நித்தியானந்தாவின் கைலாசா அழைப்பு: "இலவச விசா, சார்ட்டர் விமான பயணம்"

நித்யானந்தா

பட மூலாதாரம், ParamahamsaNithyananda FB

தமிழகத்தில் பிறந்து கர்நாடகாவில் ஆசிரமம் அமைத்து அதன் கிளைகளை பல நகரங்களில் விரிவுபடுத்திய சாமியார் என தன்னை அழைத்துக் கொள்ளும் நித்தியானந்தா, தான் உருவாக்கியதாக கூறப்படும் கைலாசா வருவதற்கான விசாவுக்கு மக்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறியிருக்கிறார்.

இந்தியாவில் நில அபகரிப்பு, சொத்துகள் மோசடி, இளம் வயதினரை சன்னியாசம் செய்ய நிர்பந்தித்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் விசாரிக்கப்பட்டு வந்தார் நித்தியானந்தா. தான் வசிப்பதாகக் கூறும் கைலாசாவில் இருந்து அதன் சமூக ஊடக பக்கம், யூட்யூப் வாயிலாக சத்சங்கம் எனப்பெயரில் அன்றாடம் ஆன்மிக சொற்பொழிவை வழங்கி வருகிறார்.

அவரது சத்சங்க நிகழ்வு எந்த இடத்தில் நடக்கிறது என்பதை உறுதிப்படுத்த முடியாத அளவுக்கு அந்த காட்சிகள் நேரலை பின்னூட்ட வலைபின்னல் மூலம் ஒளிபரப்பு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் வழக்குகளில் தேடப்பட்டு வருவதாக கூறப்பட்ட நித்தியானந்தா, நேபாளத்திலோ இமயமலை பகுதியிலோ இருக்கலாம் என்று கூறப்பட்டது. அங்கிருந்தபடி அவர் கைலாசா என்ற தானே அறிவித்துக் கொண்ட இடத்தில் இருந்து சொற்பொழிவை நடத்துவதாக பேசப்பட்டது.

நித்தியானந்தா கடந்த ஆகஸ்ட் மாதம் தனது கைலாசாவின் சார்பில் ரிசர்வ் வங்கியொன்றை தொடங்கியிருப்பதாகக் கூறி கைலாசாவுக்கான கரன்சியையும் கடவுச்சீட்டையும் அறிமுகப்படுத்தினார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், நித்யானந்தாவின் இருப்பிடம் தொடர்பான சர்ச்சை வலுத்தபோது, அவரது பெயரிலான கடவுச்சீட்டு ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை விளக்கம் அளித்தது.

நித்யானந்தா

பட மூலாதாரம், ParamahamsaNithyananda FB

இந்தியாவில் சில மாநில காவல்துறையால் தலைமறைவாகி விட்டதாக கருதப்படும் நித்தியானந்தாவின் இருப்பிடம் குறித்து கண்டறிய உதவுமாறு தங்களை புலனாய்வுத்துறைகள் அணுகவில்லை என்றும் வெளியுறவுத்துறை கூறியது.

அவர் எக்வடோர் நாட்டில் உள்ள ஒரு தீவை வாங்கியதாக சமூக ஊடகங்களில் பேசப்பட்டாலும் அதை அந்த நாட்டு அரசு உறுதிப்படுத்தவில்லை.

இந்த நேரத்தில்தான் நித்தியானந்தாவின் கைலாசா தொடர்பான இணையதள பக்கத்தை அவர் வெளியிட்டார்.

இந்த நிலையில், டிசம்பர் 16ஆம் தேதி தனது சத்சங்க நிகழ்வின்போது கைலாசாவுக்கு 3 நாட்கள் விசாவில் வர விண்ணப்பிக்கலாம் என்று கூறி அதற்கு எப்படி வர வேண்டும் என்ற விவரங்களை வெளியிட்டிருக்கிறார் நித்தியானந்தா.

அந்த சொற்பொழிவின்போது, "இன்று முதல் கைலாசா விசாவுக்கு விண்ணப்பிக்கத் தொடங்கலாம். ஆஸ்திரேலியாவுக்கு நீங்கள் வர வேண்டும். அங்கிருந்து கைலாசாவுக்கு வர கைலாசாவுக்கு சொந்தமான தனியார் விமான சேவை உள்ளது. அதன் மூலமாக நீங்கள் அழைத்து வரப்படுவீர்கள். தயவு செய்து 3 நாட்களுக்கு மேல் கைலாசாவுக்கு விசா கோரி விண்ணப்பிக்காதீர்கள். அந்த மூன்று நாட்களில் ஒரு நாள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படும். விசா கோரி மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம். கைலாசாவுக்கு வருவதென்றால் ஆஸ்திரேலியாவுக்கு வர ஒரு வார விசாவை வாங்குங்கள். ஆஸ்திரேலியா வந்த பிறகு தனியார் விமான சேவையில் நீங்கள் கைலாசாவுக்கு வரலாம். அந்த விமான சேவையின் பெயர் கருடா சேவை. ஒருவருக்கு தலா ஒரு தரிசனம் மட்டுமே வழங்கப்படும். அது 10 நிமிடங்களில் இருந்து ஒரு மணி நேரம்வரை இருக்கும்."

"அதற்கு மேல் தருமாறு அழுத்தம் கொடுக்காதீர்கள். இங்கு வருவதற்கு எவ்வித பொருளாதார தேவையும் இல்லை. ஆஸ்திரேலியாவரை மட்டுமே நீங்கள் சொந்த செலவில் வர வேண்டும். மற்றபடி ஆஸ்திரேலியாவில் இருந்து கைலாசாவுக்கு வரும் விமான செலவு, கைலாசாவில் தங்குமிடம், உணவுச்செலவு எதுவும் கிடையாது. எல்லாமே இலவசம். ஒவ்வொரு நாளும் தலா 10 முதல் 20 பேர் வரை நான் பார்ப்பேன்."

நித்யானந்தா

பட மூலாதாரம், ParamahamsaNithyananda FB

"இங்கு வருவோர், எல்லோரையும் நீங்கள் பரமசிவனாக பார்க்க வேண்டும். பரம சிவனுக்கு எவ்வளவு பொறுப்பு உள்ளது போன்றவற்றை மட்டுமே இந்த முழு ஆன்மிக உலகில் நீங்கள் காண வேண்டும். அதற்காகவே இந்த ஏற்பாடு" என்று நித்தியானந்தா அந்த காணொளியில் பேசியிருக்கிறார்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

விலகாத புதிர்

நித்தியானந்தாவின் பிரசங்கத்தில் தெரிவித்த தகவலின்படி பார்த்தால், அவர் குறிப்பிடும் கைலாசாவுக்கு வர வேண்டுமானால், ஆஸ்திரேலியாவுக்கு வர வேண்டும் என அவர் குறிப்பிடுகிறார்.

அங்கிருந்து கைலாசா வருவதற்குத்தான் விசா கோரி விண்ணப்பியுங்கள் என்று அவர் குறிப்பிடுகிறார். நித்தியானந்தாவை பொறுத்தவரை நுழைவுச்சீட்டை அவர் விசா ஆக கருதலாம். ஆனால், அவர் குறிப்பிடும் தனி நாடு என்பது சர்வதேச அமைப்புகளால் அங்கீகரிக்கப்படவில்லை என்பதை அறிய முடிகிறது.

நித்யானந்தா

பட மூலாதாரம், Getty Images

அவர் குறிப்பிடும் கைலாசா, ஆஸ்திரேலியாவுக்கு அருகே உள்ள தீவாகவோ அந்த நாட்டுக்குட்பட்ட தீவாகவோ இருக்கலாம். ஆனால், தனது சத்சங்கத்தில் ஆஸ்திரேலியாவின் எந்த விமான நிலையத்துக்கு வர வேண்டும், அங்கிருந்து எவ்வளவு மணி நேர பயண தூரத்தில் கைலாசா உள்ளது போன்ற விவரங்களை நித்தியானந்தா வெளியிடவில்லை. அவர் குறிப்பிடும் விசா அல்லது நுழைவு அனுமதி என்பது ஒரு தீவுக்குள் நுழையும் அனுமதிச்சீட்டு போல வேறு ஏதேவொரு நாட்டால் கருதப்படலாம். அதே சமயம், விசா கோரும் நபர்களின் விண்ணப்பங்கள் எந்த அடிப்படையில் கைலாசாவுக்கு வர தகுதி பெறும் என்பதையும் நித்யானந்தா தெளிவுபடுத்தவில்லை.

இந்தியாவில் இருந்தபோது அவர் நடத்தி வந்த பிடதி ஆசிரமம் பல்வேறு மர்மங்கள் நிறைந்ததாகவே பேசப்பட்டது. இப்போது வெளிநாட்டில் ஒரு தனித்தீவை வாங்கி அதை தனி நாடாக அறிவித்துக் கொண்டுள்ளபோதும் நித்தியானந்தாவின் பின்புலம் மர்மமாகவே தொடர்கிறது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :