ஜமால் கஷோக்ஜி கொலை வழக்கு: 5 கைதிகளின் மரண தண்டனையை குறைத்தது செளதி நீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images/AFP
செளதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி, துருக்கியின் இஸ்தான்புல்லில் உள்ள செளதி தூதரகத்தில் கொல்லப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து பேரின் தண்டனையை அந்நாட்டு நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறையாக குறைத்துள்ளது.
இதேபோல, குற்றம்சாட்டப்பட்டிருந்த மேலும் ஒருவருக்கு 10 ஆண்டு சிறையும், இருவருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. தண்டனை குறைப்புக்கு ஆளானவர்களின் விவரங்கள் வெளியிடப்படவில்லை.
இந்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டிருந்த அனைவரையும் மன்னிப்பதாக கஷோக்ஜியின் குடும்பம் முடிவு செய்ததால் அவர்களின் தண்டனை குறைக்கப்பட்டதாக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
ஆனால், "நீதித்துறையை கேலிக்கூத்தாக்கும் வகையில் நீதிமன்ற உத்தரவு அமைந்துள்ளது" என்று கஷோக்ஜியை திருமணம் செய்து கொள்ளவிருந்த அவரது தோழி ஹாட்டீ யு செங்கிஸ் கூறியுள்ளார்.
செளதி அரசின் தீவிர விமர்சகரான ஜமால் கஷோக்ஜி, துருக்கியின் இஸ்தான்புல்லில் உள்ள செளதி தூதரகத்தில் சில செளதி ரகசிய உளவுப்படையினரால் கொல்லப்பட்டதாக துருக்கி குற்றம்சாட்டியது.
இந்த விவகாரத்தில் பல மாதங்களாக துருக்கி சுமத்திய குற்றச்சாட்டுகளை மறுத்து வந்த செளதி அரசு, ஒரு கட்டத்தில் வலுவான காணொளி ஆதாரங்களை துருக்கி வெளியிட்ட பிறகு, ஆத்திரமூட்டல் நடவடிக்கையால் கஷோக்ஜியை செளதி அதிகாரிகள் கொல்ல நேர்ந்ததாக ஒப்புக் கொண்டது.
எனினும், சர்வதேச அழுத்தத்துக்கு அடிபணிந்த செளதி அரசு, துருக்கியால் குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிரான வழக்கை தமது நாட்டிலேயே நடத்துவதாக அறிவித்தது. பிறகு , குற்றம்சாட்டப்பட்ட 11 பெயர் குறிப்பிடாத தனி நபர்களுக்கு எதிரான வழக்கை செளதி நீதிமன்றம் விசாரித்தது.
இதேவேளை, செளதியிலேயே விசாரணை நடத்தும் முடிவை ஏற்க மறுத்த ஐ.நா சிறப்பு பிரதிநிதி ஏக்னெஸ் கல்லாமார்ட், நடந்த கொலைக்கு செளதி அரசே பொறுப்பாளி என குற்றம்சாட்டப்படும்போது, திட்டமிட்டே வேண்டுமென்ற நடத்தப்பட்ட செயலால்பாதிக்கப்பட்டவர் கஷோக்ஜி என்று கருத்து கூறியிருந்தார்.
செளதி பட்டத்து இளவரசர் உள்பட செளதி ராஜ்ஜியத்தில் உயர் பொறுப்பில் உள்ளவர்களுக்கு எதிரான வலுவான ஆதாரம் உள்ளதாகவும் கல்லமார்ட் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், செளதி பட்டத்து இளவரசர் அந்த குற்றச்சாட்டை மறுத்தார். இதற்கிடையே, இளவரசரின் இரு உதவியாளர்கள் உள்பட 18 பேருக்கு எதிராக துருக்கியில் தனியாக நடந்து வரும் கஷோக்ஜி படுகொலை வழக்கில், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாத நபர்களாக குற்றம்சாட்டப்பட்டவர்கள் கருதப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
கஷோக்ஜி எவ்வாறு இறந்தார்?
59 வயதான ஜமால் கஷோக்ஜி 2017ஆம் ஆண்டில் செளதியில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் தஞ்சம் அடைந்தார்.
துருக்கியில் வாழும் அந்நாட்டு பிரஜையான ஹாட்டீ யு சென்கிஸை திருமணம் செய்ய முடிவு செய்து, சில ஆவணங்களை பெறுவதற்காக 2018ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி இஸ்தான்புல்லில் உள்ள செளதி தூதரகத்துக்கு சென்றார்.
நீண்ட நேரத்துக்குப் பிறகு வெளியே வராத நிலையில், தூதரகத்துக்கு வெளியே காத்திருந்த அவரது காதலி ஹாட்டீ யு செங்கிஸ் துருக்கி அரசின் கவனத்துக்கு இந்த விவகாரத்தை கொண்டு சென்றார்.
இதைத்தொடர்ந்து துருக்கி அதிகாரிகள் நடத்திய விசாரணையில், தூதரகத்துக்கு உள்ளே பதிவான ரகசிய உரையாடல்களை வைத்து கஷோக்ஜி மிகவும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளதாக ஐ.நா சிறப்புப் பிரதிநிதி தமது விசாரணையில் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், கஷோக்ஜி மரணம், திட்டமிடப்பட்ட ஒன்று அல்ல என்று செளதி அரசு வழக்கறிஞர் கூறுகிறார்.
இஸ்தான்புல்லுக்கு அனுப்பப்பட்ட "பேச்சுவார்த்தை குழுவின்" தலைவரால் அந்த கொலைக்கு உத்தரவிடப்பட்டதாகவும், மீண்டும் செளதி ராஜ்யத்திற்கு கஷோக்ஜியை அழைத்து வர அவரை வற்புறுத்த வேண்டும் அல்லது அந்த முயற்சி தோல்வி அடைந்தால் கட்டாயப்படுத்தி அழைத்து வருமாறும் அவர்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டது.

பட மூலாதாரம், Reuters
இது தொடர்பான துருக்கி விசாரணையில், அளவுக்கு அதிகமான போதை மருந்தை கஷோக்ஜியின் உடலுக்குள் செலுத்தி அவர் கொல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், தூதரகத்துக்கு வெளியே அவரது உடல் உள்ளூரைச் சேர்ந்த பணியாளரிடம் வழங்கப்பட்டதாகவும் செளதி அரசு தரப்பில் கூறப்பட்டது.
ஆனால், அவரது உடலின் எஞ்சிய பாகங்கள் எங்கு கொண்டு செல்லப்பட்டன, எவ்வாறு அவரது உடல் அழிக்கப்பட்டது போன்ற தகவல்கள் இன்னமும் தெளிவற்று உள்ளன.
துருக்கி சமத்தும் குற்றச்சாட்டுகள்
"கஷோக்ஜி தூதரகத்துக்குள் நுழைந்த சில நிமிடங்களிலேயே அவர் மூச்சுத்திணற ஆரம்பித்ததாகவும் அவரது உடல் அழிக்கப்பட்டது" என்றும் துருக்கி வழக்கறிஞர்கள் தங்களின் வாதங்களை நிறைவு செய்தனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் செளதி தலைநகர் ரியாத்தில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்ட ஐந்து பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட நபரை கொலை செய்த செயலில் நேரடியாக அவர்கள் பங்கேற்றதாக நீதிமன்றம் தீர்ப்பில் கூறியது. மேலும் மூவர் குற்றத்தை மறைத்ததாகவும், சட்டத்தை மீறியதாகவும் கூறி மொத்தம் 24 ஆண்டுகளுக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த வழக்கில் செளதி முன்னாள் உளவுப்படை துணைத்தளபதி அகமது அஸிரி உள்பட மூன்று பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று நீதிமன்றம் கூறியது. இந்த வழக்கில் செளதி பட்டத்து இளவரசருக்கு மிகவும் நெருக்கமானவராகவும் அவரது மூத்த ஆலோசகராகவும் இருந்த செளத் அல் காட்டானியை அதிகாரிகள் விசாரித்தபோதும், குற்றப்பத்திரிகையில் அவரது பெயர் இடம்பெறவில்லை.
பிற செய்திகள்:
- பொறியியல் கல்லூரி அரியர் விவகாரம்: முரண்படும் தகவல்கள் - நடப்பது என்ன?
- இந்திரா - நிக்சன் பனிப் போர்: வரலாற்றில் பதிவான அழியாத சுவடுகள்
- சாதி ஒழிப்பு 2050ல் சாத்தியமா? விவாதமாகும் உயர் நீதிமன்ற நீதிபதியின் கருத்து
- ரியா சக்ரவர்த்தி கைது: போதைப்பொருள் பயன்படுத்தியதாக விசாரணை அதிகாரிகள் குற்றச்சாட்டு
- அருணாசல பிரதேச எல்லையில் காணாமல் போன 5 இந்தியர்களின் கதி என்ன? சமீபத்திய தகவல்கள்
- பப்ஜி தடை எதிரொலி: - தென் கொரிய நிறுவனம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு - இனி என்ன நடக்கும்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












