ரியா சக்ரவர்த்திக்கு ஜாமீன் வழங்க மும்பை செஷன்ஸ் நீதிமன்றம் மறுப்பு

ரியா

பட மூலாதாரம், Getty Images

போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான வழக்கில் தேசிய போதைப்பொருள் தடுப்புத் துறையினரால் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்ட நடிகை ரியா சக்ரவர்த்தி உள்பட 9 பேரை ஜாமீனில் விடுவிக்க செஷன்ஸ் நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 11) மறுத்து விட்டது.

இந்த வழக்கில் வரும் 22ஆம் தேதி வரை ரியா சக்ரவர்த்தியை நீதிமன்ற காவலில் வைக்க மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. மேலும், அவர் உள்பட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரை ஜாமீன் வழங்கவும் அந்த நீதிமன்றம் மறுத்தது.

இந்த நிலையில், தங்களை ஜாமீனில் விடுவிக்கக் கோரி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ரியா சக்ரவர்த்தி, அவரது சகோதரர் ஷோவிக் சக்ரவர்த்தி, அப்துல் பஸித், விலாத்ரா, சாவந்த், சாமுவேல் மிராண்டா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை மும்பை செஷன்ஸ் நீதிமன்றம் நேற்று விசாரித்து வாதங்களைக் கேட்டது.

இதைத்தொடர்ந்து இன்று குற்றம்சாட்டப்பட்ட ஒன்பது பேரை ஜாமீனில் விடுவிக்க முடியாது என்று செஷன்ஸ் நீதிமன்றம் தெரிவித்தது.

இந்த உத்தரவுக்கு எதிராக மும்பை உயர் நீதிமன்றத்தில் ரியா சக்ரவர்த்தி சார்பில் மேல்முறையீடு செய்யப்படும் என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.

"கட்டாயப்படுத்தப்பட்டு வாக்குமூலம்"

ரியா சக்ரவர்த்தி தனது மனுவில், போதைப்பொருள் பயன்பாடு விவகாரத்தில் தன்னை நிர்பந்தித்து ஒப்புதல் வாக்குமூலம் பெற அதிகாரிகள் முயன்றதாகவும் தன்னை இந்த வழக்கில் சேர்த்து ஜோடித்துள்ளனர் என்றும் கூறியிருந்தார்.

இதேசமயம், தனது காதலரான சுஷாந்த் சிங் ராஜ்புத் போதைப்பொருள் பயன்படுத்தியதை நன்றாகவே அவர் அறிந்திருந்தார் என்றும் அவர் போதைப்பொருள் வாங்குவதற்கு ரியா உதவினார் என்பதை நிரூபிக்கும் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் போதைப்பொருள் தடுப்புத்துறை சார்பில் வாதிடப்பட்டது.

இந்த வழக்கில் தாமாக முன்வந்தே அவர் ஒப்புதல் வாக்குமூலத்தை வழங்கினார் என்றும் போதைப்பொருள் வாங்க தனது கிரெடிட் கார்டை ரியா உபயோகித்தார் என்றும் அந்தத்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கண்டனம்

இதற்கிடையே, ரியா சக்ரவர்த்தி கைது விவகாரம் தொடர்பாக மனித உரிமைகள் அமைப்பான அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின் இந்திய பிரிவு செயல் இயக்குநர் அவிநாஷ் குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், நீதியை உறுதி செய்வதற்கு நியாயமான மற்றும் பக்கசார்பற்ற விசாரணைக்கான உரிமை மிக முக்கியமானது. அந்த உரிமையை மறுப்பது, குற்றம்சாட்டப்பட்டவருக்கும் பாதிக்கப்பட்டவருக்கும் இழைக்கப்படும் அநீதியாகும். ரியா சக்ரவர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட சில நபர்கள், ஊடகங்களால் இழிவுபடுத்தப்படும் விதம் அவர்களின் அந்த உரிமையை தடுக்கிறது. நீதி பெறும் வழிமுறைகளை பொறுப்புடைமைக்கு உள்ளாக்குவதில் ஊடகங்கள் நிச்சயமாக பங்காற்ற வேண்டும், ஆனால் அவை நியாயமான மற்றும் பயனுள்ள சட்ட செயல்முறைக்கு மாற்றாக இருக்கக்கூடாது" என்று கூறியுள்ளார்.

"ரியாவின் குணம், நடத்தை ஆகியவற்றை குறைத்து மதிப்பிடும் வகையிலான ஊடக தகவல் சேகரிப்பு எந்த நோக்கத்துக்கும் உதவாது. இதுபோன்ற வழிமுறைகள், பாதிக்கப்பட்டவர்களை நீதி பெறுவதில் இருந்தும் குற்றம்சாட்டப்பட்டவர்களை நியாயமான விசாரணை பெறுவதில் இருந்தும் தூர விலகச் செய்து, பாலின சமத்துவத்தை நோக்கிய நமது முன்னேற்றத்தைத் தடுக்கும்" என்று அவிநாஷ் கூறியுள்ளார்.

ரியா

பட மூலாதாரம், Getty Images

ரியாவுக்கு நீதிமன்ற காவல்

முன்னதாக, இந்த வழக்கில் காணொளி வாயிலாக குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ரியாவை செவ்வாய்க்கிழமை அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். அப்போது ரியாவுக்கு எதிரான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாலும், அவரிடம் ஏற்கெனவே விசாரணை நடத்தியிருப்பதாலும் அவரை உடனடியாக காவலில் எடுக்கும் தேவை எழவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதேசமயம், அவரை வெளியே அனுமதித்தால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது என்றும் அதிகாரிகள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கு ஆட்சேபம் தெரிவித்த ரியாவின் வழக்கறிஞர்,அவரை ஜாமீனில் விடுவிக்க வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அதை ஏற்க மறுத்த நீதிபதி செப்டம்பர் 22ஆம் தேதி வரை ரியாவை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

ஒரே நாளில் அடுத்தடுத்த திருப்பம்

போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான வழக்கில் ரியாவிடம் கடந்த மூன்று நாட்களாக தேசிய போதைப்பொருள் தடுப்புத் துறை விசாரித்து வந்தது.

சுஷாந்த் சிங் ராஜ்புத் மர்ம மரணம் தொடர்பான வழக்கை ஏற்கெனவே சிபிஐ விசாரித்து வருகிறது.

அதில், போதை தரும் மாத்திரைகளை அவர் பயன்படுத்தியதாக தெரிய வந்ததை அடுத்து, அவருக்கு போதைப்பொருள் எவ்வாறு கிடைத்தது என்பது குறித்து விசாரித்து வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்த விவகாரத்தில் பாலிவுட் திரையுலக பிரபலங்கள் சிலருக்கு போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுடன் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டதை அடுத்து, இது தொடர்பான வழக்கை தேசிய போதைப்பொருள் தடுப்புத் துறை தனியாக விசாரித்து வருகிறது.

சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கு ஒருபுறமும், அவருக்கு இருந்த போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான சர்ச்சை தகவல் மறுபுறமும் என இந்த விவகாரம் புதிய திருப்பத்தை எட்டி வருகிறது.

இதில் போதைப்பொருள் விவகாரத்தை தேசிய போதைப்பொருள் தடுப்புத்துறை விசாரித்து வருகிறது.

சுஷாந்த் சிங் மரணத்துக்கு பிறகு ரியா சக்ரவர்த்தி, அவரது சகோதரர் ஷோவிக் சக்ரவர்த்தி, நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தங்கியிருந்த வீட்டின் மேலாளர் சாமுவேல் மிராண்டா ஆகியோரிடம் சிபிஐ, போதைப்பொருள் தடுப்புத்துறை கடந்த சில நாட்களாக விசாரித்து வந்தன.

ரியா

பட மூலாதாரம், Getty Images

இதில் ரியாவின் சகோதரர் ஷோவிக் சக்ரவர்த்தி, நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தங்கியிருந்த வீட்டின் மேலாளர் சாமுவேல் மிராண்டா ஆகியோரை கடந்த 4ஆம் தேதி போதைப்பொருள் தடுப்புத்துறையினர் கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து ரியா சக்ரவர்த்தியிடம் மூன்று நாட்களாக தேசிய போதைப்பொருள் தடுப்புத்துறை விசாரித்து வந்தனர். இதையடுத்து, செவ்வாய்க்கிழமை பிற்பகலில் விசாரணைக்கு வந்தபோது அவர் கைது செய்யப்பட்டதாக அந்தத்துறையின் துணை இயக்குநர் கே.பி.எஸ் மல்ஹோத்ரா தெரிவித்தார்.

ஒரே மரணம்: 3 துறைகளின் விசாரணை

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மர்மமான முறையில் கடந்த ஜூன் 14ஆம் தேதி தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது மறைவுக்கு பாலிவுட் திரையுலகம் மட்டுமின்றி நாடு முழுவதும் ரசிகர்கள் அதிர்ச்சியையும் இரங்கலையும் பதிவு செய்தனர்.

பாலிவுட்டில் குறிப்பிட்ட பிரபலங்கள், அவர்களின் வாரிசுகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகவும் அதற்கு பலிகடா ஆகி விட்டார் சுஷாந்த் சிங் ராஜ்புத் என்றும் ஒரு சிலர் பேசத்தொடங்கினார்கள்.

அவரது மரணம் தொடர்பாக முதலில் மும்பை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார்கள்.

ஆனால், தனது மகனின் சாவில் சந்தேகம் இருப்பதாக பிஹார் மாநிலத்தில் உள்ள சுஷாந்த்தின் தந்தை அங்குள்ள காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன் அடிப்படையில், அந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு பிஹார் மாநில அரசு மாற்றி உத்தரவிட்டது. அந்த நடவடிக்கையை மகாராஷ்டிரா காவல்துறையும், ரியா சக்ரவர்த்தியும் எதிர்த்து உச்ச நீதிமன்ற்ததில் மனு தாக்கல் செய்தனர். ஆனால், பிஹாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவிட்ட மாநில அரசின் நடவடிக்கை சட்டப்பூர்வமானது என்று உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டது.

இந்த நிலையில், சுஷாந்த் சிங் வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், அவரது வங்கிக்கணக்கில் நடந்த கோடிக்கணக்கான நிதிப்பரிவர்த்தனை தொடர்பாக தெரிய வந்தது. இதையடுத்து இந்திய அமலாக்கத்துறை இயக்குநரகம் தனியாக அந்த விவகாரத்தை விசாரிக்கத் தொடங்கியது. அது தொடர்பாக சுஷாந்த் சிங்கின் தந்தை கே.கே. சிங், சுஷாந்தன் காதலியாக இருந்த ரியா சக்ரவர்த்தி, அவரது சகோதரரும் சுஷாந்தின் நண்பருமான ஷோவிக் சக்ரவர்த்தி உள்ளிட்டோரிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினார்கள்.

இந்த நிலையில், சுஷாந்த் சிங்குக்கு பதற்றம் தொடர்புடைய பாதிப்பு இருந்ததாகவும், அதில் இருந்து மீள அவர் சில மாத்திரைகளை பயன்படுத்தியாதகவும் ரியா சக்ரவர்த்தி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார்.

இந்த பேட்டி கொடுப்பதற்கு முன்னதாக, அவரை சிபிஐ விசாரணைக்கு அழைத்திருந்தது. ஆனால், விசாரணை அதிகாரிகள் முன்பு ஆஜராகும் முன்பே, சுஷாந்த் சிங்குக்கு போதைப்பொருள் பழக்கம் இருந்ததாக சில தகவல்களை ரியா வெளியிட்ட ஊடகங்களில் விவகாரம் சர்ச்சையானது.

இந்தப் பின்னணியில், போதைப்பொருள் பயன்பாடு சுஷந்த் சிங், ரியா சக்ரவர்த்தி, ஷோவிக் குழுவுக்கு எப்படி கிடைத்தது, அதில் யாருக்கு எல்லாம் தொடர்பு உள்ளது என்பதை தேசிய போதைப்பொருள் தடுப்புத்துறை விசாரித்து வருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: