சுஷாந்த் சிங்: பாலிவுட் எனும் விசித்திர சந்தை, உள்ளிருந்து ஒலிக்கும் எதிர்ப்பு குரல்கள்

பட மூலாதாரம், getty images
- எழுதியவர், சின்கி சின்ஹா
- பதவி, பிபிசி செய்தியாளர்
மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் ஒரு பாலிவுட் நடிகர் மட்டுமல்ல, ஒரு வானியல் ஆர்வலரும் கூட. வானியல் குறித்த அதீத ஆர்வத்தின் காரணமாக வீட்டிலே ஒரு பெரிய தொலைநோக்கியையும் அவர் வைத்திருந்தார். சில வானியல் நிகழ்வுகளைப் பார்ப்பதற்காகவே நண்பர்களை அவர் ஒருங்கிணைப்பார் என்கிறார் சுஷாந்தின் நண்பரும் நடிகருமான ரன்வீர் ஷோரே.
வானியல் குறித்தும் மட்டுமல்ல, கணிதக் கோட்பாடுகள் குறித்தும் சுஷாந்த் தனக்குச் சொல்லிக்கொடுத்ததாகக் கூறுகிறார் ரன்வீர்.
விசித்திர சந்தை
சுஷாந்தின் மரணம் குறித்து அறிந்தபோது அதிர்ச்சி அடைந்ததாகக் கூறும் ரன்வீர், பாலிவுட் ஒரு மோசமான இடம் என்கிறார். சுஷாந்த் ஏற்கனவே பிரபலமான ஹீரோவாக இருந்த போதிலும், அவர் பாலிவுட்டில் ஓரம்கட்டப்பட்டார் என கூறுகிறார் ரன்வீர்.
''பாலிவுட்டில் வெற்றியும் புகழும் எப்போது வரும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. பாலிவுட் குறித்த என்ன கற்பனைகள் இருந்தாலும், இது ஒரு வியாபார சந்தைதான். விசித்திரமான இந்த சந்தை ஒரு சார்புடையது, மன்னிப்பே கொடுக்காதது'' என்கிறார் ரன்வீர்.
குடும்பம், நண்பர்கள் மற்றும் தொலைநோக்கி
''பாலிவுட்டில் இரண்டு விதமான பிரபலங்கள் உள்ளனர். ஒன்று மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துப் பிரபலமாவது. மற்றொன்று தெரிந்தவர்களுக்கு மட்டும் தரப்படும் முன்னுரிமை, ஆதாயம் மூலம் பிரபலமாவது. சுஷாந்த் சிங் தனது உழைப்பின் மூலம் ஹீரோ ஆனவர். பல நிராகரிப்பு மற்றும் அவமானங்களைச் சந்தித்து, பின்னர் பாலிவுட்டில் பிரபலமானவர்'' என்று கூறுகிறார் ரன்வீர்.
தடைகளை மீறி தடம் பதித்த சுஷாந்த், மன அழுத்தம் காரணமாகச் சிகிச்சை பெற்றுவந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை தனது குடும்பத்தினரையும், நண்பர்களையும், தொலைநோக்கியையும் விட்டுவிட்டு அவர் சென்றுவிட்டார்.
தற்கொலை செய்துகொண்டபோது சுஷாந்த் எந்த குறிப்பும் விட்டு செல்லவில்லை என காவல்துறை கூறுகிறது. ஆனால், அவர் பல கவிதைகளையும், புகைப்படங்களையும் விட்டு சென்றுள்ளார். அந்த புகைப்படங்களில் பெரும்பாலானவை வானியல் நிகழ்வுகளைக் கொண்டவை. அத்துடன், சுஷாந்த் அறிவியல் ஆர்வலரும் கூட, கவிதைகளைக் கூட எழுதியுள்ளார்.

பட மூலாதாரம், getty images
அமெரிக்க நாவலாசிரியர் பிலிப் ரோத் நாவல்களையும், ரால்ப் வால்டோ எமர்சனின் கட்டுரைகளையும் சுஷாந்த் படித்திருக்கிறார். இரவில் வீட்டிலிருந்தபடியே நிலவையும், நட்சத்திரங்களையும் காண 200 கிலோ எடையிலான தொலைநோக்கியை வைத்திருந்தார்.
பாலிவுட்டும், நெபோடிசமும்
பாலிவுட்டில் குறிப்பிட்ட சிலருக்கும் , தங்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் திரைப்படங்களில் முன்னுரிமை, ஆதாயம் கொடுப்பது (நெபோடிசம்) நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. சுஷாந்தின் மரணத்திற்குப் பிறகு நெபோடிசம் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.
சுஷாந்தை தற்கொலைக்குத் தூண்டியதாக சில பாலிவுட் நடிகர்கள் மற்றும் இயக்குநர்களுக்கு எதிராக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
எவ்வித குடும்ப பின்னணியும் இல்லாமல் பாலிவுட்டிற்கு வந்தார் சுஷாந்த். ரசிகர்கள் அவரை கொண்டாடினர். இவரது முதல் படமான கை போ சேவில், இவர் நடித்த கிரிக்கெட் வீரர் கதாபாத்திரத்தைப் பாலிவுட் ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிடவில்லை.
பல கனவுகளுடன் பிகாரில் சாதாரண குடும்பத்தில் 1986ல் பிறந்தார் சுஷாந்த். பொறியியல் படிக்க தேர்வானார். ஆனால், படிப்பை முழுமையாக முடிக்காமல், நடிக்க வந்தார். தன்னுடன் பிறந்த 5 சகோதர சகோதரிகளில் சுஷாந்த் இளையவர். அம்மாவுக்கு நெருக்கமான மகனாக இருந்த சுஷாந்த் 2002-ம் ஆண்டு தனது அம்மாவை இழந்தார்.
ஒரு மத்திய ரக குடும்பத்தில் பிறந்த சுஷாந்த், ஏற்கனவே திரைத்துறையில் தடம் பதித்த நடிகர்கள் மற்றும் இயக்குநர்களின் மகன்களுடன் போட்டிப்போட வேண்டியிருந்தது.
பாலிவுட்டில் தற்போது முன்னணி ஹீரோக்களில் ஒருவரான ரன்பீர் கபூர், மறந்த நடிகர் ரிஷி கபூன் மகன். இந்த குடும்பத்திலிருந்து வரும் நான்காம் தலைமுறை நடிகர் ரன்பீர் கபூர். இப்படிப்பட்ட நெபோடிஸத்தை கடந்துதான் புதியவர்கள் வாய்ப்பு தேட வேண்டியுள்ளது.
''நெபோடிசம் ஒரு நோய் போன்றது. இது வாய்ப்பு தேடும் புதியவர்களைத் தனிமைப்படுத்தும், மன உளைச்சலை ஏற்படுத்தும்,'' என்கிறார் இயக்குநர் விகாஸ் சந்திரா.
கனவும், கஷ்டமும்
புதியவர்களுக்கு மட்டுமல்ல, என்னைப் போன்ற பிரபலங்களின் வாரிசுகளும் பாலிவுட்டில் பெயர் வாங்க வேண்டும் என்றால் கஷ்டப்பட வேண்டும் என நடிகை அனன்யா பாண்டே கூறியதற்குப் பதில் அளித்த கல்லி பாய் படத்தில் நடித்த சித்தார்த் சதுர்வேதி,'' நாங்கள் கனவு காணத் துவங்கும்போதே கஷ்டங்கள் ஆரம்பிக்கிறதே அதற்கு என்ன செய்ய?'' என பதில் கொடுத்தார்.

பட மூலாதாரம், getty images
சுஷாந்தின் வாழ்க்கையும், நடிகர் குல்ஷான் தேவ்வய்யாவின் வாழ்க்கையும் கிட்டதட்ட ஒன்றுதான். நடிகராக வேண்டும் என்பதற்காகப் பெங்களூருவிலிருந்து 10 ஆண்டுகளுக்கு முன்பு மும்பை வந்தார் தேவ்வய்யா. ''ஹிந்தி திரைப்பட உலகில் மிகப்பெரிய ஸ்டார் ஆக வேண்டும் என சிறுவயதில் முட்டாள்தனமாகக் கனவு கண்டேன்'' என்கிறார் அவர்.
''வாய்ப்புக்காக ஒவ்வொரு வருடமும் 200-300 ஆடிஷன்களுக்கு செல்வேன். அப்போது நீங்கள் உங்களது சுயமரியாதையைத் தூக்கி எரிந்துவிட்டு, அவமானங்களைத் தாங்கிக்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். வெளியிலிருந்து வந்தவராக இருந்தால் உங்களை அவர்கள் நடத்தும் விதம் வேறுமாறியாக இருக்கும்'' என்கிறார் குல்ஷான் தேவ்வய்யா
'' ஹீரோக்களின் வாரிசுகளுக்கு எப்போதும் தனி சலுகைகள் உண்டு. நாங்கள் ராஜஸ்தானில் படப்பிடிப்பு நடத்திக்கொண்டிருந்தபோது, அமீர்கானின் மகள் உதவி இயக்குநாராக பணியாற்றிக்கொண்டிருந்தார். அப்போது அவரை பார்க்க நூற்றுக்கணக்கான மக்கள் கூடினர். அவர் எப்படி இருப்பார் என்பது கூட அதில் பலருக்கு தெரியாது. ஆனால், அவர்கள் அங்குக் கூடினார்கள். பிரபலங்களின் வாரிசுகளுக்கு இருக்கும் சிறப்பு சலுகை இதுதான்.'' என்கிறார் அவர்.
''என்ன இருந்தாலும் சினிமா வெற்றியே ஒரு நடிகரின் தலையெழுத்தைத் தீர்மானிக்கிறது. ஷாருக்கானுக்கு எந்த சினிமா பின்னணியும் இல்லை. ஆனால், அவர் பெரிய கதாநாயகரானார். ஆனால் பல பிரபலங்களின் வாரிசுகளால் தடம் பதிக்க முடியவில்லை. '' எனவும் அவர் தெரிவிக்கிறார்.
ஷாரூக்கானை போலவே நவாசுதீன் சித்திக், இர்பான் கான், சுஷாந்த் போன்ற நடிகர்கள் சினிமா பின்னணி இல்லாமல் வந்து ஹீரோ ஆனவர்கள்.
பிற செய்திகள்:
- சாத்தான்குளம் தந்தை மகன் சிறையில் பலி: டி.ஜி.பி. எஸ்.பி. ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
- விளாதிமிர் புதின்: அசைக்க முடியாத இந்த ரஷ்யத் தலைவரை இப்போது உலகம் கவனிப்பது ஏன்?
- சாத்தான்குளம்: போலீஸ் ஆட்சி நடப்பதாக ஸ்டாலின் விமர்சனம், மற்ற தலைவர்கள் கருத்து
- சீனாவுக்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்க வரைபடம் - சமூக வலைதளத்தில் கிண்டல்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













