கொரோனா வைரஸ்: துருக்கி மருத்துவமனையில் ஆக்சிஜன் வென்டிலேட்டர் வெடித்து 9 நோயாளிகள் பலி

சாங்கோ பல்கலைக்கழக மருத்துவமனை.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சாங்கோ பல்கலைக்கழக மருத்துவமனை.

துருக்கி மருத்துவமனை ஒன்றில் ஆக்சிஜன் வென்டிலேட்டர் வெடித்ததில் 9 கொரோனா வைரஸ் நோயாளிகள் கொல்லப்பட்டனர் என்கிறார்கள் அதிகாரிகள்.

கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவந்த அந்த தனியார் மருத்துவமனை துருக்கியின் தென் பகுதியில் உள்ளது.

சாங்கோ யுனிவர்சிட்டி ஹாஸ்பிடல் என்ற அந்த மருத்துவமனை, காஜியான்டெப் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இந்த வெடிப்பால், அந்த மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் தீப்பற்றிக்கொண்டது.

உயிரிழந்தவர்களில் குறைந்தது ஒருவர், வேறொரு மருத்துவமனைக்கு மாற்றப்படும்போது இறந்தார்.

துருக்கியில் இதுவரை சுமார் 20 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அவர்களில், 17,610 இறந்திருப்பதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத் தரவுகள் கூறுகின்றன.

இந்த வெடிப்பால் ஏற்பட்ட உயிரிழப்புகள் தவிர, அதனால் ஏற்பட்ட தீவிபத்தால் யாருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை. இந்த விபத்து சனிக்கிழமை அதிகாலை நடந்தது. விரைவிலேயே தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

56 வயது முதல் 85 வயது வரையில் பல வயதுள்ளவர்கள் இறந்துள்ளதாக மருத்துவமனையின் செய்திக் குறிப்பு கூறுகிறது.

வெடிப்புக்கான காரணத்தைக் கண்டறிவதற்கான புலனாய்வு நடந்துவருகிறது.

விபத்து நடந்த வார்டில் இருந்த பிற நோயாளிகள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாக காஜியான்டெப் ஆளுநர் அலுவலகம் தெரிவிக்கிறது.

இறந்தவர்களுக்கு அந்த அறிக்கையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவானின் செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் காலின், டிவிட்டரில் இது தொடர்பாக பகிர்ந்த செய்தியில், "காயமடைந்தவர்கள், விரைவில் குணமடையட்டும். விரைவில் நலம் காஜியான்டெப் நலம் பெறுக" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

line
line

கடந்த சில மாதங்களில் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவந்த மருத்துவமனையில் தீப்பிடித்து 9 பேரும், விஜயவாடாவில் கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேரும் உயிரிழந்தனர்.

சர்வதேச அளவில் கடந்த மாதம் ரொமானியாவில் மருத்துவனை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 கொரோனா நோயாளிகள் கொல்லப்பட்டனர். அப்போதும் மருத்துவக் கருவி ஒன்றில் தீப்பற்றியதாக தகவல்கள் தெரிவித்தன.

அக்டோபர் மாதம் ரஷ்யாவில் உள்ள செல்யாபின்ஸ்க் பிராந்தியத்தில் செயல்பட்டுவந்த தாற்காலிக கொரோனா வைரஸ் மருத்துவமனையில் இருந்த ஆக்சிஜன் பூத்தில் வெடிப்பு ஏற்பட்டு அங்கிருந்த 150 நோயாளிகள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டனர் என்று ரஷ்ய அவசர சேவை அமைச்சகம் தெரிவித்தது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :