இஸ்ரேல் -துருக்கி உறவு மீண்டும் நெருக்கம் பெறக் காரணம் என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஃபராஜ் ஹாஷ்மி,
- பதவி, பிபிசி உருது, லண்டன்
சர்வதேச அளவில் இஸ்ரேல் குறித்து கடும் விமர்சனம் செய்வதுடன் பாலஸ்தீனியர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் அதிபர் ரிசெப் தாயிப் எர்துவான் தலைமையிலான துருக்கி அரசு இரண்டு ஆண்டுகளாக இல்லாத வகையில் இஸ்ரேலுடனான ராஜீய உறவுகளை மீண்டும் தொடங்குவதாக தீடீரென அறிவித்துள்ளது.
துருக்கி சில நாட்களுக்கு முன்னர் இஸ்ரேலுக்கான தனது தூதரை நியமித்துள்ளது. காசாவில் பாலஸ்தீனிய போராட்டக்காரர்களுக்கு எதிரான இஸ்ரேலின் வன்முறையை எதிர்த்து துருக்கி 2018 ல் இஸ்ரேலில் இருந்து தனது தூதரை விலக்கிக் கொண்டது.
இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதரகத்தை, தலைநகர் டெல் அவிவ் -இல் இருந்து ஜெருசலேமுக்கு மாற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முடிவுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை இது.
துருக்கி அதிபர் எர்துவான் இஸ்ரேலை குழந்தைகளின் எமன் என்றும் சர்வாதிகார நாடு என்றும் குறிப்பிட்டார். ஆனால் இப்போது அவர் இஸ்ரேலுக்குத் தனது தூதரை அனுப்புகிறார். இதைப் புரிந்து கொள்ள, அண்மைக்கால நிகழ்வுகளையும் இஸ்ரேலுக்கும் துருக்கிக்கும் இடையிலான நீண்ட வரலாற்று உறவையும் பற்றி அறிந்து கொள்வது அவசியம்.
துருக்கிக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்த அடுத்த நாள், இந்த தூதர் நியமனத்தை துருக்கி அறிவிக்கிறது என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.
ரஷ்யாவிடமிருந்து எஸ் - 400 ஏவுகணைகளை வாங்கியதையடுத்து, அமெரிக்கா இந்த ஆண்டின் தொடக்கத்தில் தனது எஃப் - 35 போர் விமானத்தை துருக்கிக்கு விற்பனை செய்வது, துருக்கியின் ஏவியேட்டர் பயிற்சி திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களை ரத்து செய்தது.
அமெரிக்காவின் அழுத்தத்துக்கு பணியாத துருக்கி, ரஷ்யாவிடமிருந்து ஏவுகணைகளை வாங்கும் திட்டத்தைக் கைவிடத் தயாராக இல்லை. இப்போது, டிரம்ப் நிர்வாகம் துருக்கி மீது புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பாதுகாப்பு கூட்டணியான நேட்டோவில் துருக்கியும் ஒரு முக்கிய உறுப்பினராக உள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகமே கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கும் நேரத்தில் மத்திய கிழக்கில் புதிய அணிகள் அமைவதும் புவிசார் அரசியல் மாற்றமும் வேகமாக நிகழ்ந்து வருகின்றன.
உலகெங்கிலும் உள்ள நாடுகளில் பொருளாதார சிக்கல்கள் அதிகரித்து வருகின்றன, அரபு நாடுகளுக்கு இது ஒரு சவாலான நேரம். காரணம், உலக நாடுகள், தங்கள் பொருளாதாரச் சுமையைக் கூட்டக்கூடிய, எண்ணெய் வளத்தின் மீதான சார்பைக் குறைத்து வருகின்றன.
பொருளாதார ஸ்திரத்தன்மை காரணமாக அரபு நாடுகள் தங்கள் பாரம்பரிய கொள்கைகளை மறு ஆய்வு செய்வதுடன் தங்களது புதிய பொருளாதார வாய்ப்புகளையும் ஆய்ந்து வருகின்றன.
அதே நேரத்தில், அமெரிக்காவிலும் அரசியல் மாற்றம் வந்து கொண்டிருக்கிறது, புதிய ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகம் அடுத்த ஆண்டு ஜனவரி 20ம் தேதி பொறுப்பேற்கவுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்காவின் புதிய அரசுடன் உறவை சீர் செய்யும் முயற்சியா?
இஸ்ரேலின் செய்தி நிறுவனமான, 'த டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல்', அமெரிக்காவின் புதிய அரசுடன் வரும் நாட்களில் தனது உறவை சீர் செய்யும் துருக்கியின் முயற்சி இது என்று இதைக் குறிப்பிட்டுள்ளது.
டிசம்பர் 13 அன்று, மற்றொரு இஸ்ரேலிய செய்தித்தாளான 'ஜெருசலேம் போஸ்ட், "ஒருபுறம் இஸ்ரேலுடனான தனது உறவுகளைச் சுமுகமாக்கிக் கொண்டு அமெரிக்காவிடம் நற்பெயர் பெற வேண்டும் என்றும் மற்றொரு புறம், தனது நட்பு நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கிரீஸ் ஆகியவற்றுடன் இஸ்ரேலுடன் நெருங்க விடாமல் பார்த்து கொள்ளவும் விரும்புகிறது துருக்கி" என்று குறிப்பிட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகள் குறித்த ஆய்வாளர்கள், அமெரிக்காவின் புதிய நிர்வாகத்துடனான சுமுக உறவுகளுக்கான கதவுகளைத் திறந்து வைப்பதற்கும் தன் மீது அதிகரித்துவரும் அழுத்தத்தைத் தளர்த்திக்கொள்வதற்கும் துருக்கி இந்த முடிவை எடுத்துள்ளது என்றே கருதுகிறார்கள்.
"இப்பிராந்தியத்தில் தான் தனிமைப்படுத்தப்பட்டு விடுவோமோ என்ற அச்ச உணர்வு துருக்கிக்கு அதிகரித்து வருகிறது" என்று ஜெருசலேமில் வசிக்கும் மத்திய கிழக்கு விவகார நிபுணர் ஹரிந்தர் மிஸ்ரா கூறுகிறார்.
செங்கடலில் எண்ணெய் மற்றும் எரிவாயுவை எடுக்கும் விவகாரம் குறித்துச் சுட்டிகாட்டிய அவர், "இதன் காரணமாக சைப்ரஸ் மற்றும் கிரேக்கத்துடனான துருக்கியின் மோதல் தீவிரமடைந்தது. இந்த விவகாரத்தில் சைப்ரஸ் மற்றும் கிரேக்கத்தை பிரான்ஸ் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை ஆதரிக்கின்றன." என்று கூறினார்.
எகிப்து, சௌதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பிரான்ஸ் தவிர ரஷ்யாவின் எதிர்ப்பையும், துருக்கி எதிர்கொண்டு வரும் லிபியா மற்றும் சிரியா விவகாரங்கள் குறித்தும் அவர் சுட்டிக்காட்டினார்.
பைடன் பொறுப்பேற்ற பின்னர் அமெரிக்காவுடனான தனது உறவை மேம்படுத்த துருக்கி விரும்புகிறது. இஸ்ரேலுடனான தனது இராஜீய உறவுகளைப் புதுப்பித்துக் கொள்வதன் மூலம் இது எளிதாகும் என்று துருக்கி நினைக்கிறது என்று மத்திய கிழக்கு விவகாரப் பேராசிரியரும் பிரிட்டனின் பாத் பல்கலைக்கழக பேராசிரியருமான இஃப்திகார் முல்க் கூறுகிறார்.
துருக்கி அதிபர் எர்துவான், குறிப்பாக அமெரிக்காவின் புதிய நிர்வாகத்துக்கும் குறிப்பாக உலகின் பிற பகுதிகளுக்கும் ஒரு செய்தியை வழங்க முயன்றதாக டாக்டர் இஃப்திகார் முல்க் கூறுகிறார். துருக்கி, அப்பிராந்தியத்தில் 'மோசமான நாடு ' அல்ல என்ற செய்திதான் அது.
இஸ்ரேலுக்கான துருக்கியின் புதிய தூதர் யார்?

பட மூலாதாரம், TWITTER IMAGE
துருக்கிய வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் தந்திரோபாய ஆராய்ச்சி மையத்தின் தலைவராக இருக்கும் 40 வயதான அஃபக் அல்தாஸ்-ஐ இஸ்ரேலுக்கான துருக்கிய தூதராக ரிசெப் தாயிப் எர்துவான் தேர்ந்தெடுத்துள்ளார்.
எர்துவானின் நெருங்கிய மற்றும் நம்பகமான அதிகாரிகளில் ஒருவராக அஃபக் அல்தாஸ் கருதப்படுவதாக ஹரிந்தர் மிஸ்ரா கூறுகிறார்.
அஃபக், ஜெருசலேம் ஹீப்ரூ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். மேலும் ஹீப்ரூ மொழியும் பாலஸ்தீனிய பிரச்சனையும் நன்கு புரிந்தவர்.
இஸ்ரேல் செய்தித்தாளான, டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல், "அவர் மிகவும் நாகரிகமானவர், விவேகமானவர் மற்றும் பாலஸ்தீனியர்களின் பால், அனுதாபம் கொண்டவர்' என்று அவரைக் குறிப்பிடுகிறது.
பாலஸ்தீன மக்களிடம் அஃபக் அல்தாஸின் நியமனம் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஹரிந்தர் மிஸ்ரா கூறினார். இந்த ஆண்டு இரண்டு முறை ஹமாஸ் தலைவர்களுக்கு துருக்கி விருந்தளித்து ஆதரவளித்துள்ளது என்பதையும் அவர் நினைவுபடுத்தினார்.
துருக்கிய தூதர் நியமனத்துக்கு அடுத்த படியாக, மிக முக்கியமான பிரச்சனையாகப் பார்க்கப்படுவது, ஜெருசலேமைத் தலைநகராக ஏற்பது. இது இராஜீய ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் மிக முக்கியமான பதற்றம் நிறைந்த விஷயமாகும்.
கிழக்கு ஜெருசலேமில் உள்ள துருக்கிய துணைத் தூதரகம் 1948 முதல் இயங்கிவரும் நிலையிலும், புதிய தூதர் டெல் அவிவில் தான் பணிபுரிவார் என்று ஹரிந்தர் மிஸ்ரா கூறுகிறார்.
துருக்கி தனது தூதரை ஜெருசலேமில் நியமித்தால், ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக ஏற்றுக்கொண்டதாகிவிடும் என்பதால் துருக்கி அவ்வாறு செய்யாது என்று டாக்டர் இஃப்திகார் முல்க் கூறுகிறார்.

பட மூலாதாரம், Reuters
துருக்கி இஸ்ரேலை ஏற்றது எப்படி, எப்போது?
இஸ்ரேலுக்கும் துருக்கிக்கும் இடையிலான உறவு இஸ்ரேல் உருவான உடனேயே தொடங்கியது. முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளில், 1949 இல் இஸ்ரேலை ஒரு நாடாக ஏற்றுக்கொண்டதாக அறிவித்த முதல் நாடு துருக்கி.
ஐக்கிய நாடுகள் சபையில் பாலஸ்தீனிய பிரதேசங்களைப் பகிர்ந்தளிப்பதற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்த போதிலும் துருக்கி இஸ்ரேலை ஏற்றுக்கொள்வதில் தயக்கம் காட்டவில்லை. வரலாற்றாசிரியர்களின் பார்வையில் இதற்கான காரணம் துருக்கி தன்னை ஒரு மதச்சார்பற்ற நாடாகக் காட்டிக் கொள்ள விரும்பியது என்பது தான்.
புவியியல் அருகாமையும் பொதுவான நலன்களும் இருப்பதால், பொருளாதாரம், சுற்றுலா, வர்த்தகம் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் வளர்ந்தன.
ஆனால் இஸ்ரேல் உருவாவதற்கு முன்பே, உஸ்மானியா பேரரசுக்கும், யூதர்களுக்கும் இடையிலான தொடர்பு நீண்ட வரலாற்றை கொண்டது.
பிரபல பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர் ஃபிலிப் மென்செல் எழுதிய 'கான்டெஸ்டைன் - த சிட்டி ஆஃப் வேர்ல்ட் டிசயர்' என்ற புத்தகத்தை மேற்கோள் காட்டி டாக்டர் இஃப்திகார் முல்க் ஒரு வரலாற்று நிகழ்வை விளக்குகிறார்.

பட மூலாதாரம், Getty Images
யூதர்களுக்கு ஒரு தனி நாடு என்ற யோசனையை வழங்கிய தியோடர் ஹெர்செல், உஸ்மானியா கலீப் அப்துல் மஜீத்தை சந்தித்தபோது, உஸ்மானியா சுல்தானேட் ஐரோப்பிய நாடுகளின் கடன் சுமையால் தத்தளித்திருந்த சமயம். துருக்கி ஐரோப்பாவின் நோயாளி என்று அழைக்கப்பட்ட காலம்.
தியோடர் ஹெர்செல் 1901 மே 17 அன்று உஸ்மானியா சுல்தானேட்டின் கலீஃபா சுல்தான் அப்துல் மஜித்தின் அரசவைக்குச் சென்று, உஸ்மானியா சுல்தானேட்டின் அனைத்துக் கடன்களையும் தம்மால் அடைக்க முடியும் என்றும் ஆனால் அதற்குப் பதிலாக, பாலஸ்தீனிய பிரதேசங்களில் யூதர்களைக் குடியேற்ற உஸ்மானியா சுல்தானுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கூறினார்.
ஆனால் உஸ்மானிய கலீஃபா இதனை நிராகரித்தார். இதைச் செய்தால், பாலஸ்தீனியர்களின் பரம்பரையே ஓட்டோமான் சமூகத்தை மன்னிக்காது என்று அவர் கூறினார்.
இது தவிர, ஆண்டலூசியாவில் முஸ்லிம்களின் அதிகாரம் முடிவுக்கு வந்து முஸ்லிம்களையும் யூதர்களையும் கொன்றபோது, உஸ்மானியா அரசாங்கத்தின் கலீஃபா சுல்தான் பாயஜித் துருக்கிய கடற்படையின் கப்பலை அனுப்பி ஆயிரக்கணக்கான யூதர்களையும் அங்கிருந்து வெளியேற்றினார் என்பதும் வரலாறு.
பிற்காலத்தில் யூதர்கள் உஸ்மானியா சுல்தானேட்டின் கீழ், ஐரோப்பிய மற்றும் வட ஆப்பிரிக்காவின் பகுதிகளில் குடியேறியது மட்டுமல்லாமல், உஸ்மானியா சுல்தானேட்டின் உயர் பதவிகளையும் அடைய முடிந்தது.
இந்த வரலாற்று உண்மைகளின் காரணமாக "யூதர்கள் இன்றும் துருக்கியர்களிடம் ஒரு மென்மையான போக்கையே கொண்டுள்ளனர்" என்று டாக்டர் இஃப்திகார் முல்க் கூறுகிறார்.

பட மூலாதாரம், ISRAELI GOVRNMENT PRESS OFFICE
துருக்கி-இஸ்ரேல் உறவில் எழுச்சியும், தொய்வும்
துருக்கி - இஸ்ரேல் உறவில் பாலஸ்தீனம் எப்போதும் ஒரு மையப் புள்ளியாக இருந்து வருகிறது. துருக்கி இஸ்ரேலுடனான தனது ராஜீய உறவுகளை முறித்துக்கொண்ட அல்லது குறைத்துக்கொண்ட கடந்த மூன்று முறையும் பாலஸ்தீனப் பிரச்சனையே அதற்கான மையக் காரணியாக இருந்துள்ளது.
1956 ஆம் ஆண்டில், முதன்முறையாக, சூயஸ் கால்வாய் பிரச்சினையில் பிரிட்டன் மற்றும் பிரான்சின் ஆதரவுடன் இஸ்ரேல் சினாய் பாலைவனத்தைத் தாக்கியபோது, துருக்கி அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, அதன் ராஜீய உறவுகளைக் குறைத்துக் கொண்டது.
இதைத் தொடர்ந்து 1958 ஆம் ஆண்டில் அப்போதைய இஸ்ரேலிய பிரதமர் டேவிட் பென் கோரியான் மற்றும் துருக்கி தலைவர் அட்னான் மெண்டெரெஸ் ஆகியோருக்கு இடையில் ஒரு சந்திப்பு நடைபெற்றது. இதில், பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை ஒத்துழைப்பை ஏற்படுத்திக்கொள்ள இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.
1980 ல் கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் கைப்பற்றியபோது, துருக்கி மீண்டும் அதனுடனான ராஜீய உறவுகளைக் குறைத்துக் கொண்டது. இந்த நேரத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான ராஜீய உறவுகள் தொய்வு கண்டிருந்தன. ஆனால் 90 களில் ஒஸ்லோ சமாதான உடன்படிக்கைக்குப் பின்னர், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மீண்டும் புத்துயிர் பெற்றன.
இந்த நேரத்தில், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு, கட்டாயத்தின் பேரிலானது என்று குறிப்பிடப்பட்டது. ஆனாலும், எந்தக் குழப்பமும் இல்லாமல் இது தொடர்ந்தது. இந்தக் காலகட்டத்தில், பரஸ்பர வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் ஒத்துழைப்புக்கான பல ஒப்பந்தங்கள்கூட கையெழுத்தாயின.
ஜனவரி 2000 இல், இஸ்ரேல் துருக்கியிலிருந்து தண்ணீர் வாங்க ஒரு ஒப்பந்தத்தை போட்டுக்கொண்டது, ஆனால் இந்த ஒப்பந்தம் நீண்ட காலம் நீடிக்கவில்லை. இதன் பிறகு, துருக்கிக்கு ட்ரோன்கள் மற்றும் கண்காணிப்பு உபகரணங்கள் வழங்குவது உட்பட இரு நாடுகளுக்கும் இடையே பல பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
பாதுகாப்புத் துறையில் உறவுகள் உருவாக முக்கிய காரணம் - துருக்கியின் பாதுகாப்புக்கு உபகரணங்கள் தேவை மற்றும் இஸ்ரேலுக்கு தங்கள் பொருட்களை விற்க சந்தை தேவை.
துருக்கியில் நவம்பர் 2002 இல், ரிசெப் தாயிப் எர்துவானின் வலதுசாரி நீதி மற்றும் மேம்பாட்டுக் கட்சி (ஏ.கே.பி) ஆட்சிக்கு வந்தபோது, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேலும் மேம்படத் தொடங்கின. 2005 ஆம் ஆண்டில், எர்துவான் இஸ்ரேலுக்கு பயணம் செய்தார். அப்போதைய இஸ்ரேலியப் பிரதமர் எஹுத் ஒல்மார்த்துக்கு துருக்கிக்கு வர அழைப்பு விடுத்தார்.
2008 டிசம்பரில் நிலைமையில் மேலுமொரு திருப்பம் நிகழ்ந்தது. இஸ்ரேலிய பிரதமர் ஷிமோன் பெரெஸ் அங்காரா பயணம் மேற்கொண்ட மூன்று நாட்களுக்குப் பிறகு, இஸ்ரேல் காசாவில் 'ஆபரேஷன் காஸ்ட் லீட்' (Operation cast lead) என்ற பெயரில் ராக்கெட்டுகளை ஏவத் தொடங்கியது.
ஹமாஸின் மீது அனுதாபம் கொண்டிருந்த எர்துவான், இஸ்ரேலின் இந்த நடவடிக்கையால் கடுமையாக அதிர்ச்சியடைந்து இது ஒரு ஏமாற்று வேலை என்று வெளிப்படையாகத் தெரிவித்தார்.
2010 இல், காசாவில் இஸ்ரேலிய இராணுவம் முற்றுகையிட்டபோது மாவி மர்மாரா சம்பவம் நிகழ்ந்தது. ஒரு துருக்கிய மனித உரிமை அமைப்பு சார்பாக, மாவி மர்மாரா கப்பல் மனிதாபிமான உதவிகளை மேற்கொண்டது, அதன் மீது இஸ்ரேலிய இராணுவம் தாக்கியது. இந்த சம்பவத்தில் 10 ஓட்டோமான் மக்கள் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்துக்குப் பிறகு, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு முறிந்தது.

பட மூலாதாரம், Reuters
அமெரிக்காவின் முயற்சி
இப்பிராந்தியத்தில் அதன் இரு நட்பு நாடுகளுக்கிடையில் பதற்றங்களைக் குறைப்பதற்கும் ராஜீய உறவுகளை மீட்டெடுப்பதற்கும் அமெரிக்கா தொடர்ந்து முயற்சித்தது.
இதற்கு, எர்துவான், மூன்று நிபந்தனைகளை முன் மொழிந்தார். அவை, மாவி மர்மாரா மீதான தாக்குதலுக்கு மன்னிப்பு கோருதல், கொல்லப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குதல் மற்றும் காசா முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவருதல் ஆகியவையாகும்.
இஸ்ரேலுக்கு மிகப்பெரிய நிபந்தனை மன்னிப்பு கேட்பது தான். சில ஹமாஸ் தலைவர்களை நாட்டிலிருந்து வெளியேற்றும்படி துருக்கியை இஸ்ரேலும் கோரியது.
அமெரிக்க முயற்சிகளின் ஒரு பகுதியாக, 2013 ஆம் ஆண்டில், அப்போதைய ஜனாதிபதி பராக் ஒபாமா எர்துவானுக்கும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவுக்கும் இடையே தொலைபேசி உரையாடலை ஏற்பாடு செய்தார். தொலைபேசி உரையாடலின் போது, நெத்தன்யாஹு மன்னிப்பு கேட்கவும், உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் ஒப்புக்கொண்டார்.
இருந்த போதும், இப்பிராந்தியத்தில் அடிக்கடி நிகழும் சம்பவங்கள் இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை இயல்பாக்குவதை தாமதப்படுத்தின. இறுதியாக 2016 இல், இரு நாடுகளுக்கும் இடையில் ராஜீய உறவுகள் மீண்டும் புத்துயிர் பெற்றன.
பிற செய்திகள்
- இந்தியா பாகிஸ்தான் 1971 போர்: இந்தியாவை மிரட்ட வந்த அமெரிக்க போர் கப்பல்கள் - என்ன ஆனது?
- IND vs AUS டெஸ்ட்: இந்திய டெஸ்ட் இன்னிங்ஸ் வரலாற்றில் மிகவும் குறைந்த ஸ்கோர்
- சமூக இடைவெளியால் உறவுகள் பிரியுமா? தொடுவதால் ஏற்படும் நன்மை என்ன?
- மாடர்னா தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி; 20 கோடி டோஸ்கள் வாங்க ஒப்புதல்
- 'கொரோனா கர்ப்பிணிகளின் குழந்தைகள் உடலில் எதிர்ப்பான்கள்'
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












