கு மிகப் பெரிய சாதகமான அம்சமாகிவிடும்.

"இது ஒரு முக்கியமான மாற்றம் போலத் தெரிகிறது" என்கிறார் பேராசிரியர் லோமன்.

H69/V70 deletion என்கிற மரபணு மாற்றத்தில், ஸ்பைக்கின் ஒரு சிறிய பகுதி நீக்கப்பட்டிருக்கிறது. இந்த மாற்றம் பல முறை வெளிப்பட்டது. மிங்க் எங்கிற விலங்கில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸில் இது காணப்பட்டது.

இந்த மரபணு மாற்றம் வைரஸின் பரவும் தன்மையை இரண்டு மடங்கு அதிகரிப்பதாக, பரிசோதனைகளில் வெளிப்பட்டதாகக் கூறுகிறார் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ரவி குப்தா.

கொரோனாவில் இருந்து மீண்டு வந்தவர்களின் ரத்தத்தில் இருக்கும் ஆன்டிபாடிக்கள் எனப்படும் எதிர்பான்களின் செயல் திறனை, இந்த H69/V70 deletion என்கிற மரபணு மாற்றம் குறைப்பதாக அதே ஆராய்ச்சிக் குழுவினர் குறிப்பிடுகிறார்கள்.

"இந்த புதிய ரக கொரோனா வைரஸ் அதிவேகமாக அதிகரித்து வருகிறது. இது தான் அரசையும், எங்களையும், பெரும்பாலான விஞ்ஞானிகளையும் கவலையடையச் செய்கிறது" என்கிறார் பேராசிரியர் குப்தா.

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், Getty Images

இது எங்கிருந்து வந்தது?

இந்த புதிய ரக கொரோனா வைரஸ் வழக்கத்துக்கு மாறாக, அதிகம் மரபணு மாற்றமடைந்து இருக்கிறது.

கொரோனாவை தோற்கடிக்க முடியாத, பலவீனமான நோய் எதிர்ப்பு மண்டலத்தைக் கொண்டிருந்த, நோயாளியிடம் இருந்து, இந்த புதிய ரக கொரோனா வைரஸ் வெளிப்பட்டிருக்கலாம். அவரது உடல், கொரோனா வைரஸ் தன்னை மரபணு மாற்றம் செய்து கொண்டு வளரும் ஒரு இடமாக இருந்திருக்கலாம் என்பது தான் பொதுவான விளக்கமாக இருக்கிறது.

இந்த புதிய ரக கொரோனா வைரஸ் பாதிப்பு, நோயாளிகள் இறப்பதை அதிகரித்து இருக்கிறதா?

இதுவரை அப்படி எந்த ஒரு ஆதாரமும் இல்லை, ஆனால் இதைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

இருப்பினும், கொரோனா வைரஸ் நோய் பரவல் அதிகரித்தாலே, அது மருத்துவமனைகளுக்கு பிரச்னைகளை உருவாக்க போதுமானதாக இருக்கும்.

ஒருவேளை புதிய ரக கொரோனா வைரஸ் அதிக மக்களை பாதிக்கிறது என்றால், நிறைய நோயாளிகளுக்கு மருத்துவமனை தேவை என்று பொருள்.

கொரோனா தடுப்பு மருந்துகள் புதிய ரக கொரோனா வைரஸுக்கு எதிராக வேலை செய்யுமா?

கிட்டத்தட்ட வேலை செய்யும். குறைந்தபட்சம் இப்போதைக்காவது வேலை செய்யும்.

உலகின் மூன்று முன்னணி கொரோனா தடுப்பு மருந்துகளும், தற்போது இருக்கும் ஸ்பைக்குகளுக்கு எதிராக, நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்குகின்றன. எனவே தான் இந்த கேள்வி எழுகிறது.

Banner image reading 'more about coronavirus'
Banner

தடுப்பு மருந்துகள், வைரஸின் சில பகுதிகளைத் தாக்க, உடலின் நோய் எதிர்ப்பு சக்தி மண்டலத்துக்கு பயிற்சி அளிக்கிறது. எனவே, வைரஸ்களின் ஸ்பைக்குகள் மரபணு மாற்றமடைந்தாலும் கொரோனா தடுப்பு மருந்துகள் வேலை செய்யும்.

"தொடர்ந்து வைரஸ்களை மரபணு மாற்றமடையா விட்டால், நாம் வருத்தப்பட வேண்டி இருக்கும். தடுப்பு மருந்தில் இருந்து தப்பிக்கும் வகையில் இருக்கிறது கொரோன வைரஸ். அந்த வகையில் வைரஸ், தான் தப்பிக்கும் முயற்சியில் ஒரு சில அடிகளை முன்னெடுத்திருக்கிறது " என்கிறார் பேராசிரியர் குப்தா.

வைரஸ் மாற்றமடைந்தால், தடுப்பு மருந்துகளில் இருந்து தப்பித்துவிடும். தொடர்ந்து மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவார்கள்.

கொரோனா வைரஸ், மனிதர்களைக் கூடுதலாக பாதிக்க, தன்னை மாற்றிக் கொண்டே இருப்பதைத் தான், இந்த புதிய ரக வைரஸின் செயல்பாடு உணர்த்துகிறது.

"கொரோனா வைரஸ், மரபணு மாற்றம் மூலம் தடுப்பூசிகளில் இருந்து தப்பிக்க வாய்ப்பிருக்கிறது" என க்ளாஸ்கோவ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டேவிட் ராபர்ட்சன் கடந்த வெள்ளிக்கிழமை நடத்திய விளக்கக் கூட்டத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.

அப்படி நடந்தால், நாம் ஒரு ஃப்ளூவைப் போல, கொரோனா வைரஸைப் பார்க்க வேண்டி இருக்கும். ஃப்ளூவில் தடுப்பு மருந்துகளைத் தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அதிர்ஷ்டவசமாக, நம் தடுப்பூசிகளை மிக எளிதில் மேம்படுத்தலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :