ரஞ்சன் கோகோய் பாஜக-வின் முதல்வர் வேட்பாளர் ஆவார்: அசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகோய் கருத்து

இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான முக்கியச் செய்திகள் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

ரஞ்சன் கோகோய்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரஞ்சன் கோகோய்

தி டைம்ஸ் ஆஃப் இந்தியா: "அசாமில் பாஜகவின் முதல்வர் வேட்பாளராகிறாரா ரஞ்சன் கோகோய்?

அசாமில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் முதலமைச்சர் வேட்பாளராக இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் இருக்கலாம் என்று அசாமின் முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான தருண் கோகோய் தெரிவித்துள்ளதாக தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

"முதலமைச்சர் பதவிக்கான பாஜகவின் வேட்பாளர்கள் பட்டியலில் ரஞ்சன் கோகோயின் பெயர் இருப்பதாக நான் கேள்விப்பட்டேன். அசாமில் பாஜகவின் முதலமைச்சர் வேட்பாளராக அவர் இருக்கலாம் என்று நான் சந்தேகிக்கிறேன்," என்று தருண் கோகோய் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியான அவர் நாடாளுமன்ற மாநிலங்களவையில் நியமன உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் பாஜகவின் முதலமைச்சர் வேட்பாளராகவும் ஒப்புக்கொள்ளலாம் என்று தான் கருதுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

"இது எல்லாமே அரசியல்தான். அயோத்தி ராமர் கோயில் வழக்கில் ரஞ்சன் கோகோய் வழங்கிய தீர்ப்பு பாஜகவை மகிழ்வித்தது. பின்னர் படிப்படியாக மாநிலங்களவை நியமன உறுப்பினர் பதவியை ஏற்றுக்கொண்டு அரசியலில் நுழைந்தார். அவர் ஏன் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு மறுப்பு தெரிவிக்கவில்லை? அவர் எளிதில் மனித உரிமை ஆணையம் அல்லது பிற உரிமை அமைப்புகளின் தலைவராக இருந்திருக்க முடியும். அவருக்கு அரசியல் லட்சியம் உள்ளது, அதனால்தான் அவர் நியமனத்தை ஏற்றுக்கொண்டார்," என்று தருண் கோகோய் கூறுவதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Presentational grey line

தினத்தந்தி: "143 பேர் தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக இளம் பெண் குற்றச்சாட்டு"

பாலியல் துன்புறுத்தல் பற்றி பெண்கள் ஏன் சமூக ஊடகங்களில் எழுதுகிறார்கள்?

கடந்த சில ஆண்டுகளில் 143 பேர் தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக ஒரு இளம் பெண் குற்றம் சாட்டியுள்ளதாகவும் அவர் அளித்த புகார் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து உள்ளதாகவும் தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

"தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த பெண் ஒருவர், புஞ்சகுட்டா காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். புகாரில் அவர் 'கடந்த 2010ஆம் ஆண்டு எனக்கு திருமணம் நடந்தது. திருமணமான ஒரு வருடத்திற்குள் எனக்கு விவாகரத்து கொடுக்கப்பட்டது. விவாகரத்து பெற்ற எனது கணவரின் குடும்பத்தில் உள்ள சில உறுப்பினர்கள் என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினர். கடந்த 25 ஆண்டுகளில் என்னை 143 பேர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி உள்ளனர்" என்று அவர் கூறி உள்ளார்.

இந்த புகாரை தொடர்ந்து காவல்துறையினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

சுமார் 42 பக்கங்களுக்கு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 41 பக்கங்களில் 143 பேரின் விவரங்கள் குறிப்பிடப்பட்டு உள்ளது. அதில் சில பெண்களும் இடம்பெற்று உள்ளனர். அந்தப் பெண் தற்போது மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளார்.

அரசியல் பின்னணி உள்ளவர்கள், மாணவர் தலைவர்கள், ஊடகத்தை சேர்ந்தவர்கள், திரைப்படம் மற்றும் பிற தொழில்களை சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும் பிரபலங்கள் மீது அந்த பெண் புகார் அளித்துள்ளார்" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Presentational grey line

தினமணி: மாற்று இடத்தில் தமிழக சட்டப்பேரவைக் கூட்டம்?

தமிழக சட்டப்பேரவை

கொரோனா நோய்த்தொற்று காரணமாக, மாற்று இடத்தில் சட்டப் பேரவைக் கூட்டத்தை நடத்த அவைத் தலைவர் பி.தனபால் சனிக்கிழமை ஆலோசனை நடத்தியதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

"இந்த ஆலோசனையைத் தொடர்ந்து, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணார் அரங்கத்தை பேரவைத் தலைவர் நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வினைத் தொடர்ந்து, பேரவைக் கூட்டத்தை எங்கு நடத்துவது என்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்பட உள்ளது.

தலைமைச் செயலக வளாகத்துக்குள் உள்ள மண்டபத்தில் பேரவை கூட்டத் தொடர்கள் நடைபெற்று வருகின்றன. கொரோனா நோய்த்தொற்று காரணமாக, இப்போதுள்ள மண்டபத்தில் பேரவை உறுப்பினர்கள் போதிய அளவு இடைவெளி விட்டு அமர முடியாத நிலை உள்ளது.

இதையடுத்து விசாலமான இடம் கொண்ட இடத்தை பேரவைச் செயலகம் ஆராய்ந்து வந்தது. சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கம், கலைவாணர் அரங்கம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு இடத்தில் கூட்டத்தை நடத்த ஆலோசிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில்தான், அவைத் தலைவர் தலைமையில் பேரவைச் செயலாளர் கி.சீனிவாசன் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலைவாணர் அரங்கத்தை ஆய்வு செய்தனர்" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Presentational grey line

தி ஹிந்து: "பூஷண்சொன்னதற்கு நீதிமன்றம் ஆற்றியது மிகை எதிர்வினை" சோலி சொராப்ஜி கருத்து

பிரசாந்த் பூஷண்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிரசாந்த் பூஷண்

பிரசாந்த் பூஷண் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்ச நீதிமன்றம் மிகைப்படுத்திவிட்டதாக இந்திய அரசின் முன்னாள் தலைமை வழக்குரைஞர் சோலி சொராப்ஜி தெரிவித்துள்ளதாக தி இந்து (ஆங்கிலம்) நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

"நீதிமன்றம் இப்போது பிரசாந்திற்கு அறிவுரையை வழங்கி அவரை எச்சரிக்கக் கூடும். ஆனால் அவரை தண்டிக்காது... இது ஒரு மென்மையான சமநிலையாகும். இந்த வழக்கிற்கு காரணமான பிரசாந்தின் முதல் ட்வீட்டை நீதிமன்றம் கணக்கில் கொள்ளாமல் இருந்திருக்கலாம். அந்த வகையில், அவரது இரண்டாவது ட்வீட் கூட ஒருவித கருத்தாகவே உள்ளது. மக்களுக்கு வெவ்வேறு நம்பிக்கைகள் உள்ளன. உச்சநீதிமன்றத்தின் விருப்பத்திற்கு மாறான சில நம்பிக்கைகள் இருப்பதற்காக நீங்கள் மக்களை தண்டிக்கிறீர்களா? என்று சோலி சொராப்ஜி கேள்வி எழுப்புகிறார்.

மேலும், நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கு உட்படுத்தப்படும் ஒருவரை அவரது குற்றச்சாட்டுகள் உண்மை என்பதை நிரூபிக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று அவர் மேலும் கூறுகிறார்.

பூஷண் தனது குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மையை நிரூபிக்க தயாராக இருந்தால், நீங்கள் அவரை எவ்வாறு தடுக்க முடியும்? அவரை அமைதியாக்க மிரட்டக்கூடாது. நிச்சயமாக, அவரது குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை, அற்பமானவை என்றால், அவரைத் தண்டியுங்கள். ஆனால் அதைச் சொன்னதற்காக அவரை தண்டிக்க வேண்டாம்" என்று அவர் மேலும் கூறியுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற வழக்குரைஞரும் சமூக செயற்பாட்டாளருமான பிரசாந்த் பூஷணின் ட்விட்டர் பதிவு தொடர்பாக அவர் மீது இந்திய உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவர் குற்றவாளி என்று 14ம் தேதி தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம். ஆனால், உடனடியாக அவருக்கு தண்டனை அறிவிக்கப்படவில்லை.

அவருக்கு தண்டனை அறிவிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடந்த வாதங்களின்போது அவர் மன்னிப்பு கேட்க மறுத்தார். அவரது கருத்தை மறுபரிசீலனை செய்வதற்கு அவருக்கு 2-3 நாள்கள் அவகாசம் வழங்கி விசாரணையை தள்ளிவைத்துள்ளது உச்சநீதிமன்றம்.

Presentational grey line

வரைபடம்

உலகம் முழுவதும் உறுதி செய்யப்பட்ட தொற்றுகள்

Group 4

முழுமையாக பார்க்க பிரௌசரை அப்டேட் செய்யுங்கள்

ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், தேசிய பொது சுகாதார முகமைகள்

கடைசியாக பதிவு செய்யப்பட்டது 5 ஜூலை, 2022, பிற்பகல் 1:29 IST

Presentational grey line

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: