மதுரையில் மறைந்த மனைவிக்கு தத்ரூபமாக சிலை வடித்த தொழிலதிபர்

பட மூலாதாரம், Hindu Tamil
முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.
இந்து தமிழ் திசை: "மதுரையில் மறைந்த மனைவிக்கு சிலை வடித்த தொழிலதிபர்"
கர்நாடகா தொழில் அதிபரைப் போல், மதுரையிலும் இறந்த மனைவிக்கு தத்ரூபமாக சிலை வடித்து தனது மனைவி மீதான ஆழமான காதலை தொழில் அதிபர் ஒருவர் வெளிப்படுத்தியிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
மதுரை மேல பொன்னநகரத்தை சேர்ந்த தொழில் அதிபர் சி.சேதுராமன் (74) என்பவர், தனது மனைவி இறந்த 30 நாளில் அவருக்காக வீட்டிலே தத்ரூபமாக சிலை ஒன்றை வடிவமைத்துள்ளார்.
இவரது மனைவி பிச்சைமணி (68) அம்மாள் கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். கணவன், மனைவியாக இருவரும் 48 ஆண்டுகள் வாழ்ந்துள்ளனர். இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் செய்து கொடுத்துவிட்டனர்.
ஆரம்ப காலத்தில் சேதுராமன், அரசு மருத்துவமனையில் சுகாதார ஆய்வாளராக பணிபுரிந்துள்ளார். மிகக் கடினமான அந்த வாழ்க்கைச் சூழலில், அவரது மனைவி கொடுத்த ஊக்கத்தாலேயே சேதுராமன், அரசு வேலையைவிட்டுவிட்டு, சொந்தமாக மதுரையில் ரத்த வங்கி தொடங்கினார். அதன்பிறகு மதுரையின் முக்கிய தொழில் அதிபர்களில் ஒருவராக சேதுராமன் உயர்ந்தார்.
தன்னுடைய கடின காலத்திலும், மகிழ்ச்சியான நாட்களிலும் என 48 ஆண்டுகள் உடனிருந்த மனைவியின் மறைவை சேதுராமனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
அதனால், அவரது நினைவைப்போற்றும் வகையில் சேதுராமன், மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த சிற்பியான பிரசன்னா மற்றும் ஓவியர் மதுரை மருது ஆகியோரை கொண்டு தனது வீட்டிலே பைபர் மெட்ரியல் மூலம் 6 அடி உயரம் கொண்ட தனது மனைவியை தத்ரூபமாக சிலையாக வடிவமைத்தார்" என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி: "நான் தினமும் பசுவின் சிறுநீரைக் குடிக்கிறேன்"

பட மூலாதாரம், Twitter
தான் தினமும் பசுவின் சிறுநீரைக் குடித்து வருவதாக பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தெரிவித்துள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.
டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் 'இன்டு தி வைல்ட் வித் பியர் கிரில்ஸ்' என்னும் நிகழ்சிக்காக, அக்ஷய் குமார் சாகச நிகழ்ச்சித் தொகுப்பாளாரான பியர் கிரில்ஸ் உடன், கர்நாடகாவின் பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில் நடைபெற்ற படப்பிடிப்பில் பங்கேற்றிருந்தார்.
அந்த நிகழ்ச்சியானது இன்று ஒளிபரப்பாக உள்ளது. அதற்கு ஒரு முன்னோட்டமாக பியர் கிரில்ஸுடன் வியாழனன்று சமூக ஊடகமான இன்ஸ்டாகிராமில் நடைபெற்ற ஒரு நேரலை உரையாடல் நிகழ்வில் அக்ஷய் குமார் பங்கேற்றார்.
அப்போது 'இன்டு தி வைல்ட்' நிகழ்வில் யானையின் மலத்தில் இருந்து உருவாக்கப்பட்ட தேநீரை அருந்தியது குறித்து நடிகை ஹ்யூமா குரேஷி கேட்ட கேள்விக்கு பதிலளித்த அக்ஷய் குமார், 'எனக்கு பெரிய அளவில் சிரமங்கள் இல்லை. கவலைப்படும் நிலையில் இல்லாத அளவிற்கு நான் உற்சாகமாக இருந்தேன். ஆயுர்வேத காரணங்களுக்காக நான் தினமும் பசுவின் சிறுநீரைக் குடிக்கிறேன். எனவே எனக்கு இது பரவாயில்லை' என்று பதிலளித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினத்தந்தி: "அமெரிக்க அதிபர் தேர்தலில் பா.ஜனதாவின் பெயரை பயன்படுத்த வேண்டாம்"

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க அதிபர் தேர்தலில் பாரதிய ஜனதா கட்வியின் பெயரை பயன்படுத்த வேண்டாம் என அங்குள்ள பா.ஜ.க தொண்டர்களுக்கு அக்கட்சி அறிவுறுத்தி உள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவில் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்கிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பைடனும் போட்டியிடுகிறார்கள்.
இந்த இரு கட்சிகளும் அங்கு வாழும் இந்தியர்களின் ஆதரவை பெற தீவிரம் காட்டி வருகின்றன. இதில் குடியரசு கட்சி பிரசார கூட்டங்களில், பிரதமர் மோதியும், டிரம்பும் இந்தியா மற்றும் அமெரிக்காவில் சந்தித்துக்கொண்ட நிகழ்வுகளின் படங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இது குறித்து பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாட்டு உறவுகள் துறை தலைவர் விஜய் சவுதைவாலே பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், "எந்த தேர்தல் நடைமுறையும் ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரம் ஆகும். அதில் எந்தவகையிலும் பா.ஜனதாவின் பங்களிப்பு இல்லை" என்று தெரிவித்தார்.
அந்த வகையில், பா.ஜனதாவின் அமெரிக்க தொண்டர்கள் அதிபர் தேர்தலில் எந்த கட்சியையோ அல்லது நபரையோ ஆதரித்து நடைபெறும் பிரசாரங்களில் தனிப்பட்ட முறையில் பங்கேற்கலாம் எனவும், ஆனால் பா.ஜனதாவையோ அல்லது கட்சியின் வெளிநாட்டு பிரிவின் பெயரையோ பயன்படுத்த வேண்டாம் எனவும் அறிவுறுத்தி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:
- பிபிசி செய்தி எதிரொலி: நுரை தள்ளிய மெரினா கடற்கரை - தமிழக அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
- அமெரிக்க அதிபர் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சியில் ரஷ்ய, சீன ஹேக்கர்கள் - மைக்ரோசாஃப்ட் எச்சரிக்கை
- பெய்ரூட் கிடங்கில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்: அச்சத்தில் நகரை விட்டு வெளியேறும் மக்கள்
- இந்தி மொழிக்கு ஆதரவாளரா? சர்ச்சையில் சிக்கிய தங்கர் பச்சான் விளக்கம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












