கொரோனா வைரஸ் "ஏதோ ஒரு வடிவத்தில் எப்போதும்" நிலைத்திருக்கலாம் - எச்சரிக்கும் விஞ்ஞானி

பட மூலாதாரம், Getty Images
கொரோனா வைரஸ் "ஏதாவதொரு வடிவத்தில் எப்போதும்" உலகில் தொடர்ந்து இருக்கும் என்று பிரிட்டன் அரசின் அவசரநிலைகளுக்கான அறிவியல் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் (Sage) தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட கால இடைவெளியில் மக்கள் தடுப்பு மருந்தை செலுத்திக்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம் என்று சர் மார்க் வால்போர்ட் தெரிவித்துள்ளார்.
1918ஆம் ஆண்டு ஏற்பட்ட ஸ்பானிஷ் ஃப்ளு மறைய இரண்டாண்டுகள் ஆனதை போன்று கொரோனா வைரஸும் இரண்டாண்டுகளில் மறைந்து போகலாம் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் ஆதனோம் கெப்ரியேசஸ் நேற்று முன்தினம் நம்பிக்கை தெரிவித்திருந்த நிலையில், இந்த கருத்து வெளிவந்துள்ளது.
மக்கள் தொகை அடர்த்தி மற்றும் பயணங்களின் காரணமாக வைரஸ் தொற்று வேகமாக பரவுவதாக சர் மார்க் கூறுகிறார்.
அதே போன்று, நிகழ்காலத்துடன் ஒப்பிடுகையில் 1918இல் உலக மக்கள் தொகை மிகவும் குறைவாக இருந்ததை அவர் சுட்டிக்காட்டுகிறார்.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் : இதுவே கடைசி கொள்ளை நோய் அல்ல
- கொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன?

பிபிசி ரேடியோ 4இன் டுடே நிகழ்ச்சியில் பேசிய சர் மார்க், தொற்றுநோயைக் கட்டுப்படுத்த, "உலகளாவிய தடுப்பு மருந்து" தேவைப்படும் என்றும், அதே சமயத்தில் பெரியம்மை உள்ளிட்ட நோய்களை போன்று கொரோனா வைரஸ் "தடுப்பு மருந்து மூலம் முற்றிலும் அழிக்கப்படக் கூடிய ஒன்றாக இருக்காது" என்றும் கூறினார்.
"இது ஏதோ ஒரு வகையில் நம்முடன் எப்போதும் இருக்கப்போகிற ஒரு வைரஸ். இதை எதிர்கொள்ள நாம் அடிக்கடி தடுப்பு மருந்தை செலுத்திக்கொள்ள நேரிடலாம்."
"கிட்டத்தட்ட காய்ச்சலை போன்று இதற்காக மக்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து தடுப்பு மருந்து செலுத்த வேண்டி வரலாம்."
வெள்ளிக்கிழமையன்று ஜெனீவாவில் செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர், 1918ஆம் ஆண்டு ஏற்பட்ட ஸ்பானிஷ் ஃப்ளு மறைய இரண்டாண்டுகள் ஆனதாக தெரிவித்தார்.
எனினும், தற்போதுள்ள தொழில்நுட்ப முன்னேற்றங்களை கொண்டு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவலை "குறுகிய காலத்தில்" கட்டுப்படுவதற்கான வாய்ப்புள்ளதாக அவர் மேலும் கூறியிருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
"மனிதர்களுக்கிடையேயான தொடர்புகள் அதிகரித்துள்ளதால், வைரஸ் பரவலுக்கான வாய்ப்பு நிறைய உள்ளது" என்று அவர் தெரிவித்திருந்தார்.
கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் இதுவரை எட்டு லட்சத்திற்கும் அதிகமானோர் உலகம் முழுவதும் இறந்துள்ளனர். ஏறக்குறைய 2.3 கோடி பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. ஆனால் போதிய சோதனை மற்றும் அறிகுறியற்ற தொற்று பாதிப்புகள் காரணமாக உண்மையில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
கொரோனா வைரஸ் மீண்டும் "கட்டுப்பாடற்ற நிலையை அடைவதற்கு வாய்ப்புள்ளது" என்று எச்சரிக்கும் சர் மார்க், இதை எதிர்கொள்வதற்கு சாதாரண பொது முடக்கத்திற்கு பதிலாக இலக்கு வைக்கப்பட்ட நடவடிக்கைகள் தேவைப்படுவதாக கூறுகிறார்.
சமீபத்திய வாரங்களாக ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கொரோனா வைரஸ் முதல் முறையாக பரவியபோது அதை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய சில நாடுகளில், நோய்த்தொற்றுகள் அதிகரித்த வண்ணம் உள்ளன.
இந்தியாவில் 30 லட்சத்தை தாண்டிய நோய்த்தொற்று பாதிப்புகள்

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை தினமும் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது.
இந்நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தியாவில் கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 69,239 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 30,44,941ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 7,07,668 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 22,80,567 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்த 912 பேரையும் சேர்த்து இதுவரை நாடு முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 56,706ஆக அதிகரித்துள்ளது.


பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












