காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தரத் தலைவர் தேர்வுசெய்யப்படாதது ஏன்? பிபிசிக்கு எஸ்.வி. ரமணி பேட்டி

காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தரத் தலைவர் தேர்வுசெய்யப்படாதது ஏன்?

பட மூலாதாரம், The India Today Group / Getty

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு நிரந்தர தலைமையை தேர்வு செய்யும் விவகாரத்தில் சமூகத்தீர்வு எட்டப்படாத நிலையில், மீண்டும் அந்த கட்சியின் தற்காலிக தலைவராக சோனியா காந்தி தொடருவார் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு அக்கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இந்த நிலையில், அக்கட்சியில் நிலவும் சூழல்கள் குறித்து பிபிசி தமிழின் ஃபேஸ்புக் நேரலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் ஊடகப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் எஸ்.வி. ரமணி பேசியதை இங்கே தொகுத்தளிக்கிறோம்.

சில நாட்களுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சியின் 23 மூத்த தலைவர்கள் ஒரு கடிதத்தை எழுதினார்கள். அந்தக் கடிதத்தில் கட்சி இந்தச் சூழலில் என்ன செய்ய வேண்டும், எப்படிச் செயல்பட வேண்டும் என்பது குறித்தெல்லாம் எழுதியிருந்தார்கள். சோனியா காந்தி கடந்த ஒரு வருடமாகவே இடைக்காலத் தலைவராகத் தொடர்வதால், நிரந்தரத் தலைவரானால் நன்றாக இருக்கும் எனக் கூறியிருந்தார்கள்.

ரமணி

பட மூலாதாரம், S.V.RAMANI

இந்தக் கடிதத்தை விவாதிக்க ஒரு கூட்டத்தைக் கூட்ட வேண்டியிருந்தது. ஆனால், அதற்கு முன்பாகவே அந்தக் கடிதம் ஊடகங்களுக்குக் கசித்து பெரிய விவாதமாகிவிட்டது. அப்படிக் கடிதம் எழுதியது தவறு அல்ல. பலரும் இப்படி கடிதங்களை எழுதுவார்கள். அதில் நல்ல ஆலோசனைகள் இருந்தால் அவை ஏற்றுக்கொள்ளப்படும். ஆனால், இந்தக் கடிதம் ஊடகங்களுக்கு வெளியாகி பெரும் விவாதமானது காங்கிரஸ் தொண்டர்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

காங்கிரஸ் காரியக் கமிட்டியைப் பொருத்தவரை, ஒரு இடைக்காலத் தலைவரைத் தேர்வுசெய்யும் அதிகாரம் அதற்கு உண்டு. ஆகவே நான் பதவியை ராஜினாமா செய்கிறேன். நீங்கள் இடைக்காலத் தலைவரை முதலில் நியமனம்செய்து, பிறகு தலைவரைத் தேர்வுசெய்யுங்கள்; அதைச் செய்வதற்கு ஏதுவாக நான் விலகிக்கொள்கிறேன் என்றார். அதன்படி ராஜினாமா செய்தார். இந்தக் கடிதம் வெளியாகாமல் இருந்திருந்தால், அவர் அந்தத் தலைவர்களை அழைத்து கலந்தாலோசனை செய்திருப்பார். ஆனால், கடிதம் வெளியான நிலையில், அவருக்கு வேறு வழியில்லை. ராஜினாமா செய்தார். ஆகவே காங்கிரஸ் காரியக் கமிட்டியை கூட்ட வேண்டிய ஒரு கட்டாயம் ஏற்பட்டது.

கடிதம் வெளியானது மிகப் பெரிய தவறு. இது போன்ற கடிதங்களை மூத்த தலைவர்கள் எழுதுகிறார்கள். அவை இதுவரை இப்படி ஊடகங்களுக்கு வெளியானதில்லை. இது சோனியா காந்தி அலுவலகத்தில் இருந்தோ, ராகுல் காந்தி அலுவலகத்தில் இருந்தோ வெளியாகியிருக்காது. அந்தக் கடிதத்தில் கையெழுத்திட்ட 23 தலைவர்களும் மிகவும் மூத்த தலைவர்கள். அவர்களும் ஊடகங்களுக்கு வெளியிட்டிருக்க மாட்டார்கள். வேறு ஏதோ இடத்திலிருந்து இது வெளியாகியிருக்கிறது. இதனைக் கண்டுபிடிக்க வேண்டும்.

அதேபோல, காரியக் கமிட்டிக் கூட்டத்தில் பேசப்பட்ட விஷயங்கள் ஊடகங்களுக்கு கசிந்த விவகாரத்தை எடுத்துக்கொள்வோம். காரியக் கமிட்டியில் நிரந்தர அழைப்பாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என இருக்கிறார்கள். அனைவருமே மிகவும் மூத்த தலைவர்கள். அங்கு நடக்கும் விவகாரங்கள் அவ்வளவு சுலபமாக வெளியில் வராது.

காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் நடக்கும்போதெல்லாம், ஊடகங்களில் அங்கு விவாதிக்கப்பட்ட விவகாரங்கள் தொடர்பாக செய்திகள் வெளியாகும். ஆனால், எது எதுவுமே நம்பத்தகுந்ததல்ல. இந்த முறையும் ஏழு மணி நேரம் கூட்டம் நடந்தது. ஆனால், ஊடகங்களுக்குக் கசிந்தது வெறும் 10 நிமிடத் தகவல்கள்தான். இதெல்லாம் ஊடகங்கள் யூகித்து எழுதியவை. தவிர, சிலர் ஆர்வத்தினால் சில தகவல்களை கசியவிட்டிருக்கலாம்.

ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். அதாவது இந்தக் கடிதத்தை எழுதியவர்களுக்கு பா.ஜ.கவுடன் தொடர்பு இருக்கிறது என ராகுல் காந்தி பேசியதாக செய்தி வந்தது. அதை ராகுல் காந்தி மறுத்துவிட்டார். கபில் சிபலுக்கு போன் செய்து அதனைச் சொல்லியிருக்கிறார். காங்கிரஸ் காரியக் கமிட்டியில் இருந்த குலாம் நபி ஆசாதும் அதனை மறுத்திருக்கிறார். ஆக, அப்படிக் கசிந்த தகவலே பொய்தானே. ஆகவே காங்கிரஸ் காரியக் கமிட்டியில் பேசியதாக வெளிவந்த தகவல்கள் எல்லாமே தவறானவை.

எஸ்.வி. ரமணி

பட மூலாதாரம், S.V. RAMANI

காங்கிரஸ் கட்சிக்கு ஒரு நிரந்தரத் தலைவரைத் தேர்வுசெய்யாதது ஏன் என கேள்வி எழுப்பப்படுகிறது. சூழல் அப்படி இருக்கிறது. இரு தேர்தல்களில் தோல்வியடைந்ததும் ராகுல்காந்தி ராஜினாமா செய்தார். அதற்குப் பிறகு தலைவர் பதவிக்கு யாரும் முன்வராத நிலையில், சோனியா காந்தி இடைக்காலத் தலைவரானார். அதற்குப் பிறகு பல சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தன. பட்ஜெட் தொடர், புதிய அரசு பதவியேற்பு, மத்தியப் பிரதேசத்தில் பிரச்சனை, மகாராஷ்டிரத் தேர்தல், ஹரியானாவில் தேர்தல், அதற்குப் பிறகு கொரோனா. கொரோனாவிலேயே ஏழு மாதங்கள் சென்றுவிட்டன. ஆகவே இடைக்காலத் தலைவர் அனைவரையும் கூட்டி தேர்தல் நடத்தும் சூழல் ஏற்படவில்லை. மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் ஒவ்வொருவரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும். அது இந்தச் சூழலில் எப்படி முடியும்?

காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு கட்சி உறுப்பினர்கள் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். நேரு - காந்தி குடும்பத்திலிருந்துதான் வர வேண்டுமென அவசியமில்லை. ஆனால், கீழ் மட்டத்தில் இருக்கும் தொண்டர்கள், தலைவர்கள் என எல்லோருமே நேரு - காந்தி குடும்பத்தினரைத்தான் விரும்புகிறார்கள்.

ஆகவே வேறு ஒருவர் தலைவராகவே சாத்தியமில்லை. சோனியா காந்தியா, ராகுல் காந்தியா, பிரியங்கா காந்தியா என்பதுதான் கேள்வியே தவிர, குடும்பத்திற்கு வெளியில் யார் தலைவர் என்பது கேள்வியல்ல. அஷோக் கெலாட்டோ, பூபேஷ் பாகெலோ தலைவராக முடியுமென்றால் ஆகலாம். யாரும் தடுக்கப் போவதில்லை.

இத்தனைக்கும் நடுவில் முக்கியப் பிரச்சனைகள் குறித்து காங்கிரஸ் தொடர்ந்து பேசி வருகிறது. ராகுல் காந்தியும் சோனியா காந்தியும் முக்கியப் பிரச்சனைகள் குறித்து கேள்விகளை எழுப்புகிறார்கள். கொரோனா குறித்தும், சீன ஆக்கிரமிப்பு குறித்தும் பொருளாதாரம் குறித்தும் ராகுல் எழுப்பிய கேள்விகள் எவ்வளவு முக்கியம் என இன்று நிரூபணமாகியிருக்கிறது.

சோனியா

பட மூலாதாரம், Mail Today / Getty

தற்போது காங்கிரஸ் காரியக் கமிட்டியில் தேவையான மாற்றங்களைச் செய்யும் உரிமை சோனியா காந்திக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அவர் வேண்டிய பொதுச் செயலாளர்களை நியமித்துக் கொள்ளலாம். மாநில காங்கிரஸ் கமிட்டிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மாநில, மாவட்டக் கமிட்டிகளில் பொறுப்புகளுக்கு ஆட்களைத் தேர்வுசெய்யும்படி கூறப்பட்டுள்ளது. அடுத்ததாக பிஹார், தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கேரளா போன்ற தேர்தல் வரவுள்ள மாநிலங்களிலும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. ஆகவே சரியான திசையில்தான் காங்கிரஸ் சென்று கொண்டிருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: