மேற்கு வங்க விவசாயி வீட்டில் பாஜகவினருடன் உணவு உண்ட அமித் ஷா

Amit shah

பட மூலாதாரம், Amit shah twitter page

இந்தியாவில் உள்ள சில முக்கிய நாளிதழ்களிலும் அவற்றின் இணையதளங்களிலும் வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

விவசாயி வீட்டில் உணவு உண்ட அமித் ஷா

இந்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாய அமைப்புகள் டெல்லி மற்றும் பிற மாநிலங்களில் போராட்டம் நடத்திவரும் சூழலில், மேற்கு வங்கம் சென்ற பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் இந்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, விவசாயி ஒருவர் வீட்டில் உணவு உட்கொண்டார்.

விவசாயிகள் உடனான பாஜகவின் உறவை பலப்படுத்தும் உத்தியாகப் பார்க்கப்படும் இம்முயற்சி குறித்து பல இந்திய ஊடகங்களில் செய்தியாக வெளியாகியுள்ளது.

இரண்டு நாட்கள் பயணமாக மேற்கு வங்கம் சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அங்கு விவசாயி ஒருவரின் வீட்டில் மதிய உணவு சாப்பிட்டதாக தினமணியில் செய்தி வெளியாகி இருக்கிறது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு நாட்கள் பயணமாக மேற்கு வங்கத்திற்கு நேற்று சென்றார். கொல்கத்தா சென்ற அவருக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் கொல்கத்தாவின் வடக்குப் பகுதியில் உள்ள ராமகிருஷ்ணா ஆசிரமத்தில் வழிபாடு நடத்தியதாகக் குறிப்பிடுகிறது தினமணி.

அதைத் தொடர்ந்து சுவாமி விவேகானந்தர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து மேதினிப்பூர் பகுதியில் பேரணியில் பங்கேற்க சென்ற அமித் ஷா, வழியில் பாலிஜுரி கிராமத்தில் உள்ள விவசாயி சனதன் சிங் வீட்டில் மதிய உணவு சாப்பிட்டார்.

அவருடன் பாஜக தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜயவர்கியா, பாஜக தேசிய துணைத்தலைவர் முகுல் ராய் மற்றும் மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் ஆகியோரும் மதிய உணவு சாப்பிட்டனர் என தினமணியில் கூறப்பட்டிருக்கிறது.

கொரோனா சிகிச்சைக்கு சென்ற கைதி தப்பி ஓட்டம்

கொரோனா சிகிச்சைக்கு சென்ற இடத்தில் கழிவறை வழியாக தப்பிய கைதி

பட மூலாதாரம், Getty Images

மகாராஷ்டிர மாநிலம் தானேவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 26 வயது விசாரணைக் கைதி ஒருவர், கழிவறையில் காற்றை வெளியேற்றும் விசிறியை நீக்கி தப்பித்துவிட்டதாக, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸில் செய்தி வெளியாகி இருக்கிறது.

கடந்த டிசம்பர் 08-ம் தேதி, மொபைல் போன்களைத் திருடியதாக, 26 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டார். தானே மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்த இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.எனவே, தானே சிவில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்தக் கைதி சிகிச்சை பெற்று வந்த வார்டுக்கு வெளியே காவலர்கள் இருந்தார்கள். கைதி சிகிச்சை பெற்றுவந்த கட்டிலுடன் கை விலங்கு மூலம் இணைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Banner image reading 'more about coronavirus'
Banner

வெள்ளிக்கிழமை அதிகாலை மூன்று மணிக்கு சோதனை செய்த போது, அந்தக் கைதியைக் காணவில்லை. ஆனால் கை விலங்கு மட்டும் கட்டிலில் இருந்தது. கழிவறையில் தேடிய போது, கழிவறையில் இருந்த காற்றை வெளியேற்றும் விசிறியை நீக்கிவிட்டு, அந்தக் கைதி தப்பித்து இருந்தது தெரிய வந்தது.

தற்போது அந்தக் கைதி மீது இந்திய தண்டனைச் சட்டம் 224-ன் கீழ் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள். அந்தக் கைதியைத் தேடும் பணிகளையும் முடுக்கிவிட்டிருக்கிறது காவல் துறை.

'வாழைப்பழ காமெடி' - எடப்பாடி பழனிசாமியை விமர்சிக்கும் ஸ்டாலின்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021: திமுகவின் ஸ்டாலின், அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி அரசியல் போட்டி

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :