பாகிஸ்தானில் இந்திய தூதரக ஊழியர்கள் கைது; அதே நாளில் விடுதலை

பட மூலாதாரம், Handout
பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றும் சில்வதேஷ் பால் எனும் வாகன ஓட்டுநர் மற்றும் தவாமு பிரகாமு எனும் பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் காணாமல் போன விவகாரத்தில், புதிய திருப்பமாக அவர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் சென்ற பி.எம்.டபிள்யூ கார் சாலையில் சென்ற ஒருவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றதால் அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும், வேறு நாடுகளின் வெளியுறவு அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க இயலாது என்பதால் அவர்கள் திங்கள் இரவு விடுவிக்கப்பட்டதாகவும் இஸ்லாமாபாத் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த இருவரும் சென்ற கார் மோதி விபத்துக்குள்ளான நபர், கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர்களிடம் 10,000 பாகிஸ்தான் ரூபாய் கள்ள நோட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக முதல் தகவல் அறிக்கை தெரிவிப்பதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னதாக, அவர்களை எவ்வித துன்புறுத்தலுக்கும் உள்ளாகாமல் ஒப்படைக்கப்பட வேண்டும் என டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதர் பொறுப்பு வகிக்கும் அதிகாரியை நேரில் அழைத்து இந்திய வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தியது.
அவர்கள் இருவரும் பாகிஸ்தானின் பாதுகாப்பு அதிகாரிகளின் பிடியில் சிக்கியிருக்கலாம் என்று கூறப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
ஒரு சில நாட்களுக்கு முன்புதான், இரண்டு பாகிஸ்தான் உயர் ஆணைய (தூதரக) அதிகாரிகள் உளவு பார்த்தாக குற்றஞ்சாட்டி, இந்தியா அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றியது.
இந்திய - பாகிஸ்தான் எல்லையில் படைகளின் நடமாட்டம் குறித்த தகவல்களை அறிய அவர்கள் முற்பட்டதாக இந்திய அரசு அவர்கள் மீது குற்றம் சுமத்தியது. இதை பாகிஸ்தான் தரப்பு மறுத்தது.
இந்நிலையில் திங்களன்று பாகிஸ்தானில் இரண்டு இந்திய அதிகாரிகள் காணாமல் போணது அதற்கான பழிவாங்கும் நடவடிக்கையாக பார்க்கப்பட்டது.
இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட்ட இரு உயர் ஆணைய அதிகாரிகளும் இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் செல்பவர்களுக்கு விசா வழங்கும் பிரிவில் பணிபுரிந்து வந்தனர்.
அவர்கள் இருவருமே இந்திய அரசின் முக்கிய ஆவணம் ஒன்றை கைப்பற்ற முயற்சித்ததாகக் கூறப்பட்டது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












