பொறியியல் கல்லூரி அரியர் விவகாரம்: முரண்படும் தகவல்கள் - நடப்பது என்ன?

பட மூலாதாரம், Getty images
பொறியியல் கல்லூரிகளில் அரியர் வைத்திருந்தவர்களுக்கு தமிழக அரசு தேர்ச்சி அளித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் கூறியதாக அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவிக்கிறார். ஆனால், எல்லாம் விதிமுறைகளின்படியே நடந்திருப்பதாகக் கூறுகிறார் மாநில உயர்கல்வித் துறை அமைச்சர். இந்த விவகாரத்தில் என்ன நடக்கிறது?
கடந்த ஜூலை 27ஆம் தேதி தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்த அறிவிப்பில் கலை - அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை படிப்பவர்களில் முதலாம் ஆண்டு இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும் முதுகலை படிப்பவர்களில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும் இளங்கலை பொறியியல் படிக்கும் மாணவர்களில் முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும் முதுகலை பொறியியல் படிக்கும் மாணவர்களில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும் ஏப்ரல் - மே மாதத்தில் எழுத வேண்டிய செமஸ்டர் தேர்விலிருந்து விலக்களிக்கப்பட்டிருந்தது. இதற்கான அரசாணை 27ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், ஆகஸ்ட் 26ஆம் தேதியன்று முதலமைச்சர் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அந்த அறிவிப்பில் இறுதிப் பருவத் தேர்வுகளைத் தவிர பிற பருவத் தேர்வுகளுக்கான கட்டணங்களைச் செலுத்திக்காத்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து மதிப்பெண்கள் அளிக்கப்படுமென கூறப்பட்டிருந்தது. இதன் மூலம் பருவத் தேர்வுகளில் தேறாதவர்களும் தேர்வுக்கான கட்டணம் செலுத்தியிருந்தால் அவர்கள் தேர்ச்சிபெற்றவர்களாகவே கருதப்படுவார்கள். இது தொடர்பான அரசாணை இதுவரை வெளியிடப்படவில்லை.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பாக அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருப்பதாகவும் அதில், இம்மாதிரி தேர்ச்சி பெறாமல் 'Arrears' வைத்துள்ள மாணவர்களை தேர்ச்சிபெறச் செய்வதை ஏற்க முடியாது என அந்தப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா தரப்பிலிருந்து ஊடகங்களுக்குச் செய்திகள் கசிந்தன.
இது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், "இறுதிப் பருவத் தேர்வு குறித்து நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. ஆகவே இறுதிப் பருவத் தேர்வு நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிமுறைகளின்படிதான் மற்ற தேர்வுகள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசுக்கு ஏஐசிடிஇயிடமிருந்து எந்த தகவலும் வரவில்லை. ஒருவேளை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தருக்குக் கடிதம் வந்திருக்கிறது என்றால், அது தொடர்பாக கவுன்சிலுக்கு என்ன எழுதியுள்ளார் என்று பார்க்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty images
இதற்கிடையில் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் தலைவரான அனில் சுகஸ்ரபுதே அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தருக்கு எழுதியதாகக் கூறப்படும் மின்னஞ்சல் ஒன்று ஊடகங்களில் வெளியானது.
அந்த மின்னஞ்சலில், "முந்தைய தேர்வுகளில் தேர்ச்சிபெறாமல் அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு ஏதும் நடத்தாமல் தேர்ச்சிபெற்றதாக அறிவிப்பது ஆச்சரியமளிக்கிறது. தேர்வுகளை எழுதாமல் மதிப்பெண்களை அளித்து, பட்டமளிப்பது ஏற்கத்தக்கதல்ல. அம்மாதிரி மாணவர்கள் மேற்படிப்பிற்காகச் செல்லும்போது பிற பல்கலைக்கழகங்களோ, தொழிற்துறையினரோ ஏற்க மாட்டார்கள். அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அளிக்கப்பட்ட அனுமதியை திரும்பப் பெறும் நிலைக்கு ஏஐசிடிஇ தள்ளப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மின்னஞ்சலின் உண்மைத் தன்மை குறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பாவிடம் கேட்டபோது, "இந்த விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவித்து மின்னஞ்சல் வந்தது உண்மை. நான் உடனேயே அதனை உயர்கல்வித் துறைக்கு அனுப்பிவிட்டேன். அம்மாதிரி ஒரு தகவலும் வரவில்லையென அரசுத் தரப்பில் கூறியபோது, மீண்டும் அதை அனுப்பினேன். தற்போது ஊடகங்களில் வந்துள்ள மின்னஞ்சல் குறித்து ஏதும் சொல்ல முடியாது. அது எப்படிக் கிடைத்தது என்பதை ஊடகங்கள்தான் தெரிவிக்க வேண்டும்" என்றார்.

பட மூலாதாரம், Getty Images
பொறியியல் படிப்பில் நான்கு ஆண்டுகளைக் கல்லூரியில் முடித்த பிறகு, இறுதி செமஸ்டர் தவிர பிற செமஸ்டர்களில் ஏதேனும் பாடங்கள் தேர்ச்சி பெறாமல் இருந்தால், தற்போது அரியர் தேர்வை எழுதப் பணம் செலுத்தியிருந்தால் அரசின் அறிவிப்பின்படி அந்த மாணவர் தேர்ச்சியடைந்ததாகக் கருதப்படுவார். இதனை ஆகஸ்ட் 26ஆம் தேதி நடந்த செய்தியாளர் சந்திப்பில் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் உறுதிப்படுத்தினார்.
ஆனால், அண்ணா பல்கலைக்கழகத்தைப் பொறுத்தவரை, படித்து முடித்து வெளியே சென்றவர்கள் அரியர் தேர்வுகளை எழுதாமலேயே பொறியியல் பட்டங்களைப் பெறுவதென்பது ஏற்க முடியாதது எனக் கருதுகிறது. ஆனால், அரசுத் தரப்பும் அண்ணா பல்கலைத் தரப்பும் விரிவான விளக்கங்களை அளிக்கவில்லையென்பதால் இதில் தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது.
பிற செய்திகள்:
- சாதி ஒழிப்பு 2050ல் சாத்தியமா? விவாதமாகும் உயர் நீதிமன்ற நீதிபதியின் கருத்து
- ரியா சக்ரவர்த்தி கைது: போதைப்பொருள் பயன்படுத்தியதாக விசாரணை அதிகாரிகள் குற்றச்சாட்டு
- அருணாசல பிரதேச எல்லையில் காணாமல் போன 5 இந்தியர்களின் கதி என்ன? சமீபத்திய தகவல்கள்
- பப்ஜி தடை எதிரொலி: - தென் கொரிய நிறுவனம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு - இனி என்ன நடக்கும்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












