உலக தற்கொலை தடுப்பு தினம்: 2019 - விளிம்பு நிலை மக்கள் தற்கொலைகளின் ஆண்டு

- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
இந்தியாவில் பொருளாதார மந்தநிலை நீடித்த 2019ல்,பொருளாதார சரிவுக்கு யார் காரணம் என பலத்த விவாதங்கள் நடைபெற்ற அதே ஆண்டில் தமிழகத்தில் சத்தமில்லாமல் 5,000க்கும் மேற்பட்ட தினக்கூலி தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டு வாழ்க்கையை முடித்துக்கொண்டார்கள்.
உலக தற்கொலை தடுப்பு தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 10ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தற்கொலையை தடுக்கும் விழிப்புணர்வு செய்தியை மக்களுக்கு கொண்டுசெல்லும் நோக்கில் தற்கொலை செய்து கொள்பவர்கள் யார், ஏன் அந்த அந்த முடிவை எடுக்கிறார்கள் என்ற விவரங்களை தேடினோம்.
செப்டம்பர் முதல் வாரத்தில் வெளியான தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் தற்கொலை செய்துகொண்டவர்களில் 23.4சதவீதம் பேர் தினக்கூலி வேலையில் இருந்தவர்கள். குறிப்பாக இந்தியாவில் தற்கொலை செய்துகொண்ட 32,5631தினக்கூலி தொழிலாளர்களில், 5,186தொழிலாளர்கள் தமிழகத்தில் இறந்துள்ளனர் என பதிவாகியுள்ளது.
தற்கொலை செய்துகொண்ட தினக்கூலி தொழிலாளர்கள் பலரின் ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்கும் குறைவாக உள்ளது என்றும் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் தினக்கூலியாக வேலைசெய்பவர்கள் அதிகம் இருப்பது கட்டட தொழிலில்தான் ஈடுபடுகிறார்கள் என்றும் அவர்கள் வாங்கிய கடனை செலுத்த முடியாத காரணத்தால் தற்கொலைக்கு தள்ளப்படுகிறார்கள் என்கிறார் கட்டட தொழிலாளர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளரான கீதா ராமகிருஷ்ணன்.
''மருத்துவ செலவு மற்றும் திருமணத்திற்காக செலவு செய்வதற்கு தினக்கூலி வேலையில் உள்ளவர்கள் கடன் பெறுகிறார்கள். வங்கிகளில் கடன் தருவதில்லை என்பதால், இவர்கள் தனியார் நிதி நிறுவனங்கள், மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் மற்றும் கந்துவட்டிக்காரர்களிடம் கடன் வாங்குகிறார்கள். பணமதிப்பிழப்பில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் கட்டடத்தொழிலாளர்கள் உள்ளிட்ட தினக்கூலி தொழிலாளர்கள்தான். இந்தியாவில் பெரும்பாலான மக்கள் பணத்தை நேரடியாக கூலியாக வாங்கும் எளிய மக்கள் என்பதை உணராமல் கொண்டுவந்த பணமதிப்பிழப்பின் தாக்கத்தைதான் நாம் இப்போது பார்க்கிறோம். சாதாரண மக்களை பொருளாதார சரிவு காவு வாங்கிவிட்டது என்பதைதான் இந்த புள்ளிவிவரங்கள் நமக்கு உணர்த்துகின்றன,''என்கிறார் கீதா.

பட மூலாதாரம், fergregory
சிறு குறு தொழில் நடத்தி தினமும் பணத்தை உடல் உழைப்பால் ஈட்டிவந்த மக்கள் சாம்பலாகிப்போன ஆண்டாக 2019ம் ஆண்டு இருந்தது என்கிறார் கீதா. ''ஜிஎஸ்டி என்ற வரியை கொண்டுவந்ததால், கடன் வாங்கி சுயதொழில் செய்துவந்த பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வு சூனியமானது. இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கில் அரசின் நிவாரணம் எதுவும் இந்த மக்களுக்கு கிடைக்கவில்லை. இவர்களின் தற்கொலைகளை நாம் அடுத்துவரும் ஆண்டுகளில் புள்ளிவிவரங்களாக பார்த்துவிட்டுப் போகவேண்டுமா? அரசு எளிய மக்களின் மரணத்திற்கான காரணங்களை பார்த்து தங்களின் முடிவை மாற்றிக்கொள்ளவேண்டிய நேரமிது,''என்கிறார் கீதா.
''குறைந்தபட்சம், கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டம் போல நகர்ப்புற ஏழை மக்களுக்கு அவர்களின் அன்றாட வாழ்க்கையை வாழ்வதற்கு ஊதியம் தரவேண்டும் என்ற பொறுப்பை அரசாங்கம் கையில் எடுக்கவேண்டும்.வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். இல்லாவிடில் இந்த இறப்புகள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கும்,''என வேதனையுடன் பேசினார் கீதா.

பட மூலாதாரம், domoskanonos
ஸ்னேஹா தற்கொலை தடுப்பு உதவி மையத்தை (044-2464 0050) நடத்திவரும் தன்னார்வலரும் மருத்துவருமான லட்சுமி விஜயகுமாரிடம் பெற்ற விவரங்கள் எளிய மக்களின் இறப்புகள் எப்படி தினமும் நடந்துகொண்டிருந்ததது என்பதை எடுத்துக்காட்டியது.
இந்தியாவில் சராசரியாக தினமும் 320 பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்கிறது அரசாங்க அறிக்கை. அந்த 300 பேரில்தான் இந்த தினக்கூலி மக்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு தற்கொலை தடுப்பு எண்ணத்தை ஏற்படுத்த விழிப்புணர்வு அளிக்கப்படவேண்டும் என்கிறார் லட்சுமி விஜயகுமார்.
''எங்கள் உதவி எண்ணை அழைக்கும் பலரும் குடும்ப பிரச்சனை மற்றும் பொருளாதார பிரச்சனைகளால் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் தோன்றியதாக கூறியுள்ளார்கள். வாங்கிய கடனை செலுத்த முடியாததால், தங்களது வீட்டுக்கு வந்து கடன் கொடுத்தவர்கள் மோசமாக பேசுவது, நடந்துகொள்வது போன்ற காரியங்களால் அவமானத்தை சந்திக்கிறார்கள். பலர் குடி நோய்க்கு ஆள்கிறார்கள். குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் பொருளாதார சிக்கலையும் சந்திக்கும்போது தன்னம்பிக்கையை இழந்துவிடுகிறார்கள்,''என்கிறார் லட்சுமி விஜயகுமார்.

தற்கொலை எண்ணம் ஏற்பட்டவர்கள் ஒரு சிலர் தங்களது நிலையை வெளிப்படுத்துவார்கள் என்றும் தற்கொலை தடுப்பு உதவி எண், மனநல ஆலோசனை சேவை போன்றவற்றை அவர்களுக்கு அறிமுகப்படுத்துவது அவசியம் என்கிறார் லட்சுமி விஜயகுமார்.
''பொருளாதார பிரச்சனைகளால் இறப்பவர்கள் பெரும்பாலும் நடுத்தர வயதை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் விதத்தில் ஆலோசனை சேவை கிடைத்தால், அவர்களின் பிரச்சனைகளை தாண்டி வாழமுடியும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தமுடியும்,''என்கிறார் அவர்.
இந்தியா முழுவதும் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இலவச உதவி எண் சேவையை நடத்தி வருகின்றன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












