இலங்கை போரில் மக்களை கொன்றதா ராணுவம்? எரிக் சொல்ஹெய்ம் கருத்தை நிராகரித்தது இலங்கை அரசு

கெஹெலிய ரம்புக்வெல

பட மூலாதாரம், KELIYA RAMBUKEWLLA / FACEBOOK

படக்குறிப்பு, கெஹெலிய ரம்புக்வெல

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரின்போது, பயங்கரவாதிகள் மீதே ராணுவம் தாக்குதல் நடத்தியதாக அமைச்சரவை பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவிக்கின்றார்.

எனினும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மக்கள் மீது தாம் தாக்குதல் நடத்தவில்லை என அவர் குறிப்பிடுகின்றார்.

இலங்கை இராணுவம் கண் மூடித்தனமாக குண்டு வீச்சுகள் மற்றும் ஷெல் தாக்குதல்களை நடத்தியதில் பொதுமக்கள் உயிரிழந்ததாக இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் ஹெரிக் சொல்ஹெம் தெரிவித்திருந்தார்.

எரிக் சொல்ஹெய்ம் தனது டுவிட்டர் பதிவொன்றில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இந்த குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

ஹெரிக் சொல்ஹெம் மற்றும் ராஜபக்ஷ

பட மூலாதாரம், ERIK SOLHEIM / TWTTER

படக்குறிப்பு, ஹெரிக் சொல்ஹெம் மற்றும் ராஜபக்ஷ

இந்த விடயம் தொடர்பில் பிபிசி தமிழ், இலங்கை ராணுவத்திடம் வினவிய போது, இலங்கை ராணுவம் அதை நிராகரித்திருந்தது.

தாம் அனைத்து சந்தர்ப்பங்களிலும் பொறுப்புணர்வுடன் செயற்பட்ட ராணுவம் என ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, அரசாங்கத்தின் நிலைப்பாட்டை பெற்றுக்கொள்ளும் நோக்குடன் பிபிசி தமிழ், அமைச்சரவை பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெலவிடம் வினவியது.

இலங்கைக்கான நார்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ள கருத்தை தாம் முற்றாக நிராகரிப்பதாக அவர் கூறியிருந்தார்.

இதேவேளை, இலங்கையில் தனித் தமிழ் அரசு உருவாகுவதை எந்தவொரு சர்வதேச சமூகமும் ஏற்றுக்கொள்ளவில்லை என இலங்கைக்கான நார்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

நார்வே, இந்தியா, அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய ஒன்றியம் அல்லது வேறு எந்தவொரு தரப்பினரோ, இலங்கையில் தனித் தமிழ் அரசு உருவாகுவதை ஏற்றுக்கொள்ளவில்லை என அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் கூட்டாட்சியே தீர்வாக இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை இராணுவம் பொதுமக்களை கொன்றது - ஹெரிக் சொல்ஹெமின் கருத்தை நிராகரித்தது இலங்கை

பட மூலாதாரம், ERIC SOLHEIM

அவ்வாறு கூட்டாட்சி ஏற்படுத்தப்படும் போது பெரும்பான்மையான தமிழ் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் இடம்பெற்ற வேளையில், சமாதான நடவடிக்கைகளுக்காக நார்வே அரசாங்கம் தலையீடு செய்திருந்தது.

இதன்படி, 1998ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரையான காலம் வரை நோர்வே அரசாங்கம் இலங்கைக்கான சமாதான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது.

இதில் இலங்கைக்கான நோர்வேயின் சமாதான தூதுவராக நியமிக்கப்பட்ட எரிக் சொல்ஹெய்ம், தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை அரசாங்கம் ஆகியவற்றிற்கு இடையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான பாரிய கடமைகளை நிறைவேற்றியிருந்தார்.

இவ்வாறான பின்னணியில், ஹெரிக் சொல்ஹெம் வெளியிட்டுள்ள கருத்து தற்போது சர்வதேச ரீதியில் பேசும் பொருளாக மாறியுள்ளதை காண முடிகின்றது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: