'கொரோனா கர்ப்பிணிகளுக்கு பிறந்த குழந்தைகள் உடலில் எதிர்ப்பான்கள்' - சிங்கப்பூர் ஆய்வில் கண்டுபிடிப்பு

பட மூலாதாரம், Getty Images
கர்ப்பிணிகள், மற்றவர்களை விட கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு, கொரோனா வைரஸை எதிர்க்கும் ஆன்டிபாடிக்கள் எனப்படும் எதிர்ப்பான்கள் இருப்பதாகவும் சிங்கப்பூர் ஆராய்ச்சி ஒன்றில் தெரிய வந்துள்ளது.
16 பெண்களிடம் நடத்திய சிறிய ஆய்வில், தாயிடம் இருந்து குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் பரவவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து இன்னும் உலக அளவில் முழுமையாக புரிந்து கொள்ளப்படவில்லை.
கர்ப்பிணிகள், சுவாசப் பிரச்னைகளால் மோசமாக பாதிக்கப்படலாம் என்கிறது உலக சுகாதார அமைப்பு. அத்துடன் கர்ப்பமாக இருக்கும் போதோ பேறு காலத்தின் போதோ, தாயிடம் இருந்து குழந்தைக்கு கொரோனா வைரஸ் பரவுமா என்பது தெரியாமல் இருந்தது.
"இந்த ஆய்வின் முடிவுகள் ஊக்கப்படுத்துவதாக இருக்கின்றன. இந்த முடிவுகள், கர்ப்பிணிகளுக்கு கொரோனா பரவுவது சாதாரணமாக எல்லா மனிதர்களுக்கு பரவுவது போலவே பரவுகிறது என்பதை இது விளக்குகிறது. கர்ப்பிணிகளுக்கு கொரோனாவின் தீவிரத் தன்மையும் எல்லா மனிதர்களையும் பாதிப்பது போலத் தான் பாதிக்கிறது என்பதையும் விளக்கி இருக்கிறது" என சிங்கப்பூரின் மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் ஆய்வு நெட்வொர்க்யின் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்த ஆய்வில் கலந்து கொண்டவர்களுக்கு மிதமான கொரோனா பாதிப்பு இருந்தது. வயதானவர்கள் மற்றும் அதிக உடல் எடை கொண்டவர்களுக்குத் தான் கொரொனா வைரஸின் தாக்கம் அதிகமாக இருந்தது என்கிறது இந்த ஆய்வுகள்.
இந்த ஆய்வில் கலந்து கொண்ட பெண்கள் யாரும் மரணிக்கவில்லை. எல்லோருமே பூரணமாக குணமடைந்துவிட்டார்கள். இரண்டு பெண்கள் தங்கள் குழந்தைகளை இழந்தார்கள். அதில் ஒருவரின் குழந்தை இறப்பிற்கு கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக இருக்கக்கூடும் என ராய்டர்ஸில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்த ஆய்வு வெளியான போது, ஐந்து பெண்கள் தங்கள் குழந்தைகளைப் பெற்றெடுத்து இருந்தார்கள். ஐந்து குழந்தைகளுமே கொரோனா வைரஸால் பாதிக்கப்படவில்லை. இந்த ஐந்து குழந்தைகளின் உடலில் கொரோனா வைரஸை எதிர்க்கும் ஆன்டிபாடிக்கள் எனப்படும் எதிர்பான்கள் இருந்தது. இந்த ஆன்டிபாடிக்கள் எந்த அளவுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதில் இருந்து பாதுகாப்பைக் கொடுக்கும் எனத் தெரியவில்லை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
மேலும், இந்த குழந்தைகள் வளர வளர, அவர்களின் ஆன்டிபாடிக்கள் குறைகிறதா என்பதையும் கண்காணிக்க வேண்டும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
கொரோனா தொற்று ஏற்பட்ட தாய்மார்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்கு, ஆன்டிபாடிக்களின் எண்ணிக்கை வேறுபடுகின்றன.
பேறு காலத்துக்கு முன், மிக சமீபமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்கு, ஆன்டிபாடிக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
"கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்கள் பெற்றேடுத்த குழந்தைகளுக்கு, கொரோனா வைரஸ் ஆன்டிபாடிக்கள் இருக்கின்றன என்பதையும், காலப்போக்கில் அந்த குழந்தைகளின் உடலில் இருக்கும் ஆன்டிபாடிகளின் எண்ணிக்கை குறைந்து விடுகிறது" என கடந்த அக்டோபர் மாதத்தில் சீன மருத்துவர்கள் Emerging Infectious Diseases Journal என்ற மருத்துவ இதழில் குறிப்பிட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.
பிற செய்திகள்
- தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தின் கதை என்ன?
- விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக திமுக, கூட்டணிக் கட்சிகள் உண்ணாவிரதம் - காட்சிகள்
- அமெரிக்காவில் சைபர் தாக்குதல்: ஆபத்தில் முக்கிய அரசுத் துறைகள், முகமைகள்
- எச்.ராஜா நேர்காணல்: "தேர்தலுக்கு பிறகு பாஜக தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கும்"
- பாகிஸ்தானில் ரசாயன முறை ஆண்மை நீக்க சட்டம்: பாலியல் குற்றங்களை குறைக்குமா?
- நித்தியானந்தாவின் புதிய தகவல்: இங்குதான் இருக்கிறதா கைலாசா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












