விவசாயிகளுடன் பேசிய நரேந்திர மோதி: "விவசாயிகளை சுரண்டும் எதிர்கட்சிகள்" - உரையின் 10 முக்கிய தகவல்கள்

பட மூலாதாரம், ANI
புதிய வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் விவசாயிகளை எதிர்கட்சிகள் சுரண்டி வருவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோதி குற்றம்சாட்டினார்.
இந்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியிலும் அதன் எல்லை நகரங்களிலும் விவசாயிகள் நடத்தி வரும் தொடர் போராட்டம் வெள்ளிக்கிழமை 23ஆம் நாளை எட்டியிருக்கிறது. இதற்கு ஆதரவாக பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக கூட்டணி கட்சிகள் உள்ளிட்டவை போராட்டங்களில் ஈடுபட்டுள்ளன.
விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பல சுற்று பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், விவசாயிகள் சங்கங்களில் ஒரு பிரிவு, சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து மத்திய அரசிடம் கடிதம் கொடுத்துள்ளன.
ஆனாலும், பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள் பெரும்பான்மையாக அங்கம் வகிக்கும் சங்கங்களைச் சேர்ந்தவர்கள், எவ்வித சமரசத்துக்கும் உடன்பட மறுத்து வருகின்றனர்.
இதனால், அனைத்து வித நியாயமான கோரிக்கைகளையும் விவாதிக்க தயார் என்றும் நானும் விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவன் என்றும் குறிப்பிடும் உணர்ச்சிப்பூர்வ கடிதத்தை விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு இந்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அனுப்பியுள்ளார்.
இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம், சர்ச்சைக்குரியதாக கருதப்படும் 3 வேளாண் சட்டங்களை பிரச்னை முடியும்வரை நிறுத்தி வைக்கும் வாய்ப்பை ஆராயும்படி மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
இந்த நிலையில், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகளுடன் காணொளி காட்சி வாயிலாக வெள்ளிக்கிழமை பேசினார் பிரதமர் நரேந்திர மோதி. அப்போது அவர் சட்டங்களின் தேவை, அதற்கு எதிரான எதிர்கட்சிகளின் செயல்பாடுகள் தொடர்பாக விளக்கியதில் இருந்து 8 முக்கிய தகவல்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
1. வேளாண் சட்டங்கள் ஏதோ ஒரே நாள் இரவில் கொண்டு வரப்படவில்லை. 22 ஆண்டுகளாக அந்த சட்டங்களில் உள்ள அம்சங்கள் தொடர்பாக விவசாய சங்கங்கள், வேளாண் நிபுணர்கள், பொருளாதார வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள், சீர்திருத்தத்தை விரும்பும் விவசாயிகள் உள்ளிட்டோரிடம் ஆட்சியில் இருந்த அரசுகள் விவாதித்து வந்துள்ளன. இந்த சட்டத்தை எதிர்க்கும் கட்சிகள், தங்களின் முந்தைய தேர்தல் செயல்திட்டத்தில் இதே தேர்தல் சீர்திருத்த அம்சங்களையே குறிப்பிட்டிருக்கின்றன.
2. நம்மால் செய்ய முடியாமல் போனதை மோதியால் எப்படி செய்ய முடிகிறது என்று நினைத்து கவலைப்படும் எதிர்கட்சிகள், மோதி அரசுக்கு நல்ல பெயர் வந்து விடக்கூடாது என்பதற்காகவே சட்டத்தை எதிர்க்கின்றன. எனக்கு எந்த நற்பெயரும் வேண்டாம். அதை எதிர்கட்சிகளே வைத்துக் கொள்ளட்டும். விவசாயிகளை தவறாக வழிநடத்தாதீர்கள். அவர்களின் வாழ்க்கை மேம்பட நான் விரும்புகிறேன்.
3. புதிய வேளாண் சட்டங்கள் எதிர்ப்பு என்ற பெயரால் விவசாயிகளை தவறாக வழிநடத்தி போராட்டம் செய்ய எதிர்கட்சியினர் தூண்டுகிறார்கள். அவ்வாறு தூண்டும் கட்சிகள் விவசாயிகளை சுரண்டுகின்றன. அவற்றுக்கு விவசாயிகள் மீது உண்மையான அக்கறையோ கவலையோ கிடையாது.
4. மத்திய பிரதேச சட்டமன்றத்துக்கு 2018ஆம் ஆண்டில் தேர்தல் நடந்தபோது விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்வோம் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்தது. ஆட்சிக்கு வந்தால் 10 நாட்களில் கடன் தள்ளுபடி என அறிவித்தார்கள். விவசாயிகளை ஒருவித அச்சத்தில் வைத்து தேர்தல் ஆதாயம் அடைந்த அவர்கள் பொய்யை மட்டுமே பேசினார்கள்.
5. வேளாண் வளர்ச்சி தொடர்பான சுவாமிநாதன் ஆணையத்தின் அறிக்கையே நான் கூறுவதற்கெல்லாம் சாட்சி. தற்போது சட்டங்களை எதிர்கட்சிகள் எவ்வளவு இரக்கமற்றவை என்பதை அது உணர்த்தும். ஆட்சியில் இருந்தபோது விவசாயிகளுக்காக செலவிட நிதி இல்லை என்ற காரணத்தால் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட பரிந்துரைகளை 8 ஆண்டுகளாக கிடப்பில் போட்டார்கள்.
6. வேளாண் சீர்திருத்தங்கள் செய்வோம் என தங்களின் தேர்தல் செயல்திட்டத்தில் குறிப்பிட்டுள்ள எதிர்கட்சிகள் அது என்ன மாதிரியான சீர்திருத்தம் என்பதை விளக்க வேண்டும் என மக்கள் அவற்றிடம் கேட்க வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலையை அகற்ற நாங்கள் விரும்பினால் பிறகு ஏன் சுவாமிநாதன் ஆணைய பரிந்துரையை நிறைவேற்ற அரசு விரும்ப வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் பயிரிடுவதற்கு முன்பு எம்எஸ்பி-ஐ அரசு ஏன் அறிவிக்க வேண்டும்?
7. விவசாயிகளின் பெயரால் இந்த போராட்டத்தை தூண்டும் எதிர்கட்சிகள், ஆட்சியில் இருந்தபோது இதே சட்டத்தின் அம்சங்களை ஆதரித்திருக்கின்றன. விவசாய சட்டங்கள் நாட்டில் அமலுக்கு வந்து 6-7 மாதங்கள் ஆகின்றன. ஆனால், திடீரென்று அரசியலுக்காக இப்போது இந்த பிரச்னையை எதிர்கட்சிகள் கையில் எடுத்துள்ளன.
8. உலகம் ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டு வருகிறது. போட்டிபோடும் சந்தையில் இந்திய விவசாயிகளை பின்தங்கியிருக்கச் செய்யக்கூடாது. ஆண்டுக்கணக்கில் பரிசீலனையில் இருந்த ஒரு விஷயத்தையே மத்திய அரசு நிறைவேற்றியிருக்கிறது.
பிற செய்திகள்
- தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தின் கதை என்ன?
- விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக திமுக, கூட்டணிக் கட்சிகள் உண்ணாவிரதம் - காட்சிகள்
- அமெரிக்காவில் சைபர் தாக்குதல்: ஆபத்தில் முக்கிய அரசுத் துறைகள், முகமைகள்
- எச்.ராஜா நேர்காணல்: "தேர்தலுக்கு பிறகு பாஜக தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கும்"
- பாகிஸ்தானில் ரசாயன முறை ஆண்மை நீக்க சட்டம்: பாலியல் குற்றங்களை குறைக்குமா?
- நித்தியானந்தாவின் புதிய தகவல்: இங்குதான் இருக்கிறதா கைலாசா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












