பாஜக நோக்கித் தாவும் மம்தா கட்சி தலைவர்கள்: மேற்கு வங்கத்தில் பிரசாந்த் கிஷோர் ஆலோசனைகள் குடைச்சலானதா?

பட மூலாதாரம், ANI
மேற்கு வங்கத்தில் மம்தா பேனர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ் ஆகியவற்றில் இருந்து 10 எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் சேர்ந்துள்ளனர் என்கின்றன ஊடகச் செய்திகள்.
மேற்கு வங்கத்தின் மித்னாபூரில் நடந்த ஒரு கூட்டத்தில் இவர்கள் அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 7 எம்.எல்.ஏ.க்கள், ஒரு எம்.பி., மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த தலா ஒரு எம்.எல்.ஏ. ஆகியோர் பாஜகவில் இணைந்தனர்.
சமீப கால அரசியல் வரலாற்றில் நடந்த மிகப் பெரிய கட்சித் தாவல்களில் ஒன்று இது.
இந்தக் கட்சித் தாவல்களில் மிக மோசமான பாதிப்பை சந்தித்துள்ளது ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி. கட்சித் தாவிய எம்.எல்.ஏ.க்களில் அந்தக் கட்சியின் முக்கியத் தலைவர் சுபேந்து அதிகாரியும் ஒருவர். இவர் ஒரு காலத்தில் முதல்வர் மம்தா பேனர்ஜியின் நம்பிக்கைக்குரிய தலைவராக இருந்தவர்.
மேற்கு வங்கத்தை 30 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ச்சியாக ஆண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் ஏற்கெனவே மிகவும் பலவீனமாகிவிட்ட நிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு இப்போது அந்த மாநிலத்தின் அரசியல் வண்ணத்தில் பெரிய மாறுதலைக் கொண்டுவருமோ என்று அரசியல் விமர்சகர்கள் வலுத்த சந்தேகம் கொள்கிறார்கள்.
இன்னும் சிறிது காலத்தில் மம்தா பேனர்ஜி தனியாக இருப்பார் என்கிறார் அமித் ஷா. அடுத்த தேர்தலில் மேற்கு வங்கத்தில் 200 இடங்களை பாஜக பிடிக்கும் என்கிறார் அவர். இந்த கட்சித் தாவல்களால், தங்கள் கட்சிக்குப் பாதிப்பில்லை என்கிறது திரிணமூல் காங்கிரஸ்.
சுமார் 10 ஆண்டுகளாக மாநிலத்தில் ஆட்சியில் உள்ள மம்தா பேனர்ஜிக்கு என்ன ஆனது? அவரது கட்சியில் ஏன் இத்தனை தடுமாற்றம்?
காங்கிரஸில் ஏற்பட்ட உள்கட்சி சிக்கலில் அதில் இருந்து வெளியேறி தனிக் கட்சி அமைத்தவர் மம்தா. பிறகு மாநிலத்தில் ஆளுங்கட்சியாக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை கடும் அரசியல் மோதலுக்குப் பிறகு ஆட்சியை விட்டு அகற்றினார்.
கடந்த 2006 சட்டமன்றத் தேர்தலில் இருந்து திரிணமூல் என்றால் மம்தா. மம்தா என்றால் திரிணமூல் என்ற அளவுக்கு அந்தக் கட்சியோடு இரண்டறக் கலந்துவிட்டது அவரது அடையாளம் என்கிறார் கொல்கத்தாவில் பிபிசிக்காக எழுதும் செய்தியாளர் பிரபாகர் மணி திவாரி.

பட மூலாதாரம், Debajyoti Chakraborty/NurPhoto via Getty Images
திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்குள் மம்தா பேனர்ஜி எடுக்கும் முடிவுகளை எதிர்த்துக் கேள்வி கேட்பதற்கு விரல் உயர்த்தும் தைரியமுள்ள ஒருவர் கூட இல்லை என்கிறார் அவர். ஆனால், சுமார் 10 ஆண்டுகளாக கட்சி அதிகாரத்தில் இருந்த பிறகு, பலருக்கும் கட்சிக்குள் அதிருப்தியும், கசப்பும் எழுந்துவிட்டது.
அத்துடன், கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு பாஜக அந்த மாநிலத்தில் கையாளும் அதிரடி அரசியலும் மம்தாவின் கைகளை பலவீனப்படுத்திவிட்டன என்கிறார் பிரபாகர் மணி.
பிரசாந்த் கிஷோர் செய்தது உதவியா - உபத்திரவமா?
கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு தேர்தல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஆலோசனைகளை பெற்று வருகிறார் முதல்வர் மம்தா பேனர்ஜி.
இந்த பிரசாந்த் கிஷோரின் தேர்தல் ஆய்வு நிறுவனம்தான் தமிழ்நாட்டில் திமுக-வுக்கு தேர்தல் உத்திகளை வகுத்துத் தருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமது கட்டுரை ஒன்றில் பிரசாந்த் கிஷோர் ஆலோசனைகளால் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட தாக்கங்களை அலசுகிறார் பிரபாகர் மணி திவாரி.

பட மூலாதாரம், ANI
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பல தலைவர்களுக்கு கட்சி மீது அதிருப்தி ஏற்படவும், கட்சியை விட்டு விலகவும் பிரசாந்த் கிஷோர்தான் மூல காரணம். ஆனால், அவர் மீது மம்தாவின் நம்பிக்கை குறையவில்லை என்கிறார் அவர்.
பிரசாந்த் கிஷோர் மம்தாவுக்கு பல உத்திகளை வகுத்துத் தந்தார். அவற்றில் ஒன்று 'தீதி கே போலோ' (அக்காவிடம் சொல்லுங்கள்- என்று பொருள் இதற்கு) என்ற அரசுத் திட்டமாகும். மம்தா பேனர்ஜி தீதி (அக்கா) என்ற பெயரால் அறியப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திட்டத்தின் கீழ் பொது மக்கள் பிரச்சனைகளைப் பற்றி தொலைபேசி மூலம் புகார் தெரிவிக்கலாம்.
இது தவிர, பிரசாந்த் கிஷோர் ஆலோசனைப்படி அரசுத் திட்டங்களில் கையாடல் செய்வதாக அறியப்பட்ட தலைவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
அந்த தலைவர்களால்தான் கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுவதாக ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டது.
பிரசாந்த் அறிவுரைப்படி கட்சியின் மூத்த தலைவர்கள் ஓரம் கட்டப்பட்டு, ஊழல் கரை படியாத புதிய நபர்கள் கட்சிப் பதவிகளுக்கு கொண்டுவரப்பட்டனர்.

பட மூலாதாரம், Sanjay Das/BBC
ஆனால், இவ்வளவையும் மீறி கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டிருப்பதைப் பார்க்கும்போது அந்தக் கட்சியில் எல்லாம் நல்லபடியாக இல்லை என்பது புலனாகிறது என்கிறார் பிரபாகர் மணி திவாரி.
அரசியல், நிர்வாகம் என்ற இரண்டு முனைகளிலும் பாஜகவின் சவாலை எதிர்கொள்ளும் எந்தக் கட்சிக்கும் நிலைமை சாதகமாக இல்லை.
மம்தா ஒரே நேரத்தில் பல முனைகளில் போராடவேண்டியுள்ளது.
ஒரு புறம், பாஜக தனது முழு பலத்தையும் இறக்கி வங்காளத்தில் வேலை செய்கிறது. அரை டஜன் மத்தியத் தலைவர்கள், அமைச்சர்கள் களத்தில் இறங்கி எப்படியாவது வரும் தேர்தலில் வங்காளத்தில் வெல்லவேண்டும் என்ற வேகத்தைக் காட்டி வருகிறார்கள்.
பாஜகவின் வலிமையையும், வளங்களையும் அவர் எதிர்கொள்ளவேண்டும்.
மறுபுறம் நிர்வாக ரீதியாகவும் மம்தாவுக்கு பல தலைவலிகள் வருகின்றன. அண்மையில் மே. வங்காளத்துக்கு சென்ற பாஜக தலைவர் ஜே.பி.நட்டா வாகன வரிசை தாக்கப்பட்ட விவகாரத்தில் மாநில தலைமைச் செயலாளர், போலீஸ் தலைமை இயக்குநர் ஆகியோருக்கு மத்திய அரசு அழைப்பானை விடுத்தது.
மூன்று மேற்கு வங்க ஐபிஎஸ் அதிகாரிகளை பலவந்தமாக மத்தியப் பணிக்கு அழைத்துள்ளது மத்திய அரசு. சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பல விஷயங்களில் ஆளுநர் ஜகதீப் தன்காரும் அரசுடன் மோதி வருகிறார்.
அது மட்டுமல்லாமல், மம்தாவுக்கு மிகவும் நம்பிக்கைக்கு உரியவர்களாக இருந்த பல தலைவர்கள் கட்சித் தாவி வருவதுதான் அவருக்கு மிகப் பெரிய தாக்குதலாக இருக்கிறது.
திரிணமூல் கட்சியை வடிவமைத்த சிற்பிகளில் ஒருவராக கருதப்படும் முகுல் ராய் முதலில் பாஜகவுக்கு சென்றார். அவர்தான் திரிணமூல் கட்சியை கிராமப்புறங்களில் வலுப்படுத்தியவர்.
சுபேந்து அதிகாரி போன்ற மூத்த தலைவர்கள் பெரிய எண்ணிக்கையில் பாஜகவில் சேர்ந்துள்ள நிலையில், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்த மம்தா பேனர்ஜி, இதைக் கண்டு கலங்காமல் உறுதியான முகத்தோடு கூறினார், "அவர்கள் போனால் போகட்டும். சாமானிய மக்கள்தான் திரிணமூலின் பலம். தலைவர்கள் அல்ல" என்றார் அவர்.

பட மூலாதாரம், ANI
வெளியேறும் தலைவர்களுக்கு கட்சியின் கதவுகள் திறந்தே இருக்கின்றன என்றார் அவர்.
ஆனால், மேற்கு வங்க அரசியலில் கட்சித் தாவலை ஊக்குவித்தவர் மம்தா பேனர்ஜிதான். இப்போது அந்த பாரம்பரியம் அவரைத் திருப்பித் தாக்குகிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்களும், அவருக்கு எதிராக இருக்கும் கட்சியினரும்.
தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் அதிமுக-வின் மூத்த தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறியபோது அவர்கள் உதிர்ந்த முடிக்கு சமம் என்றார் அந்தக் கட்சியின் அப்போதைய தலைவர் ஜெ.ஜெயலலிதா. ஆவேசம், கேள்விக்கப்பாற்பட்ட ஒற்றைத் தலைமை என்று பல விஷயங்களில் ஜெயலலிதாவை ஒத்திருப்பவர் மம்தா. ஆனால், ஜெயலலிதா ஆடம்பரத்துக்குப் பெயர் பெற்றவர். மம்தா அவரது எளிமையான தோற்றத்தால் அறியப்படுகிறவர்.
அத்துடன் பாஜகவைப் போல சகல வலிமையும் மிக்க, ஆவேசமான எதிர்க் கட்சியை ஜெயலலிதா எதிர்கொள்ளவில்லை என்பதும் கருத்தில் கொள்ளத்தக்கது.
எல்லாவற்றையும் கடந்து 'அம்மா' என்று அழைக்கப்பட்டவரான ஜெயலலிதா தமிழ்நாட்டு அரசியலில் மாறி மாறி வெற்றி பெற்றே வந்தார். ஊழல் வழக்கு, தண்டனைகூட அவரது தேர்தல் வெற்றியைத் தடுக்க முடியவில்லை. தமிழ்நாட்டில் 'அம்மா' நிகழ்த்தியதை மேற்கு வங்கத்தில் 'அக்கா' நிகழ்த்துவாரா அல்லது பாஜகவின் அதிரடியில் வீழ்வாரா என்பது காலத்தின் கையில்.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








