கொரோனா வைரஸ் தடுப்பூசி: மாடர்னா கோவிட்-19 தடுப்பு மருந்துக்கு அமெரிக்கா ஒப்புதல்

பட மூலாதாரம், Moderna
மாடர்னா கொரோனா வைரஸ் தடுப்பூசியின் பயன்பாட்டுக்கு அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் அமெரிக்க அரசின் ஒப்புதலை பெறும் இரண்டாவது கோவிட்-19 தடுப்பு மருந்தாகிறது மாடர்னா.
மாடர்னா தடுப்பு மருந்து ஒப்புதலைப் பெற்று உள்ளதால் மேலும் பல கோடி அமெரிக்க மக்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி பெறுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
தற்போது விநியோகிக்கப்படும் ஃபைசர் / பயோஎன்டெக் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்.டி.ஏ) ஒப்புதல் அளித்த ஒரு வாரத்திற்கு பின்பு தற்போது மாடர்னா தடுப்பு மருந்தும் அந்த ஒப்புதலை பெற்றுள்ளது.
மாடர்னா தடுப்பு மருந்தின் 20 கோடி டோஸ்களை வாங்க அமெரிக்க அரசு ஒப்புக்கொண்டுள்ளது. அவற்றில் சுமார் 60 லட்சம் டோஸ்கள் தற்போது விநியோகத்துக்கு தயாராக இருப்பதாக கருதப்படுகிறது.
மாடர்னா, ஃபைசர் / பயோஎன்டெக் தடுப்பூசிகள் - ஒற்றுமை, வேறுபாடு என்ன?
மாடர்னா, ஃபைசர் / பயோஎன்டெக் ஆகிய இரு தடுப்பூசிகளுமே RNA - வைரஸ் ஜெனிடிக் கோட் வகையைச் சேர்ந்தவை.
mRNA தடுப்பு மருந்து என்று வகைப்படுத்தப்பட்டுள்ள இந்தத் தடுப்பூசிகள் கொரோனா வைரஸின் மரபணுக் குறியீட்டின் மிகமிகச் சிறு பகுதியைப் பயன்படுத்தி கோவிட்-19 தொற்றுக்கு எதிராக எவ்வாறு போரிட வேண்டும் என்றும், இந்தத் தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பு ஆற்றலை எவ்வாறு வலுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் உடலுக்கு கற்பிக்கும்.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ் : இதுவே கடைசி கொள்ளை நோய் அல்ல
- கொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன?

மாடர்னா, ஃபைசர் / பயோஎன்டெக் ஆகிய இரு தடுப்பூசிகளும் இரு டோஸ்கள் உடலில் செலுத்தப்பட வேண்டும்.
ஃபைசர் / பயோஎன்டெக் தடுப்பூசியின் இரு டோஸ்களுக்கு இடையே 21 நாள் இடைவெளியும், மாடர்னாவின் இரு டோஸ்கள் இடையே நான்கு வார கால (28 நாட்கள்) இடைவெளியும் இருக்க வேண்டும்.
மாடர்னா தடுப்பு மருந்து உடலில் செலுத்தபட்ட 95% பேருக்கு பலனளித்துள்ளது என்றும் ஃபைசர் / பயோஎன்டெக் தடுப்பூசி 90% பேருக்கு பலனளித்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Moderna
ஃபைசர் / பயோஎன்டெக் தடுப்பூசி -75 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் சேமிக்கப்பட வேண்டும்; மாடர்னா மருந்தை -20 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் ஆறு மாதங்கள் வரை சேமித்து வைக்க முடியும்.
மாடர்னா அமெரிக்காவின் மாசச்சூசெட்ஸ் மாகாணத்தில் இருந்து இயங்குகிறது. ஒப்புதல் பெற்றபின் பெரும்பாலான தடுப்பு மருந்து இங்குதான் உற்பத்தி செய்யப்படும்.
ஃபைசர் / பயோஎன்டெக் தடுப்பூசி அமெரிக்கா மட்டுமல்லாது ஜெர்மனி, பெல்ஜியம் என உலகின் பல நாடுகளிலும் உற்பத்தி செய்யப்படுகிறது.
ஹெர்ட் இம்யூனிட்டி எப்படி சாத்தியம்?
ஏப்ரல் மாதத்துக்குள் அமெரிக்க அரசின் தடுப்பூசி வழங்கும் திட்டம் குறைந்தபட்சம் ஐந்து கோடி மக்களைச் சென்றடைய வேண்டும் என்று அந்நாட்டு அரசு இலக்கு வைத்துள்ளது.
ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ள ஃபைசர் / பயோஎன்டெக் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து மக்களுக்கு வழங்கப்படுவது திங்களன்று (டிசம்பர் 14) தொடங்கியது.

அமெரிக்க மக்கள் தொகை 'ஹெர்ட் இம்யூனிட்டி' எனப்படும் சமூக நோய் எதிர்ப்பு கூட்டுத் திறனை பெற வேண்டுமானால் குறைந்தபட்சம் 70 சதவிகிதம் அல்லது 80 சதவிகிதம் பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட வேண்டுமென்று அமெரிக்க ஒன்றிய அரசின் தடுப்பூசி வழங்கும் திட்டமான ஆபரேஷன் வார்ப் ஸ்பீட்-இன் தலைமை அறிவியலாளர் மான்செஃப் ஸ்லாவி தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு, மரணத்தில் அமெரிக்கா முதலிடம்
கோவிட்-19 தொற்றால் உலகிலேயே பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையிலும் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கையிலும் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
இதுவரை கோவிட்-19 தொற்றின் காரணமாக குறைந்தபட்சம் 31 லட்சம் பேர் அமெரிக்காவில் உயிரிழந்துள்ளனர்; 1,72,69,000 பேருக்கும் மேலானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன.
18 மற்றும் அதற்கு அதிக வயதானவர்களுக்கு மாடர்னா தடுப்பு மருந்தால் உண்டாகும் அபாயங்களைவிட நன்மைகளே அதிகம் என்று உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அமைப்பின் ஆலோசனைக் குழு ஒன்று கடந்த வியாழனன்று 20 - 0 என்ற கணக்கில் வாக்களித்தது. ஆலோசனைக் குழுவின் ஓர் உறுப்பினர் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
அதன்பின்பு வெள்ளியன்று இந்த தடுப்பு மருந்துக்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மாடர்னா கொரோனா வைரஸ் தடுப்பூசி பாதுகாப்பானது என்றும் 94 சதவிகிதம் திறன் மிக்கது என்றும் இந்த வார தொடக்கத்தில் உணவு மற்றும் மருந்து நிர்வாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
மாடர்னாவுக்கு பெருவாரியாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்றும், இதன் விநியோகம் உடனடியாகத் தொடங்கப்படும் என்று மாடர்னா தடுப்பு மருந்தின் ஒப்புதல் குறித்த அலுவல்பூர்வ அறிவிப்பு வெளியாவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












