சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை: சோகத்தில் உயிரிழந்த சகோதரர் மனைவி

பட மூலாதாரம், Twitter / Sushant Singh Rajput
முக்கிய இந்திய நாளிதழ்கள் மற்றும் அவற்றின் இணைய பக்கங்களில் வெளியான சில செய்திகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
டைம்ஸ் ஆஃப் இந்தியா: சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலையால் உறவுக்காரப் பெண் பலி
இந்தி திரைப்பட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்ட செய்தி திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அவரது மரணத்தைத் தாங்கிக்கொள்ள இயலாமல் அவரது அண்ணி ஒருவர் இறந்துள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் ஒன்று விட்ட சகோதரரின் மனைவி சுதா தேவி என்பவர், திங்களன்று சுஷாந்தின் இறுதிச்சடங்குகள் மும்பையில் நடைபெற்றுக்கொண்டிருந்த அதே சமயத்தில், அவரது சொந்த ஊரான பிகார் மாநிலம் பூர்ணியாவில் உயிரிழந்துள்ளார் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
சுஷாந்த் ஞாயிறன்று தற்கொலை செய்துகொண்ட தகவல் தெரிந்தபின் உணவு உட்கொள்வதை அவர் நிறுத்திக்கொண்டார் என்று அந்தச் செய்தி தெரிவிக்கிறது.
திரையுலகில் முதலில் நடனக் கலைஞராக தன் பயணத்தை தொடங்கினார் சுஷாந்த் சிங் ராஜ்புத். பின்னர் அவருக்கு 'கிஸ் தேஷ் மே ஹை மேரா தில்' என்ற தொலைக்காட்சி தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பின்னர் 'பவித்ர ரிஷ்தா' என்னும் தொடரின் மூலம் அவர் பிரபலமடைந்தார்.
2006ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியின் தொடக்க விழாவில் ஐஸ்வர்யா ராய் பங்கேற்ற நடன நிகழ்ச்சி ஒன்றில் பின்னணி நடன கலைஞராக இருந்தார்.
'காய் போ சே' என்னும் படத்தின் மூலம் அறிமுகமான இவர் ஆமிர் கான் படமான பிகேவில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தின் மூலம் பரந்துபட்ட ரசிகர்களுக்கு இவர் அறிமுகமானார். சமீபத்தில் 'சிசோரே' என்னும் பாலிவுட் படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார் சுஷாந்த்.
அவரது இறப்புக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

தி இந்து: இந்தியா - சீனா எல்லையில் பேச்சுவார்த்தை
இந்தியா - சீனா இடையே நிலவி வரும் எல்லை பதற்றத்தைத் தணிக்க, கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பகுதியில் இரு நாடுகளைச் சேர்ந்த படைப்பிரிவு தளபதி மற்றும் கமாண்டிங் அதிகாரிகள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
எல்லையில் உள்ள இரு கண்காணிப்பு பகுதியில், ராணுவக்குவிப்பை குறைப்பது தொடர்பாக இந்த பேச்சுவார்த்தை நடந்தது.
இந்தியா - சீனா எல்லை பிரச்சனை கடந்த சில வாரங்களில் பூதாகரமாகி வருகிறது. சர்ச்சைக்குரிய காஷ்மீர் பிராந்தியத்தில் அதாவது லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா தனக்குச் சொந்தமான இடம் என்று கருதும் எல்லைப்பகுதிகளில் சீனப் படைகள் கூடாரம் அமைத்து, சுரங்கங்கள் தோண்டி அதன் வழியாகக் கனரக உபகரணங்களை கொண்டு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா கட்டுமானப்பணிகளைச் செய்வதைத் தொடர்ந்து சீனா சார்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினத்தந்தி - பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு

பட மூலாதாரம், Getty Images
அனைத்து வகை பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கைக்கான எந்த வித பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது என்கிறது தினத்தந்தி செய்தி.
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் அறிவித்ததில் இருந்து சில தனியார் பள்ளிகளில் 11ஆம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை பணிகள் நடைபெறத் துவங்கின.
இதனையடுத்து மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குனர் கருப்பசாமி, பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நடத்தக்கூடாது என்று சுற்றறிக்கை வெளியிட்டார்.
பள்ளிக்கல்வித்துறையின் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சார்பாக தமிழகம் முழுவதும் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு அவசர சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் அனைத்து வகை பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கைக்கான எந்த விதமான பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













