சோனு சூட் செயல்களால் கவரப்பட்டு ஊருக்கு சாலை அமைத்த பழங்குடி இளைஞர்கள்

கொரோனா ஊரடங்கின்போது பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவியது ஆந்தராவின் பழங்குடியின கிராமம் ஒன்றின் இளைஞர்களுக்கு ஊக்கத்தை அளித்துள்ளது.
சோனு சூட்டின் செயல்களை பார்த்த அவர்கள், அரசு அதிகாரிகளை சார்ந்திருக்காமல் தாங்களே தங்கள் கிராமத்திற்கு சாலை அமைக்க முடிவு செய்தனர்.
ஆந்திராவின் விஜயநகர மாவட்டம், சலுரு மாவட்டத்தில் கொடமா, சின்டமாலா, சிரிவரா ஆகிய பழங்குடியின் கிராமங்களுக்கு கடந்த 70 ஆண்டுகாலமாக சாலை வசதிகள் இல்லாமல் இருந்தன. அருகில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களுக்க செல்ல வேண்டும் என்றால் கூட, அக்கிராம மக்கள் குறைந்தது ஐந்து கிலோமீட்டர் நடக்க வேண்டும்.
கடல்மட்டத்தில் இருந்து 158 மீட்டர் உயரத்தில் இருக்கும் கொடமா கிராமத்திற்கு அருகில் இருக்கும் நகரமான சலூரு, அக்கிராமத்தில் இருந்து 50 கிமீ தொலைவில் இருக்கிறது.

பட மூலாதாரம், APPALA NAIDU
அவசரத்திற்கு கர்ப்பிணிப்பெண்கள் மற்றும் நோயாளிகள் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றால்கூட எந்த வாகன வசதியும் கிடையாது. அதனால் மருத்துவமனைகளுக்கு செல்லும் வழியில் குழந்தை பிறப்பது, அல்லது நோயாளிகள் இறப்பது போன்ற சம்பவங்களும் நிகழ்திருக்கின்றன என்கிறார் சாலைபணிகளுக்கு அக்கிராம மக்களுடன் சேர்ந்து ஒருங்கிணைக்கும் லாப நோக்கற்ற அமைப்பான பிரஜா சைத்தன்யா வேதிகாவின் தலைவர் கலிசேட்டி அப்பலா நாய்டு.
சாலை அமைப்பது தொடர்பாக அரசாங்கத்திடம் பல முறை மனு அளிக்கப்பட்டும் எந்த முன்னேற்றமும் இருக்கவில்லை என்கிறார் பழங்குடியின கிராமத்தின் தலைவரான மாலடி டோரா.
கொடமா மற்றும் சின்டமலா கிராமங்களில் வாழும் 250 குடும்பங்களுக்கு விவசாயமும் அதனை சார்ந்த செயல்பாடுகளும்தான் தொழில்.
"தொழில்நுட்ப ரீதியாக ஏற்பட்ட முன்னேற்றம், ஸ்மார்ட் ஃபோன் வசதிகள் போன்றவை, அந்த கிராம இளைஞர்களுக்கு பல தகவல்களை கொண்டு சேர்க்கின்றன" என்கிறார் அவர்.
நடிகர் சோனு சூட் செய்த செயல்பாடுகள் கிராமத்தில் படிப்பறிவு உள்ள இளைஞர்களை பெரிதும் கவர்ந்ததாக கூறுகிறார் அப்பலா நாயுடு.

பட மூலாதாரம், APPALA NAIDU
"சோனு சூட் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவியதை பார்த்த இளைஞர்கள், கிராமத்தில் தாங்களே சாலைகளை அமைக்கலாம் என்ற முடிவை எடுத்தனர்" என்கிறார் அவர்.
இந்த முடிவை செயல்படுத்த கிராம மக்களிடம் இருந்தே நிதி திரட்ட அவர்கள் முடிவு செய்தனர். எந்த தயக்கமும் இல்லாமல் கிராம மக்களும் பணம் வழங்கியதாக அவர் தெரிவிக்கிறார்.
இதுகுறித்து அப்பலா நாய்டு பிபிசியிடம் மேலும் பேசுகையில், "ஒவ்வொரு குடும்பமும் அவர்களால் முடிந்த அளவிற்கு 1000 ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரை அளித்தனர். மொத்தம் 20 லட்சம் ரூபாய் சேர்ந்தது. உள்ளூரில் வர்த்தகம் செய்பவர்களிடம் இருந்து கிராம மக்கள் பத்து லட்சம் ரூபாய் கடன் பெற்றார்கள்" என்று அவர் தெரிவித்தார்.
சில பெண்கள் தங்கள் நகைகளை அடமானம் வைத்து பணம் கொடுத்ததாக மாலடி டோரா கூறினார்.
அண்டை மாநிலமான ஒடிஷாவில் இருந்து சாலை அமைப்பதற்கான இயந்திரங்களை வாடகைக்கு எடுத்தார்கள். இதற்கு 10 லட்சம் ஆனது.
ஆந்திராவில் இருக்கும் சிரிவரா, சின்டமாலா கிராமங்களில் இருந்து ஒடிஷாவில் உள்ள சபாகுமரி என்ற இடத்திற்கு 6 கிலோ மீட்டர் அளவு சாலையும், கொடமாவில் இருந்து பாரி என்ற இடம் வரை 5 கிலோ மீட்டர் அளவிற்கும் சாலை அமைத்தனர்.
சாலை அமைப்பதற்கான நிலம் வனப்பகுதி என்பதால், கட்டுமான பணிகள் மேற்கொள்ள அதிகாரிகளிடம் அனுமதி கோரப்பட்டது. பல தடைகள் தாண்டியே இந்த சாலை அமைக்கப்பட்டதாக பிபிசியிடம் பேசிய அப்பலா நாய்டு தெரிவித்தார்.
ஜூலை முதல் வாரத்தில் தொடங்கப்பட்ட பணி இரண்டே மாதங்களில் அதாவது ஆகஸ்ட் இறுதியில் முடிவடைந்ததாகவும் அவர் கூறினார்.
இந்த செய்தியை தெரிந்து கொண்ட நடிகர் சோனு சூட், கிராம இளைஞர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், SONU SOOD / TWITTER
இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள அவர், "இதுபோன்று பொறுப்புகளை தங்கள் தோல்களில் சுமக்கக்கூடிய இன்னும் பல இளைஞர்கள் வேண்டும். சிறப்பான பணியை செய்திருக்கிறீர்கள். நான் விரைவில் உங்களை வந்து சந்திக்கிறேன். நீங்கள் இந்த நாட்டுக்கே ஊக்கம் அளித்திருப்பீர்கள்" என்று தெரிவித்துள்ளார்.
ஆந்திர அரசின் பஞ்சாயிதி ராஜ் பொறியியல் துறை ஜூலை 18 தேதியிட்ட அறிக்கையின்படி, பிரதமரின் கிராமீன் சதக் யோஜ்னா திட்டத்தின் கீழ் மாநிலத்தில் சுமார் 14,564 கிமீ அளவிற்கு கிராமப்புற சாலைகள் அமைக்க திட்டமிடப்பட்டது.
இதன் மூலமாக 1,309 பகுதிகளில், 500க்கும் மேற்பட்ட மக்கள் வாழும் இடங்கள் மற்றும் மலைப்பகுதிகள் மற்றும் பழங்குடியின பகுதிகளில் சாலைகள் இணைக்க திட்டமிடப்பட்டது.
ஆனால் அனைத்து கிராமப்புற இடங்களும் இதில் சேர்க்கப்படவில்லை
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












