''இ-பாஸ் தளர்வு தமிழக சுகாதாரதுறைக்கு சவால்'': அமைச்சர் விஜயபாஸ்கர்

''இ-பாஸ் தளர்வு தமிழக சுகாதாரதுறைக்கு சவால்'': அமைச்சர் விஜயபாஸ்கர்

பட மூலாதாரம், Getty Images

ஆட்கள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு மத்திய அரசு இ-பாஸ் முறை தேவையில்லை என அறிவித்துள்ளதால், கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவது சவாலானதாக இருக்கும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்

கோவையில் கொரோனா சிகிச்சை தொடர்பான ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வளர்ந்த நாடுகளில் கூட ஆர்டிபிசிஆர் சோதனை முடிவுகளை அளிக்க ஏழு நாட்கள் எடுத்துக்கொள்கிறார்கள். தமிழகத்தில் 24 மணிநேரத்தில் முடிவுகள் அளிக்கப்படுகின்றன" என்று தெரிவித்தார்.

''இந்தியாவில் ஆர்டிபிசிஆர் சோதனைகள் தமிழகத்தில்தான் அதிகளவில் செய்யப்படுகின்றன. சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டாவது சோதனை செய்யப்படும்போது, 48 மணிநேரம் ஆகிறது. இன்னும் சில தினங்களில் கொரோனா சோதனை முடிவுகளை எஸ்எம்எஸ் மூலமாக பாதிக்கப்பட்டவர்கள் அறிந்துகொள்ளும் முறையை கொண்டுவரவுள்ளோம். விரைவில் முடிவுகளை அனுப்ப முயற்சிகளை எடுத்துவருகிறோம்,'' என்றார் அமைச்சர் விஜயபாஸ்கர்.

இ-பாஸ் முறை குறித்து பேசிய அவர், ''சுகாதாரத்துறைக்கு இந்த தளர்வு சவாலாக இருக்கும். ஆனாலும், மக்கள் பயணிப்பதால் கொரோனா பரவுமா என்பதை விட, யார் பயணிக்கிறார்கள், எதற்காக பயணிக்கிறார்கள், பாதுகாப்போடு பயணம் செய்கிறார்களா என்பது முக்கியம்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பயணிக்கவேண்டும் என தமிழக அரசாங்கம் விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்திவருகிறது. முகக்கவசம் கட்டாயம் தேவை, சமூக இடைவெளியை பின்பற்றவேண்டும், கைகளை அடிக்கடி கழுவவேண்டும் என்பதை பரிந்துரை செய்கிறோம், இந்த வழிமுறைகளை பின்பற்றவேண்டியது அவசியம்,'' என்று தெரிவித்தார்.

வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்கிறோம் என விருப்பம் தெரிவிக்கும் நபர்களுக்கு மட்டுமே அவ்வாறு செய்ய அனுமதி வழங்கப்படுகிறது என்றுகூறிய அமைச்சர், ''கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் அரசாங்க முகாம்களில் தங்குவதை ஊக்குவிக்கிறோம். ஒரு சிலர், தங்களது வீடுகளில் தனி கழிவறை வசதி உள்ளது, வீட்டில் இருக்க விருப்பம் தெரிவித்தால் மட்டுமே அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்வதை ஏற்கிறோம்,'' என்றார்.

மேலும் தமிழகத்தில் சித்தா மருத்துவத்திற்கு தேவையான முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது என்றும் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த 25 சிறப்பு சித்தா மையங்கள் தற்போது செயல்பாட்டில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

''ஏசிம்ப்டமாட்டிக் நபர்கள் மற்றும் கொரோனா அறிகுறிகள் தென்படும் நபர்களுக்கு சித்தா மையங்களில் சிகிச்சை அளிக்கிறோம். விரைவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சித்தா மருத்துவமனை கொண்டுவரும் திட்டமும் உள்ளது,'' என்றார் அவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: