2021 புத்தாண்டு: சமூக இடைவெளியில் கழிந்த 2020 - தொடுவதால் ஏற்படும் நன்மை என்ன?

பட மூலாதாரம், Getty Images
நீங்கள் உங்கள் அன்புக்குரியவரை கட்டி அணைப்பதையோ, முத்தம் கொடுப்பதையோ மிஸ் செய்கிறீர்களா? உங்கள் அலுவலகத்தில் சக பணியாளர்களுக்கு கை கொடுப்பதை மிஸ் செய்கிறீர்களா?
இந்த 2020ஆம் ஆண்டு, உலகம் முழுவதும் உள்ள பலருக்கு ஒரு 'சமூக இடைவெளி' ஆண்டாக அமைந்திருக்கும். அதுமட்டுமல்லாமல் கிட்டத்தட்ட ஆண்டின் முக்கால் பகுதி பொது முடக்க கட்டுப்பாடுகளுடனேயே இருந்தது.
இந்நிலையில் அன்புக்குரியவர்களை நேரில் சந்திப்பது, பேசுவது, அதாவது இந்த கோவிட் 19 கட்டுப்பாடுகளுக்கு முந்தைய காலத்தில் இருந்ததை போல, ஒருவரோடு ஒருவர் இணைந்து பழகுவது போன்ற அனைத்தும் இல்லாமல் பலர் வெற்றிடத்தை உணரலாம்.
இது எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று யோசித்தது உண்டா?
"குழந்தை பருவத்தில் நான் உணரும் முதல் விஷயம் தொடுதல். அதில்தான் குழந்தைகள் அதன் எண்ணத்தை வெளிப்படுத்தும். அது வளர்ச்சியின் அடையாளமாகவும் இருக்கும். தொடுதல் குறித்து பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன," என்கிறார், Unique: The New Science of Human Individuality என்ற புத்தகத்தின் ஆசிரியர் டேவிட் லிண்டென். தொடுதலின் மகிமையை நாம் பெரிதும் புரிந்து கொள்வதில்லை என்கிறார் அவர்.
நாம் பிறரை தொடும்போது என்ன நடக்கிறது?
தொடுதல் ஒரு வலி நிவாரணியாக செயல்படுகிறது என்கின்றன ஆய்வுகள்.
ஒரு குழந்தையை நாம் தொடும்போது, அதன் "இதய துடிப்பு சீராகிறது", "எடை கூடுகிறது" என்கிறார் குழந்தைகளுக்கான நரம்பியல் துறை பேராசிரியர் ரெபெக்கா ஸ்லேட்டர்.
இணைக்கும் சக்தியாக தொடுதல்
தொடுதலின் முக்கியத்துவம் குறித்து நாம் பேசும்போது மனிதர்களும் விலங்குகளை போலதான் என்கிறார் பரிணாம வளர்ச்சி குறித்த உளவியல் நிபுணர் ராபின் டன்பர்.

பட மூலாதாரம், Getty Images
விலங்குகள் அதன் வாழ்வில் 10-20% நேரத்தை பிற விலங்குகளை தொடுவதிலோ அல்லது சுத்தப்படுத்துவதிலோ கழிக்கின்றன; இது அவற்றின் நட்புக்கான முக்கிய காரணம்.
"அதன் ரோமங்களில் படும் அந்த தொடுதல், அதன் மூளைக்கு உனது நெருங்கிய நண்பன் உன்னை தொடுகிறான் என்ற உணர்வை கடத்தும். மூளையில் உள்ள எண்டோர்ஃபின் அமைப்பு தூண்டப்படும்"
"நாம் மிகுந்த ஓய்வாக உணருவோம். முக்கியமாக இவ்வாறு தொடும் அந்த நண்பனோ அல்லது தோழி மீதோ ஒரு நம்பிக்கை உணர்வு ஏற்பட்டு, நட்பு அதிகரிக்கிறது," என்கிறார் ராபின் டன்பர்.
தொடுதல் அற்ற சூழலால் என்ன நடைபெறும்?
தொடுவதால் ஒருவரோடு ஒருவருக்கு நட்புணர்வும், நம்பிக்கையும், அமைதித்தன்மையும் ஏற்படுகிறது என்றால் சமூக இடைவெளி கடைப்பிடிப்பதால் என்ன மாதிரியான தாக்கம் ஏற்படுகிறது?
"இது உடனடியாக நமக்குள் பிரிவை ஏற்படுத்தி விடப்போவதில்லை" என்கிறார் எழுத்தாளர் லிண்டென்.
"ஆனால் நமது ஒற்றுமை உணர்வு, பிறர் மீதான நம்பிக்கை, பிறரின் உணர்வை புரிந்து கொள்ளும் தன்மை ஆகியவை மெதுவாக குறையும்," என்கிறார் லிண்டென்.

பட மூலாதாரம், Getty Images
"ஒரு விலங்கை நீங்கள் தொடவில்லை என்றால், அது உடல் அளவிலும் மனதளவிலும் வலிமையற்று உணரத் தொடங்கும், மேலும் அவற்றின் ஆயுளும் குறைந்துவிடும்," என்கிறார் மனோதத்துவ நரம்பியல் துறை பேராசிரியர் கடெரினா ஃப்டுபெளலு.
நம்மால் என்ன செய்ய முடியும்?
"பெருந்தொற்று காலத்திற்கு முன்பு மக்கள் பழகியது போலவே மீண்டும் பழகுவர்," என்கிறார் பேராசிரியர் ஸ்லேட்டர்.
இருப்பினும் பரிணாம உளவியல் நிபுணர் ராபின் டன்பர், "பழைய நிலைக்கு திரும்ப அதிக மெனக்கடெல் தேவை," என்கிறார்.
எனவே உங்களால் முடிந்தால், உங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை என்றால் உங்கள் அன்புரிக்குரியவரை தொடுவதும் ஒரு நல்ல யோசனைதான். அதன் மூலம் மன நலம் மற்றும் உடல் நலம் இரண்டும் மேம்படும் என்கின்றனர் நிபுணர்கள்.
நீங்கள் நேசிப்பவரை தொடுவது என்பது மனதளவிலும், உடலளவிலும் ஒரு நலம் மிக்க சூழலை ஏற்படுத்தும்.
மேலும் பல நாட்களாக பார்க்காத உங்கள் அன்புக்குரியவரை பார்க்கும்போது அவர்கள் பேசுவதை விட அவர்களின் தொடுதலில் பாசம் புரிந்துவிடும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












