தமிழ்நாடு கல்வித்துறை: அரியர் பாடங்களில் தேர்ச்சி அறிவிப்பு: 'தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை' - எழும் எதிர்ப்புகள்

பட மூலாதாரம், MANPREET ROMANA/Getty Images
முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான முக்கியச் செய்திகள் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.
இந்து தமிழ் திசை: "அரியர் பாடங்களில் தேர்ச்சி அறிவிப்பு: 'தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை' - எழும் எதிர்ப்புகள்"
செமஸ்டர் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களை, தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க அரசுக்கு அதிகாரம் இல்லை என்று சென்னை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் இ.பாலகுருசாமி கருத்துத் தெரிவித்துள்ளதாக இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
''தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களில், தேர்ச்சி பெறாத பாடங்களுக்கு (அரியர்) தேர்வெழுதக் கட்டணம் செலுத்தி விண்ணப்பித்த அனைவரையும் தேர்ச்சி பெற்றதாகத் தமிழக அரசு அறிவித்திருப்பது விசித்திரமானது.
பல்கலைக்கழகங்கள் கற்பனையாகத் தேர்வு நடத்தி மாணவர்களைத் தேர்ச்சி பெறச் செய்வதில்லை. பல்கலைக்கழகங்கள் தன்னாட்சி அதிகாரமிக்க அமைப்புகளாகும். இந்நிலையில் மாணவர்களுக்கு நடத்தப்படும் தேர்வுகளை ரத்து செய்து அவர்களைத் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பதோ, பல்கலைக்கழகங்களின் கல்விக் கொள்கையில் தலையிடுவதற்கோ மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை.
பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களில் சிலர் 10 பாடங்களுக்கு மேல் தேர்ச்சி பெறாமல் இருப்பார்கள். அந்தப் பாடங்களில் அவர்கள் 20 சதவீதத்துக்கும் குறைவாகவே மதிப்பெண் பெற்றிருக்கக்கூடும். இந்த அறிவிப்பால் பல்கலைக்கழகங்களின் கல்வித்தரம் முற்றிலும் பாதிக்கப்படும்" என்று அவர் கூறியுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினத்தந்தி: "கோயம்பேடு சந்தை செப்டம்பர் 28-ந்தேதி திறப்பு"

பட மூலாதாரம், Twitter
கொரோனா காரணமாக மூடப்பட்ட கோயம்பேடு காய்கறி சந்தை செப்டம்பர் 28ஆம் தேதி திறக்கப்படும் என்றும் தனிநபர் செல்ல அனுமதி இல்லை என்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
"கோயம்பேடு மொத்த வணிக வளாகத்தில் கொரோனா தொற்று பரவல் கண்டறியப்பட்டதை தொடர்ந்து, அதனை கட்டுப்படுத்தும் விதமாக அங்கு இயங்கி வந்த கனிகள் மற்றும் மலர் அங்காடிகள் கடந்த ஏப்ரல் மாதம் இறுதியிலும், காய்கறிகள் மற்றும் மொத்த தானிய விற்பனை அங்காடிகள் மே மாதம் முதல் வாரத்திலும் மூடப்பட்டு மாற்று இடங்களில் செயல்பட்டு வருகின்றன.
கோயம்பேடு சந்தையில் மீண்டும் காய்கறி கடைகள், பழக்கடைகள், பூ கடைகள் திறக்கப்பட வேண்டும் என்று கோயம்பேடு வியாபாரிகள் சார்பிலும், அரசியல் கட்சிகள் சார்பிலும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டு வந்தன.
இதைத்தொடர்ந்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கோயம்பேடு மொத்த வணிக வளாகத்தை நேற்று நேரில் ஆய்வு செய்த பிறகு, கோயம்பேடு மொத்த வணிக வளாகத்தில் உள்ள அங்காடிகளை ஒவ்வொரு கட்டமாக திறப்பது எனவும், முதற்கட்டமாக உணவுதானிய மொத்த விற்பனை அங்காடியை 18.09.2020 அன்றும், அதற்கு அடுத்த கட்டமாக காய்கறி மொத்த விற்பனை அங்காடியை 28.09.2020 அன்றும், அதன்பிறகு அடுத்த கட்டமாக கனி அங்காடி, சிறு மொத்த காய்கறி, கனி அங்காடிகள் மற்றும் மலர் அங்காடிகளை பணியாளர்களுக்கு அடையாள அட்டை, தனிநபர்களுக்கு தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன் திறக்க முடிவு செய்யப்பட்டது" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமணி: "குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப 78% பெற்றோர்களுக்கு தயக்கம்"

பட மூலாதாரம், Getty Images
கொரோனா அச்சுறுத்தலால் 78 சதவிகித பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயங்குவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. குழந்தைகளுக்கு கல்வி ஆண்டு முழுவதும் வீணாவது குறித்து எந்த வித கவலையும் இல்லை என்றும் முடிவுகளில் தெரியவந்துள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், தனியார் கல்வி நிறுவனம் சார்பில் 3,600 மாணவர்கள் மற்றும் மற்றும் அதே எண்ணிக்கையிலான பெற்றோர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது குறித்து கேட்கப்பட்டது.
இதில் 82 முதல் 86 விழுக்காடு பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு தயக்கம் காட்டுவதாக தெரியவந்துள்ளது. இவர்கள் பெரும்பாலும் மும்பை, ஹைதராபாத், பெங்களூரு போன்ற நகர்புற பகுதியை சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊரடங்காலும், கல்விநிலையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லாததாலும், 50 சதவிகித குழந்தைகளின் தூங்கும் முறை மாறிவிட்டதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.13 சதவிகித குழந்தைகள் முறையற்ற தூங்கும் விதத்தை பழகியுள்ளனர்" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


பிற செய்திகள்:
- NEET-JEE தேர்வுகளை தள்ளிவைக்க மோதி அரசு தயங்குவது ஏன்?
- நரேந்திர மோதி அரசுக்கு வலுவில்லையா? சீன நாளிதழ் ஆய்வு வெளியிடும் ஆச்சரியமூட்டும் தகவல்கள்
- இலங்கை போரில் மக்களை கொன்றதா ராணுவம்? எரிக் சொல்ஹெய்ம் கருத்தை நிராகரித்தது இலங்கை அரசு
- சுஷாந்த் சிங் மரணம்: சிபிஐ விசாரணைக்கு முன்பாக மனம் திறக்கும் ரியா சக்ரபர்த்தி - காரணம் என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












