அமெரிக்க அதிபர் தேர்தல்: இந்திய வம்சாவளியை இலக்கு வைக்கும் டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தல்: இந்திய வம்சாவளியை இலக்கு வைக்கும் டிரம்ப்

பட மூலாதாரம், PRAKASH SINGH / getty

நவம்பரில் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் அமெரிக்காவில் வசிக்கும் 20 லட்சத்துக்கும் அதிகமான இந்திய வம்சாவளி அமெரிக்கர்களின் வாக்குகளை கவரும் நோக்கில் டொனால்ட் டிரம்ப் தரப்பில் காணொளி விளம்பரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோதி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் பங்கேற்ற, அகமதாபாத் நிகழ்ச்சியின் காணொளியின் பகுதிகள் உள்பட, 107 நொடிகள் ஓடக்கூடிய இந்த விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது என்று பிடிஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.

'மேலும் நான்கு ஆண்டுகள்' என்று பொருள்படும் 'ஃபோர் மோர் இயர்ஸ்' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த காணொளியில் நரேந்திர மோதியின் அமெரிக்கப் பயணத்தின்போது ஹூஸ்டனில் நடந்த 'ஹௌடி மோடி' நிகழ்ச்சியில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளும் உள்ளன.

அந்நிகழ்ச்சியில் டிரம்ப் மற்றும் மோதி ஆகியோர் ஒருவரின் கைகளை ஒருவர் பற்றிக்கொண்டு நடக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

இந்த நிகழ்ச்சியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுமார் 50,000 பேர் கலந்து கொண்டிருந்தனர்.

ஹூஸ்டனில் நடந்த நிகழ்ச்சியில் இந்திய வம்சாவளியினரை 'எனது குடும்பம்' என்று மோதி அறிமுகப்படுத்தியது, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் "அமெரிக்கா இந்தியாவை நேசிக்கிறது; அமெரிக்கா இந்தியாவை மதிக்கிறது," என்றெல்லாம் டிரம்ப் பேசியது உள்ளிட்டவை இந்த விளம்பர காணொளியில் இடம்பெற்றுள்ளன.

அமெரிக்காவின் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் இந்திய அமெரிக்கர்கள் வெளியிட்ட தகவலின்படி வெற்றி தோல்வியை முடிவு செய்யும் முக்கியமான அமெரிக்க மாகாணங்களில் வசிக்கும் இந்திய அமெரிக்கர்களின் எண்ணிக்கை 13 லட்சம் என்று கூறப்பட்டுள்ளது.

டிரம்ப் சார்ந்துள்ள குடியரசு கட்சியின் தேசிய மாநாடு இணையம் வாயிலாக அடுத்த வாரம் நடைபெற உள்ளது.

அப்போது தம்மை குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதை ஏற்றுக்கொண்டு டிரம்ப் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் ஏற்கனவே தன்னை வேட்பாளராக கட்சி அறிவித்துள்ளதை ஏற்றுக்கொண்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: