லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் தீ விபத்து: அச்சத்தில் நகரை விட்டு வெளியேறும் மக்கள்

பட மூலாதாரம், Getty images
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது, அங்குள்ள துறைமுக கிடங்கில் மிகப்பெரிய வெடிப்பு சம்பவம் நடைபெற்ற ஒரு மாதத்திற்கு பிறகு அதே பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இம்முறை துறைமுகத்தில் எண்ணெய் மற்றும் டயர்கள் வைத்திருந்த கிடங்கில் திடீரென தீ பற்றியது. அதன் விளைவாக ஏற்பட்ட புகை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து காணப்பட்டது. அங்கு தீயை அணைக்க தீயணைப்பு வீரர்களும் ராணுவ அதிகாரிகளும் போராடி வருகின்றனர்.
தீ விபத்திற்கான காரணம் தெரியவில்லை.
சமூக வலைதளத்தில் பகிரப்படும் காணொளிகளில் துறைமுக ஊழியர்கள் புகைக்கு பயந்து ஓடி வருவது தெரிகிறது.
இந்த தீயால் சிலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளதாக லெபனானின் செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் ஜார்ஜ் கெட்டனே தெரிவித்துள்ளார். ஆனால் இந்த விபத்தில் யாரும் காயமடையவில்லை என ராய்ட்டர்ஸ் செய்தி முகமை கூறியுள்ளது.
மேலும் இந்த தீ விபத்தால் வெடிப்பு ஏற்படுமோ என அச்சம் கொள்ளத்தேவையில்லை என்று கெட்டனே தெரிவித்தார்.
எண்ணெய் பேரல்கள் வைத்திருந்த கிடங்கில் முதலில் தீப்பற்றியது. பிறகு அது அருகே இருந்த டயர்களில் பற்றி எரியத் தொடங்கியது என துறைமுகத்தின் இயக்குநர் பாசிம் அல் காய்ஸி வாய்ஸ் ஆஃப் லெபனான் என்ற வானொலி சேவைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.,
இந்த தீ விபத்து குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty images
இதற்கிடையே, அங்கு நிலைமை கட்டுக்குள் இருப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தபோதும், அதனால் சமாதானம் அடையாத பலர், தலைநகரை விட்டு வெளியேறி வருகிறார்கள்.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு கிடங்கில் உரிய பாதுகாப்பு இல்லாமல் வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட் காரணமாக வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.
அதில் 200க்கும் மேற்பட்டோர் பலியானார்கள், 3 லட்சத்துக்கும் அதிகமானோர் தங்களின் வீடுகளை இழந்தனர்.
ஆத்திரமடைந்த மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று ஆளும் அரசு பதவி விலகியது.
தற்போது ஏற்பட்டுள்ள தீ விபத்து கட்டுப்பாடிற்குள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டாலும் கடந்த மாதம் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த மக்கள் நகரை விட்டு வெளியேறியுள்ளனர்.
ஒரு சிலர் தற்போதைய தீ விபத்து, முந்தைய வெடிப்புச் சம்பவத்தை நினைவுபடுத்துவதாக தெரிவித்தனர்.
“நாங்கள் மிகுந்த பயத்தில் உள்ளோம். பெய்ரூட்டை அழித்த அந்த வெடிப்பு சம்பவம் நடந்து ஒரு மாதம்தான் ஆகிறது. இப்போது மீண்டும் மற்றொரு சம்பவம் நடந்திருக்கிறது,” என 53 வயது ஆண்ட்ரே முயார்பெஸ் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
- இந்தி மொழிக்கு ஆதரவாளரா? சர்ச்சையில் சிக்கிய தங்கர் பச்சான் விளக்கம்
- ’வடிவேல் பாலாஜியின் மரணம் பேரதிர்ச்சியை தருகிறது’ – விவேக், தனுஷ் உள்பட டிவிட்டரில் பிரபலங்கள் அஞ்சலி
- தென்னிந்திய திரைப்பட நடிகர்களுக்கு போதை பொருள் கும்பலுடன் தொடர்பா? - விரிவான தகவல்கள்
- ரஃபால் போர் விமானங்கள் இந்திய விமானப்படைக்கு ஏன் அவசியம்? - 10 முக்கிய தகவல்கள்
- கொரோனா வைரஸ்: பேருந்து, ரயில் மற்றும் மெட்ரோ ரயிலில் பாதுகாப்பாக பயணிப்பது எப்படி?
- 2019 - விளிம்பு நிலை மக்கள் தற்கொலைகளின் ஆண்டு: என்ன காரணம்?
- நீட் தேர்வை ரத்து செய்ய சட்டத்தின் வாயிலாக நியாயம் கிடைக்கவில்லை - முதல்வர் பழனிசாமி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












