கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை: நிபுணர்களின் எச்சரிக்கையை மீறி அமெரிக்கா ஒப்புதல்

பட மூலாதாரம், Reuters
அமெரிக்காவில் கோவிட்-19 வைரஸ் நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை வழங்குவதற்கான அவசரகால நடவடிக்கைக்கு அந்நாட்டின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை (எஃப்டிஏ) அனுமதி வழங்கியுள்ளது.
கொரோனா நோயில் இருந்து மீண்டவர்களின் ரத்தத்தில் கலந்த ஊநீர் (Blood plasma) எனப்படும் பிளாஸ்மா எதிர்ப்பான்கள், அமெரிக்காவில் வாழும் 70 ஆயிரம் மோசமான நிலையில் உள்ளவர்களின் சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஆரம்பநிலை பரிசோதனைகளில் அதன் பயன்பாடு பாதுகாப்பானதாக இருந்தாலும் அது மேலும் வலுவுடன் செயலாற்றுகிறதா என்பதை அறிவது அவசியம் என்று அமெரிக்க உணவு மற்றும் மருந்துத்துறை தெரிவித்துள்ளது.
ஊநீர் பயன்பாடு தொடர்பான ஆய்வில் காட்டப்படும் அதிவேகம் குறித்து பலதரப்பட்ட நிபுணர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இந்த நிலையில், அமெரிக்க உணவு மற்றும் மருந்துத்துறை சில அரசியல் காரணங்களுக்காக கொரோனா தடுப்பு மருந்து அறிமுகத்தை தாமதப்படுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டிய சில நாட்களில் பிளாஸ்மா சிகிச்சை தொடர்பான அனுமதியை அந்தத்துறை அளித்திருக்கிறது.
இந்த அறிவிப்பை வரவேற்றுள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப், "நீண்ட காலமாக இதைத்தான் நான் எதிர்பார்த்தேன். சீனாவின் வைரஸுக்கு எதிரான போரில், எண்ணற்ற உயிர்களை காக்கக் கூடிய வரலாற்றுப்பூர்வ அறிவிப்பை நான் வெளியிடுகிறேன்" என்று கூறி பிளாஸ்மா சிகிச்சை தொடர்பான நடவடிக்கையை விவரித்தார்.

பட மூலாதாரம், Getty Images/ SAUL LOEB
கோவிட்-19 வைரஸில் இருந்து மீண்ட அமெரிக்கர்கள், தங்களுடைய ஊநீரை தானமாக வழங்க முன்வருமாறும் அதிபர் அழைப்பு விடுத்தார்.
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது முதல் 1,76,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் கூறுகின்றன. சுமார் 5.7 மில்லியன் பாதிப்புகள் நாடு முழுவதும் பதிவாகியுள்ளன.
பிளாஸ்மா சிகிச்சை பலன் தருமா?
பிளாஸ்மா சிகிச்சையை ஒரு சில நிலைகளில் பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அனுமதி அளித்துள்ளது.
பிளாஸ்மா சிகிச்சை பெற்ற 20 ஆயிரம் பேரின் முடிவுகளை வைத்து அது பாதுகாப்பானது என்று அந்தத்துறை கூறுகிறது. 80 வயதுக்கு உட்பட்ட, சுவாசக்கருவிகள் உதவியின்றி சிகிச்சை பெறுவோரின் அதிக எதிர்ப்பான்கள் கொண்ட பிளாஸ்மாவை பெற்றவர்களின் உயிர்பிழைக்கும் வாய்ப்பு 35% இருப்பதாக அவர்களுக்கு வழங்கிய ஒரு மாத சிகிச்சையில் தெரிய வந்ததாக அமெரிக்க உயிரியில் மதிப்பீட்டு ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் பீட்டர் மார்க்ஸ் தெரிவித்தார்.
முன்னதாக, பிளாஸ்மா சிகிச்சை தொடர்பான அதிவேக ஆய்வுகள் தொடர்பாக தனிப்பட்ட கருத்துகளை வெள்ளை மாளிகையின் கொரோனா வைரஸ் செயல் நடவடிக்கை குழுவின் உறுப்பினரான ஆண்டனி ஃபெளட்சி உள்ளிட்ட நிபுணர்கள் கொண்டிருந்தனர்.
தற்போது உலக அளவில் இந்தியா உட்பட பல நாடுகளில் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு பிளாஸ்மா தெராப்பி எனப்படும் சிகிச்சை பயன்படுத்தப்படுகிறது. ஆனால், அது எந்த அளவுக்கு பலன் தரும் என்பது தெளிவற்று உள்ளது.
இந்த நிலையில், அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் முடிவு, அவசரகால தேவையில் இருப்பவர்களுக்கு மட்டுமே என்பதால் அது அந்த சிகிச்சையின் அவசியத்தை சமன்படுத்துகிறது என்று நிபுணர்கள் கருதுகிறார்கள்.
ஊநீர் சிகிச்சை, ஏற்கெனவே ஈபோலா போன்ற வைரஸ் சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டும் மருத்துவ ஆய்வாளர்கள், சில நேரங்களில் அது தீங்கு விளைவிக்கும் அலெர்ஜியை ஏற்படுத்தலாம் என்றும் எச்சரிக்கிறார்கள்.
சமீபத்திய பிரிட்டன் ஆய்வில் கூட, கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை பயனுள்ளதாக இருக்குமா என்பது இன்னும் நிச்சயமற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, தற்போதைய நிலையில், எத்தகைய கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை பயன் தரும் என்பதையும், எவ்வளவு தூரத்துக்கு அது பலன் தரும் என்பதும் பரிசோதனை அளவிலேயே இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.
அத்தகைய பரிசோதனைகளின் முடிவுகள், துல்லியமான தரவுகளுடன் இருக்க வேண்டும் என்றும் அந்தத் தரவுகள் கிடைக்க இன்னும் சில காலம் தேவைப்படும் என்றும் நிபுணர்கள் கருதுகிறார்கள்.
சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
பிற செய்திகள்:
- எஸ்.பி.பாலசுப்ரமணியம்: மருத்துவமனை அறிக்கை என்ன கூறுகிறது?
- காங்கிரஸ் தலைமை: வெடிக்கும் உள்கட்சி பூசல்; அறிய வேண்டிய 10 குறிப்புகள்
- பெலாரூஸ் நாட்டில் என்ன நடக்கிறது? அதிபருக்கு எதிராக வலுக்கும் போராட்டங்கள்
- பிரசாந்த் பூஷண்: "மனசாட்சிக்கு விரோதமாக மன்னிப்பு கேட்க மாட்டேன்"
- நித்தியானந்தாவின் கைலாசா: ஒரு நாட்டை எப்படி உருவாக்குவது?
- பூ பறித்த தலித் சிறுமி, 40 குடும்பத்துக்கு தண்டனை அளித்த சாதி இந்துக்கள் - ஒடிஷா அவலம்
- ஆபாசப் பட நடிகைக்கு டிரம்ப் பணம் வழங்க நீதிமன்றம் உத்தரவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












