சாத்தான்குளம் தந்தை மகன் சிறையில் பலி: ரூ.10 லட்சம் நிதியுதவி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில் செல்போன் கடை வைத்திருந்த தந்தை - மகன் காவல்துறையால் அழைத்துச் செல்லப்பட்டு, கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்த நிலையில் அவர்களது குடும்பத்தினருக்கு தலா பத்து லட்சம் ரூபாய் அளிப்பதாகவும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிப்பதாகவும் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தங்களது கடையை கூடுதல் நேரம் திறந்திருந்த காரணத்தால் காவல்துறையினருடன் ஏற்பட்ட தகராறில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை - மகன் ஆகிய இருவரும் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடுத்தடுத்து மரணமடைந்தனர்.
இதையடுத்து அவர்களது குடும்பத்தினரும் உறவினர்களும் போராட்டத்தில் இறங்கினர். சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை, இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்தது. மாநில மனித உரிமை ஆணையமும் நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நிலையில் இது தொடர்பாக மாநில முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூன் 22ஆம் தேதி இரவு ஏழரை மணியளவில் சிறையில் இருந்த பென்னிக்ஸ் தனக்கு மூச்சுத் திணறுவதாகக் கூறியதாகவும் சிறைக் காவலர்கள் பென்னிக்ஸை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்ததாகவும் சிகிச்சை பலனின்றி பென்னிக்ஸ் இரவு 9 மணியளவில் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
அதேபோல, அவரது தந்தை ஜெயராஜ் 23ஆம் தேதியன்று அதிகாலையில் சிறையில் தனக்கு உடல்நலக் குறைவு இருப்பதாக தெரிவித்ததையடுத்து சிறைக் காவலர்கள் அவரை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தபோதும் அவர் சிகிச்சை பலனின்றி காலை 5.40 மணியளவில் உயிரிழந்ததாகவும் முதலமைச்சரின் அறிக்கை தெரிவிக்கிறது.
சிறையில் இருந்தபோது உயிரிழந்ததால், இது தொடர்பாக வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருப்பதாகவும் இது தொடர்பாக விசாரித்துவரும் நீதித் துறை நடுவரின் அறிக்கையின் அடிப்படையிலும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இது தொடர்பாக பிறப்பிக்கவுள்ள உத்தரவின் அடிப்படையிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
மேலும், ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு தலா பத்து லட்சம் ரூபாயை முதலமைச்சரின் நிவார நிதியிலிருந்து வழங்குவதாகவும் அக்குடும்பத்தில் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு தகுதிக்கேற்ப ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
"சாத்தான்குளம் சம்பவம்போல இனி நடக்காமல் இருக்க வேண்டும்"
கொரோனா காலகட்டத்தில் காவல்துறை மக்களிடம் காவல்துறை கடுமையாக நடந்துகொள்ளக் கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், http://www.hcmadras.tn.nic.in
இந்த நிலையில் இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தாமாக முன்வந்து விசாரித்தது. நீதிபதிகள் பி.என். பிரகாஷ், புகழேந்தி அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இந்த விவகாரத்தைத் தாங்கள் தீவிரமாக எடுத்துக் கொண்டிருப்பதாகவும் இது தொடர்பாக தமிழக காவல்துறை தலைவரும் தூத்துக்குடி காவல்துறை கண்காணிப்பாளரும் பிற்பகல் 12.30 மணியளவில் வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் ஆஜராக வேண்டுமெனக் கூறினர்.
இதற்குப் பதிலளித்த அரசுத் தரப்பு வழக்கறிஞர், தூத்துக்குடி காவல்துறை கண்காணிப்பாளர் ஆஜராவார் என்றும் தமிழக காவல்துறை தலைவர் ஆஜாரவது குறித்து, விசாரித்து தகவல் தெரிவிப்பதாகவும் கூறினார்.
இதையடுத்து வழக்கு 12.30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
12.30 மணிக்கு விசாரணை துவங்கியபோது, காவல்துறைத் தலைவர் முதலமைச்சருடனான ஆலோசனைக் கூட்டத்தில் இருப்பதால், தென் மண்டல ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் ஆகியோர் காணொளிக் காட்சி மூலம் ஆஜராயினர்.
சம்பந்தப்பட்ட காவல்துறையினர் இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும் அந்தக் காவல் நிலையத்தில் இருந்தவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
இதற்குப் பிறகு, இந்த விவகாரத்தைத் தாங்கள் தீவிரமாக எடுத்துக்கொண்டிருப்பதாகவும் நீதிமன்ற நடுவரின் விசாரணையில் எந்தவித குறுக்கீடும் இருக்க கூடாது என்றும் பிரேத பரிசோதனையை முழுமையாக வீடியோ பதிவுசெய்ய வேண்டும் என்றும் சாத்தான்குளம் சம்பவம்போல் தமிழகத்தில் இனி நடக்காமல் இருக்க காவல்துறை தலைவர் உத்தரவு பிறப்பிக்கலாம் என்றும் இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 26ஆம் தேதிக்குள் நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
வழக்கு ஜூன் 26ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பிரேதப் பரிசோதனை
தந்தை மகன் சடலங்களை மூன்று மருத்துவர்கள் அடங்கிய குழு பிரேதப் பரிசோதனை செய்ய சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தந்தை - மகன் ஆகிய இருவரது உடல்களும் பிரேதப் பரிசோதனை செய்யப்படவுள்ளன.
இந்தப் பிரேதப் பரிசோதனையை மூன்று மருத்துவர்கள் அடங்கிய மருத்துவர்கள் குழு செய்ய வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில், மருத்துவர்கள் பிரசன்னா, சீதாலட்சுமி, செல்வமோகன், ஸ்ரீதர், சேனா ஆகிய ஐந்து பேரில் மூன்று பேர் பிரேதப் பரிசோதனையைச் செய்வர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தந்தை - மகன் ஆகிய இருவரையும் அடித்துக் கொன்றதாகக் குற்றம்சாட்டப்படும் காவலர்களைக் கைதுசெய்ய வேண்டுமெனக் கோரி கடையடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து சாத்தான்குளம், ஸ்ரீ வைகுண்டம் பகுதிகளிலும் கோவில்பட்டி, திருச்சந்தூர் பகுதிகளில் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. திருநெல்வேலி, மயிலாடுதுறை மாவட்டங்களிலும் பெரும் எண்ணிக்கையிலான கடைகள் மூடப்பட்டிருந்தன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












