ரூ. 170 கோடி ஒப்பந்ததாரருக்கு பிக்பாஸ் யார்? - கமல்ஹாசன் கேள்வி

கமல்ஹாசன்

பட மூலாதாரம், Getty Images

(பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம். இன்றைய நாளில் நடந்த முக்கிய நிகழ்வுகள் சிலவற்றின் சுருக்கத்தை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.)

பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றியும் அதை தொகுத்து வழங்கும் கமல்ஹாசன் பற்றியும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்திருந்த நிலையில், தற்போது அதே பிக்பாஸ் பெயரை குறிப்பிட்டு, தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒப்பந்ததாரர் வீட்டில் நடந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 170 கோடி பற்றிய கேள்வியை எழுப்பியிருக்கிறார் நடிகர் கமல்ஹாசன்.

இந்த ட்விட்டர் பதிவில் #நான்_கேட்பேன் என்ற ஹேஷ்டேக்கை கமல் குறிப்பிட்டிருக்கிறார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

இதேவேளை கமல்ஹாசன் குறிப்பிட்ட "நான் கேட்பேன்" ஹேஷ்டேக்கை குறிப்பிட்டு ட்விட்டர் பயனர்கள் சிலர், அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியபோது ஜிடிபி, டாஸ்மாக், தமிழக கலாசாரம் உள்ளிட்டவை தொடர்பாக பேசிய காட்சிகளை பகிர்ந்து வருகிறார்கள்.

ஒப்பந்ததாரரை கமல் குறிப்பிடுவது ஏன்?

2018ஆம் ஆண்டு ஜூலை மாதம், தமிழகத்தில் நெடுஞ்சாலைத்துறையின் ஒட்டுமொத்த ஒப்பந்ததாரராக கருதப்படும் செய்யத்துரை என்பவருக்கு சொந்தமான வீடு உள்பட 30க்கும் அதிகமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார்கள்.

அந்த சோதனையின்போது ரூ. 170 கோடி ரொக்கம், 105 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பாலங்கள், நெடுஞ்சாலை கட்டுமான ஒப்பந்தப் பணிகளை செய்துவரும் எஸ்பிகே நிறுவனம் வருவாய் கணக்கை குறைத்துக் காட்டி, விதிமீறல்களில் ஈடுபடுவதாக புகார் எழுந்ததால் சென்னை, மதுரை, அருப்புக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் உள்ள எஸ்பிகே குழும அலுவலகங்கள், உரிமையாளர் செய்யாதுரை, நிர்வாகிகள், பங்குதாரர்கள், குடும்பத்தினர், நண்பர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.

அந்த விவகாரத்தையே நடிகர் கமல்ஹாசன் தற்போது தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளதாக அறிய முடிகிறது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டியை சேர்ந்தவர் செய்யாத்துரை (60). அரசு ஒப்பந்ததாரரான இவருக்கு கருப்பசாமி, ஈஸ்வரன், நாகராஜ், பாலசுப்பிரமணியன் ஆகிய 4 மகன்கள் உள்ளனர்.

செய்யாத்துரை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறைகளில் நடைபெறும் பல்வேறு சாலைப்பணிகள், கட்டிட கட்டுமான பணிகள் போன்றவற்றை தமிழகம் முழுவதும் செய்து வருகிறார்.

தற்போது மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து கப்பலூர் வரையிலான சாலையை 4 வழிச்சாலையாக மாற்றும் பணிக்கான ஒப்பந்தத்தை சேகர்ரெட்டி என்பவர் எடுத்து இருந்தாலும் அந்தவேலையை செய்யாத்துரையே செய்து வருகிறார். இதே போல் விருதுநகர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைகளை 5 ஆண்டுகளுக்கு பராமரிக்க சுமார் ரூ.600 கோடி மதிப்பீட்டில் ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிகிறது.

அருப்புக்கோட்டை, மதுரை, சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் முக்கிய சாலை அமைக்கும் பணிகளும், கட்டுமான பணிகளும் நடப்பதால் அங்கு அலுவலகங்களும் உள்ளன. இவருக்கு கல்குறிச்சியில் நூற்பாலையும், கல்லூரணி பகுதியில் ஒரு கல்குவாரியும் உள்ளன. மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் எஸ்.பி.கே. என்ற நட்சத்திர விடுதியையும் இவர் நடத்தி வருகிறார்.

"சேலத்தில் நாளை பிரசாரத்தை தொடங்குகிறேன்"

முதல்வர் பழனிசாமி

பட மூலாதாரம், Getty Images

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தை சேலத்தில் உள்ள தனது சொந்த தொகுதியிலேயே சனிக்கிழமை தொடங்கப்போவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சேலத்தில் உரையாற்றிய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கட்சியின் சார்பில் கழக உடன்பிறக்குகள் கேட்டுக் கொண்டதால் முதல் கட்டமாக எனது சொந்த தொகுதியிலேயே தேர்தல் பிரசாரத்தை தொடங்கவுள்ளேன்" என்று கூறினார்.

தமிழகத்தின் மதுரையில் எய்ம்ஸ் திட்டத்துக்கு நிலம் ஒதுக்கும் பணியை தமிழக அரசு தொடங்கவில்லை என வெளியான தகவல் குறித்து கேட்டதற்கு, "மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தேவையான நிலம் தமிழக அரசு சார்பில் கையகப்படுத்தப்பட்டு விட்டது. மத்திய அரசு அதிகாரிகள் கையெழுத்திட்டு இன்னும் நிலத்தைப் பெற்றுக் கொள்ளவில்லை," என்று அவர் பதிலளித்தார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு தேர்தலின்போதும் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரியசோரகை கரியபெருமாள் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு தேர்தல் பிரசாரத்தை தொடங்குவது வழக்கம். அதன்படி சனிக்கிழமை (18-ந் தேதி) காலை 9 மணிக்கு பெரிய சோரகை வருகிறார்.

அந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முதலமைச்சர் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்து எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தை தொடங்கவிருக்கிறார்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டியபோதும் அதற்கான நடவடிக்கையை தமிழக அரசு தொடங்கவில்லை என்று திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையும் இந்த விவகாரத்தில் தமிழக அரசுக்கு ஆர்வமில்லையா என்றும் கேட்டிருந்தது. இதேவேளை, கொரோனா தொற்று தொடர்பாக தாங்கள் அனுப்பி வைத்த ஆவணங்களை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகையை வழங்குவதில் ஏற்பட்ட தாமதமே காரணம் என்பதை மத்திய அரசு அதிகாரிகள் தங்களிடம் கூறியதாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனும் தெரிவித்தார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :