நீட் தேர்வு, இ-பாஸ் நடைமுறையை அனுமதிப்பது ஏன்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்ன கூறுகிறார்?

முதல்வர் பழனிச்சாமி

பட மூலாதாரம், TNDIPR

தமிழ்நாட்டில் நீட் தேர்வைத் தள்ளி வைப்பது, இ-பாஸ் நடைமுறையை தொடர அனுமதிப்பது ஏன், அரியர் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக வெளியிட்ட அறிவிப்பு குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்தும், மக்கள் நலத் திட்டங்களின் அமலாக்கம் குறித்தும் மாவட்டந்தோறும் பயணம் மேற்கொண்டு முதல்வர் பழனிச்சாமி ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

இதையொட்டி இன்று கடலூர் மாவட்டத்தில் கொரோனா‌ தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்த முதல்வர் பழனிச்சாமி, வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகள், விவசாயிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினருடன் ஆலோசனை மேற்கொண்டார்.

பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர், அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவரித்தார்.

"தமிழகத்தில் கொரோனா நோயைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டுமே அதிக அளவிலான கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. இதனால், கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. குறிப்பாக, உரியச் சிகிச்சை அளித்து வருதலால், தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து வருபவர்கள் அதிகரித்துள்ளது. தொற்றினால் உயிரிழந்தவர்கள் விகிதம் குறைவாக இருக்கிறது.

கடலூர் மாவட்டத்திற்கு ரூபாய் 6.55 கோடி நிதியுதவி வழகப்பட்டு, கொரோனா‌ தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாள்தோறும் 3,000 பேருக்குப் பரிசோதனை செய்யப்படுகிறது. இதுபோன்ற அரசின் தீவிர நடவடிக்கையால் கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருகிறது," என்றார்‌ அவர்.

கடலூர் மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 78 ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளதாகத் தெரிவித்த முதல்வர் பழனிச்சாமி. கிராமங்கள் முழுவதும் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது என்று கூறி பல்வேறு திட்டப்பணிகளை விவரித்தார்.

தொடர்ந்து பேசிய அவரிடம் இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்படுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

முதல்வர் பழனிச்சாமி

பட மூலாதாரம், TNDIPR

அதற்கு முதல்வர் பழனிச்சாமி, "தமிழ்நாட்டில் விண்ணப்பித்த அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படுகிறது. இ-பாஸ் வழங்கப்படுவதால்தான் மேற்கொண்டு கொரோனா பாதிப்பு ஏற்படும்போது, சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கண்டறிய முடிகிறது. அதற்கு இ-பாஸ் நடைமுறை பெரிதும் உதவுகிறது. இந்த நோய்த் தொற்றின்‌ தாக்கம் தீவிரமாக இருப்பதால்தான் அரசு சில வழிமுறைகளை பின்பற்றுகிறது. ஆகவே, அவசிய தேவைகள் இருந்தால் மட்டுமே இ-பாஸ் பெற்றுக் கொள்ளும்படி மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்," என்று தெரிவித்தார்.

கல்லூரி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது தொடர்பாக பேசிய முதல்வர், "மாணவர்கள் தங்களுக்கு என்ன ஆகும் என்று தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். அனைவரும் தேர்விற்கான பணத்தை செலுத்திவிட்டு, எப்போது தேர்வு வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், தொடர்ந்து தேர்வுகள் தள்ளிப்போய்க் கொண்டிருக்கிறது. அதற்குத் தீர்வு காண்பதற்காக அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கும்படி கூறியுள்ளேன்," என்று விளக்கமளித்தார்.

மேலும், நீட் தேர்வைத் தள்ளிவைப்பது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த முதல்வர், "கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்த பிறகு நீட் தேர்வை நடத்த வலியுறுத்தி கடந்த ஜூலை மாதமே பிரதமருக்கு கடிதம் எழுதினேன் மேற்கொண்டு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடமும் நீட் தேர்வைத் தள்ளி வைக்க வலியுறுத்தப்பட்டது. தற்போது தமிழக சுகாதாரத்துறை அமைச்சரும் கடிதம் எழுதியிருக்கிறார்," என்று தெரிவித்தார்.

கொரோனா தொடர்பான ஆலோசனை கூட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளதே என முதல்வரிடம் கேட்டதற்கு, "அனைவருக்கும் தொடர்ந்து அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. கூட்டத்திற்கு வருவதும் வராமலிருப்பதும், அவரவர் விருப்பம். அரசாங்கத்தைப் பொருத்தவரை இதைப்போன்ற சோதனையான காலகட்டத்தில், கடுமையாக மக்கள் பாதித்துக் கொண்டிருக்கும்போது, இதனைச் சீர் செய்ய நேரடியாக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று அனைத்து தரப்பு துறையினரைச் சந்தித்து ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறேன்.

குறிப்பாக, மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் உரியத் தகவல் கொடுக்கப்பட்டு விட்டது. அவர்கள் இங்கே வந்து கலந்து கொள்வது அவர்களுடைய கடமை. மேலும், இதில் கலந்து கொள்வது அவர்களுடைய விருப்பம் அதில். நாங்கள் குறுக்கிட முடியாது," என தமிழக முதல்வர் பழனிச்சாமி தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: