சுஷாந்த் சிங் மரணம்: ரியா சக்ரவர்த்தியின் சகோதரர் கைது

ரியா

பட மூலாதாரம், RHEA CHAKRABORTY / INSTAGRAM

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான வழக்கில் விசாரிக்கப்பட்டு வரும் அவரது முன்னாள் தோழி ரியா சக்ரவர்த்தியின் சகோதரர் ஷோவிக் சக்ரவர்த்தியை போதைப்பொருள் கடத்தல் தடுப்புத்துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.

முன்னதாக, இந்த வழக்கு தொடர்பாக ரியா சக்ரவர்த்தியின் சகோதரர் ஷோவிக்கிடம் போதைப்பொருள் தடுப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சுஷாந்த் சிங் ராஜ்புத் தங்கியிருந்த வீட்டின் மேலாளர் சாமுவேல் மிராண்டாவின் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

பிறகு சோஷவிக், சாமுவேல் மிராண்டா ஆகிய இருவரையும் அதிகாரிகள் விசாரணைக்காக அவர்களின் அலுவலகத்துக்கு அழைத்தச் சென்றனர். இந்த நிலையில், அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் இன்று 9 மணியளவில் தெரிவித்தனர்.

சுஷாந்த் சிங் பயன்படுத்திய போதை மாத்திரைகள் தொடர்பான விவகாரத்தில் தொடர்புடையதாக ஏற்கெனவே ஜைத் விலாத்ரா, அப்தெல் பாசிட் பரிஹார் ஆகிய இருவரை அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களுக்கு உதவியதாக கருதப்படும் கைஜான் இப்ராஹிமிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடந்த ஜூன் மாதம் மும்பையில் உள்ள தனது குடியிருப்பில் தூக்கிட்ட நிலையில் சுஷாந்த் சிங் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அவரது மரணம் தொடர்பாக பிஹாரில் உள்ள சுஷாந்தின் தந்தை எழுப்பிய சந்தேகத்தை தொடர்ந்து அவரது பதிவு செய்த புகார் அடிப்படையில் அந்த வழக்கை மத்திய புலனாய்வுத்துறை விசாரணைக்கு பிஹார் அரசு மாற்றியது. இதை பின்னர் இந்திய உச்ச நீதிமன்றமும் உறுதுப்படுத்தியது.

இந்த வழக்கு தொடர்பாக, சிபிஐ அதிகாரிகள் குழு மும்பை டிஆர்டிஓ விருந்தினர் மாளிகையில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில், சுஷாந்த் சிங் ராஜ்புத், மன அழுத்தம் மற்றும் பதற்றம் காரணமாக போதை தரும் மாத்திரியை உபயோகிக்கும் பழக்கம் இருந்ததாக விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து போதைப்பொருள் கடத்தல் தடுப்புத்துறையினர் தனியாக இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இரு தினங்களுக்கு முன்பு ரியா சக்ரவர்த்தியிடமும் அவரது தந்தையிடமும் சிபிஐ விசாரணை நடத்திய நிலையில், ரியாவிடம் போதைப்பொருள் தடுப்புத்துறையினர் விசாரணை நடத்தினார்கள்.

மும்பையில் போதைப்பொருள் பயன்படுத்தும் கும்பல், பாலிவுட் திரைப்பட உலகில் எந்த அளவுக்கு தொடர்பில் உள்ளது, அந்த கும்பலில் இருப்பவர்கள் யார், எங்கிருந்து அவர்களுக்கு போதைப்பொருள் கிடைக்கிறது என்பது குறித்த தகவல்கள், இந்த வழக்கில் மேலும் சில பெரும்புள்ளிகள் சிக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: