காங்கிரஸ் தலைமை அரசியல்: வீதிக்கு வரும் உள்கட்சி பூசல் - என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பரணி தரன்
- பதவி, பிபிசி தமிழ்
நீண்ட இழுபறிக்குப் பிறகு காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்வு தொடர்பாக டெல்லியில் அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது.
கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சித் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக கடந்த ஆண்டு மே 25ஆம் தேதி ராகுல் காந்தி அறிவித்தார். அதன் பிறகு அவரது தாயாரும் ஏற்கெனவே அவருக்கு முன்பாக காங்கிரஸ் தலைவராக இருந்தவருமான சோனியா காந்தியை கட்சியின் இடைக்கால தலைவராகக் காங்கிரஸ் காரிய கமிட்டி தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றியது.
காங்கிரஸ் கட்சி விதிகளின்படி கட்சிக்கு முறையாக ஒரு தலைவரை, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுக்குழு கூடி தேர்வு செய்யும்வரை இடைக்கால தலைவராக ஒருவரை காரிய கமிட்டி தேர்வு செய்யலாம்.

பட மூலாதாரம், Getty Images
அந்த அடிப்படையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சோனியா காந்தி கட்சித் தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டாலும், வயது மூப்பு, உடல் நல பிரச்னைகளால் அவரால் முழுமையாக கட்சிப்பணியாற்ற முடியாத சூழல் நிலவியது.
இருப்பினும், புதிய தலைவர் தேர்வு விவகாரத்தில் ஒருமித்த தேர்வு இல்லாத நிலையில், சோனியாவே கடந்த ஓராண்டாக இடைக்கால தலைவர் பதவியில் நீடித்து வந்தார். தற்போது அவரே மேலும் சில மாதங்களுக்கு அப்பதவியில் தொடருவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைமை தேர்வு: தாமதம் ஏன்?
இது குறித்து காங்கிரஸ் கட்சி விவகாரங்களை மிக நெருக்கமாக கவனிக்கும் மூத்த பத்திரிகையாளர் ரஷித் கித்வாயிடம் கேட்டபோது, "இங்கு தலைவர் ராகுல் காந்தியா சோனியா காந்தி என்பது பிரச்னை அல்ல. ராகுல் தலைவராக இல்லை என்றால் அவர் விட்டுச்சென்ற பொறுப்புகளை யார் இனி முன்னெடுக்கப்போகிறார்கள் என்பது பற்றியே அந்த கட்சி தலைவர்கள் விவாதிக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
மேலும், "தலைமை மாற்றம் தொடர்பாக கடிதம் எழுதியவர்களில் பலரும் தங்களைப் பற்றியே கவலைப்படுபவர்களாக இருக்கிறார்கள். ராகுல் மீண்டும் தலைவரானால், தங்களை மாற்றி விட்டு புதிய அணியை அவர் கொண்டு வருவார். இதனால் தங்களுடைய அரசியல் எதிர்காலம் பாதிக்கப்படலாம் என்பதே அவர்களின் கவலை" என்று ரஷித் கித்வாய் தெரிவித்தார்.
இது குறித்து காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "கட்சிக்கு புதிய தலைமை வர வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. தற்போதைய நிலையில் அது சோனியாவா, ராகுலா என்பதுதான் கேள்வி. காரிய கமிட்டி கூட்டத்துக்குள் நடந்த விஷயங்களைப் பொதுவெளியில் பேசிய தலைவர்களின் செயல் ஏற்புடையதல்ல" என்று கூறினார்.
ஆனால், கட்சித் தலைமை தேர்வில் தொடர்ந்து இழுபறி நீடிப்பது பற்றி கேட்டபோது, அந்தப் பின்னணியில் பல முக்கியமான விவகாரங்கள் மறைந்திருப்பதை மாணிக்கம் தாகூர் பட்டியலிட்டார்.
பதவியில் ஒட்டியிருக்கும் தலைவர்கள்
"கடந்த ஆண்டு ராகுல் காந்தி பதவியிலிருந்து விலகியபோது, ஜனநாயக முறையில் இயங்கி வரும் பாரம்பரியம் மிகுந்த கட்சியில் தேர்தல் தோல்வி, குறைவான செயல்பாடு போன்றவை நடக்கும்போது அவற்றுடன் தொடர்புடையவர்கள் பொறுப்புடைமையை ஏற்க வேண்டும் என்று ராகுல் காந்தி கருதினார். தான் பதவி விலகியதை போல, தேசிய, மாநில, மாவட்டம், வட்டார அளவில் எங்கெல்லாம் காங்கிரஸ் கட்சி சரியாக செயல்படவில்லையோ அதற்கு காரணமானவர்கள் பதவியிலிருந்து விலகுவார்கள்.
அதன் மூலம் கட்சியில் அமைப்பு ரீதியில் மாற்றம் ஏற்படவும் புத்துணர்வு ஏற்படவும் வாய்ப்பை ஏற்படுத்தலாம் என கருதி ஒரு முன்னுதாரணத்தை ராகுல் காந்தி தொடங்கினார். ஆனால், அவர் நினைத்தது போல நடக்கவில்லை. ராகுல் காந்தியும் அவரது தீவிர ஆதரவாளர்கள் பலரும் பதவி விலகினார்களே தவிர தேர்தல் தோல்விக்கு பொறுப்பான பலரும் பதவியில் இருந்து விலகவில்லை. இதுதான் பிரச்னையின் ஆணி வேர்" என்று மாணிக்கம் தாகூர் பதில் அளித்தார்.

பட மூலாதாரம், Getty Images
மேலும், "காங்கிரஸ் கட்சியில் கபில் சிபலோ, குலாம் நபி ஆஸாத்தோ கட்சியின் உள்விவகாரங்களை மட்டுமே பேசினார்கள். கட்சித்தலைமையில் மாற்றம் கோர தலைவர்கள் அனைவருக்கும் உரிமை உண்டு. கருத்து சுதந்திரத்துக்கு காங்கிரஸ் மதிப்பளிக்கும். ஆனால், எங்கு, எப்படி, எப்போது பதிவு செய்யப்பட வேண்டும் என வரம்பு உள்ளது. அது மீறப்பட்டதே நேற்றைய குழப்பத்துக்கும் சர்ச்சைக்கும் காரணம்" என்று கூறுகிறார் மாணிக்கம் தாகூர்.
கட்சி விதிப்படியே செயல்படுகிறோம்
ஆனால், ஓராண்டு கடந்த பிறகும் தொடர்ந்து சோனியாவின் இடைக்கால தலைமை எப்படி கட்சியை வலுப்படுத்தும் என்று கேட்டபோது, "கடந்த ஆண்டு மே மாதம் ராகுல் காந்தி பதவியிலிருந்து விலகினார். அடுத்த சில மாதங்களிலேயே ஆகஸ்ட் மாதத்தில் இடைக்கால தலைவராக சோனியா காந்தி நியமிக்கப்பட்டார். பிறகு டிசம்பரில் கட்சிக்குள் அமைப்பு ரீதியாக மாற்றம் செய்ய உத்தேசிக்கப்பட்டது.
ஆனால், தொடர்ச்சியாக நடைபெற்ற மாநில சட்டமன்ற தேர்தல்கள், நாடாளுமன்ற கூட்டத்தொடர் என்று பரபரப்பான நிகழ்வுகள் நடந்தன. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி விதி 18ஹெச், "காங்கிரஸ் கட்சித் தலைவராக இருப்பவர் திடீரென ராஜிநாமா செய்தாலோ உயிரிழக்க நேர்ந்தாலோ கட்சியின் நிலையான தலைவரை காங்கிரஸ் அகில இந்திய பொதுக்குழு தேர்வு செய்யும்வரை இடைக்கால தலைவரை காரிய கமிட்டி கூட்டம் தேர்வு செய்ய அதிகாரம் உள்ள தலைவர் பொறுப்பைக் கட்சியின் மூத்த பொதுச்செயலாளர் ஆற்றுவார். அந்த நடைமுறையே இப்போதும் பின்பற்றப்பட்டது. ஆனால், எதிர்பார்க்காத ஒன்றாக கடந்த பிப்ரவரி மாதத்துக்குப் பிறகு கொரோனா வைரஸ் பரவல், நாடு முழுவதும் பரவலான தாக்கத்தை ஏற்படுத்தியது.
இந்த நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் அடங்கிய காங்கிரஸ் பொதுக்குழுவை கூட்டி விவாதித்து தலைவர் தேர்தலை நடத்துவது இயலாத காரியம். அதனாலேயே சோனியா காந்தி இடைக்கால தலைவர் பதவியில் தொடர நேர்கிறது" என்று மாணிக்கம் தாகூர் விளக்கம் அளிக்கிறார்.
சோனியா, ராகுலுக்கு மாற்று இல்லையா?

பட மூலாதாரம், Getty Images
இதேவேளை காங்கிரஸ் விவகாரங்களைக் கவனிக்கும் மற்றொரு மூத்த பத்திரிகையாளர் அபர்ணா துவிவேதி, "தற்போதைய விவகாரம் இரண்டு விதமாக விவாதிக்கப்படுகிறது. ஒன்று புதிய தலைமை சோனியாவா ராகுலா. மற்றொன்று இந்த இருவரும் இல்லாத ஒருவர் காங்கிரஸ் தலைவராக வருவாரா. ராகுல், சோனியா ஆகிய பெரிய அடையாளங்கள்தான் அந்த கட்சியை ஒற்றுமையாக வைத்துள்ளன என்ற ஒரு பார்வை பெரும்பான்மையான காங்கிரஸ்காரர்களிடம் உள்ளது.
அதுபோல வேறு பெரிய அடையாளங்களுக்குக் கட்சியில் குறைபாடு உள்ளது. அத்தகைய சூழலில், இந்த இரு தலைமைகளுக்கும் விசுவாசமாக இருக்கும் அத்தகைய கவர்ச்சி வாய்ந்த ஒரு அடையாளத்துக்கே முன்னுரிமை தரப்படும். அந்த முன்னுரிமை யாராக இருப்பார் என்பதில் நிலவும் குழப்பத்தின் பிரதிபலிப்பாக தற்போதைய விவகாரம் இருக்கலாம்" என்கிறார் அபர்ணா துவி்வேதி.
ராகுலின் அரசியல் கூறும் உண்மைகள்
ஆனால், தமிழகத்தைச் சேர்ந்த மற்றொரு அரசியல் ஆய்வாளரும் மூத்த பத்திரிகையாளருமான ஆர்.கே. ராதாகிருஷ்ணனின் பார்வை வேறு விதமாக உள்ளது.
"கட்சித் தலைவர் பதவி வேண்டாம், பொறுப்புகள் வேண்டாம் என்று ஒதுங்கி வருவதாகக் காட்டிக்கொள்ளும் ராகுல் காந்தி, தமது அரசியல் எதிர்ப்பு நடவடிக்கை அனைத்தையும் பிரதமர் நரேந்திர மோதிக்கு எதிரானதாகவே கொண்டிருக்கிறார். அதன் மூலம் தன்னை பிரதமருக்கு நிகரான களத்தில் உள்ள எதிரணி வேட்பாளர் போல அவர் முன்னிலைப்படுத்துகிறார்" என்று ராதாகிருஷ்ணன் சுட்டிக்காட்டுகிறார்.
"பாஜகவின் பிரதமர் அடையாளமாக நரேந்திர மோதிதான் ஆரம்பம் தொட்டு விளங்குகிறார். பாஜகவில் கட்சித் தலைவர் என தனியாக ஒருவர் இருந்தாலும், பிரதமரே பிரதானமான அரசியல் தலைவர். அவரை எதிர்த்து அரசியல் செய்வதன் மூலம் தன்னை பிரதமருக்கு நிகராக அரசியல் களம் காண்பவர் என்பது போன்ற தோற்றத்தை ராகுல் காந்தி ஏற்படுத்தி வருவதை அவரது அரசியல் செயல்பாட்டை வைத்து புரிந்து கொள்ளலாம்" என்கிறார் ராதாகிருஷ்ணன்.
பிஹார், மேற்கு வங்க தேர்தல்களில் ஏற்கெனவே சரிவை சந்தித்த காங்கிரஸ் கட்சிக்கு இப்போது தமிழ்நாட்டிலும் கேரளாவிலும்தான் ஓரளவுக்கு செல்வாக்கு உள்ளது. எனவே, இந்த நான்கு மாநில சட்டமன்ற தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கை தேர்தல் வாக்குகள் மூலம் நிலைநாட்டத்தவறினால் அது காங்கிரஸ் கட்சியின் இருப்பையே கேள்விக்குரியதாக்கி விடும் என்பது காங்கிரஸின் திட்டம்" என்று ராதாகிருஷ்ணன் கூறுகிறார்.
இவை எல்லாவற்றையும் வழிநடத்த சிறந்த தலைமை தேவை என்ற குமுறல்களின் வெளிப்பாடு தான் காங்கிரஸ் தலைவர்களின் எதிர்வினையே தவிர, விமர்சனம் செய்யும் எவரும் கட்சியை விட்டு செல்லக்கூடியவர்களாக இருக்காதது அக்கட்சிக்கு சாதகமான விஷயம் என்று ராதாகிருஷ்ணன் சுட்டிக்காட்டுகிறார்.
கடந்த பத்து மாதங்களாக காங்கிரஸ் கட்சியின் செயல்முறை, குறிப்பாக ராகுல் ராஜிநாமா, சோனியாவின் இடைக்கால தலைமையில் பெரிய அளவில் அமையவில்லை என்று மூத்த பத்திரிகையாளர் அபர்ணா துவிவேதியும் கூறுகிறார். காங்கிரஸ் கட்சிக்கு நிலையான தலைமை வந்தால், அவர் உடனே மாயாஜாலம் செய்து கட்சியை காப்பாற்றி விடுவார் என்று நினைத்தால் அது தற்போதைய நிலையில் சாத்தியமில்லை என்பது அவரது பார்வை.
"இதேவேளை, சங்கடமான காலகட்டத்தை அரசியல் கட்சிகள் எதிர்கொள்ளும் போதெல்லாம் இதுபோன்ற பிரச்னைகள் தவிர்க்க முடியாதவையாக இருக்கும். இத்தகைய இடர்பாடுகள் காங்கிரஸ் கட்சிக்கும் புதிதல்ல" என்று கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் ரஷித் கித்வாய்.
சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












