பப்ஜி தடை எதிரொலி: "சீன நிறுவனத்துடன் உறவு கிடையாது" - தென் கொரிய நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு - இனி என்ன நடக்கும்?

பட மூலாதாரம், பப்ஜி
இந்தியாவில் பப்ஜி ஆன்லைன் விளையாட்டு உட்பட 118 செயலிகளை அரசு முடக்கியிருக்கும் நிலையில், இந்தியாவில் தனது நிறுவனத்துடன் சீன நிறுவனமான டென்சென்ட் நிறுவனம் கொண்டிருக்கும் அனைத்து தொழில்முறை உறவுகளையும் தொடரப்போவதில்லை என்று பப்ஜி நிறுவனம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்திய அரசின் நடவடிக்கைகளுக்கு மதிப்பளித்து, பப்ஜி மொபைல், இனி இந்தியாவில் சீனாவின் டென்சென்ட் கேம்ஸ் நிறுவனத்தால் கட்டுப்படுத்தப்படாது என்றும் தென் கொரிய நிறுவனமான பப்ஜி கார்பரேஷன், அனைத்து துணை நிறுவனங்களின் முழு பொறுப்பையும் ஏற்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் இந்திய அரசுடன் இணைந்து செயல்பட்டு, இந்திய சட்ட விதிகளுக்கும் ஒழுங்குமுறைகளுக்கும் உட்பட்டு கேமர்கள் மீண்டும் ஆன்லைன் களத்தில் இருப்பதற்கு தேவையான தீர்வை எட்டுவோம் என்று பப்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், PUBG
பப்ஜி (பிளேயர் அன்னோன்ஸ் பேட்டில்கிரவுண்ட்ஸ்)மொபைல் என்பது செல்பேசி விளையாட்டு ஆன்லைன் செயலி. இது அடிப்படையில் முழுமையான தென் கொரிய கேமிங் நிறுவன தயாரிப்பாகும்.
பல்நோக்கு தளங்களில் பப்ஜி மொபைல் செயலியை வெவ்வேறு பிராந்தியங்களில் இயக்கி ஆட்டத்தில் பங்கேற்கும் நபருக்கு சிறந்த அனுபவத்தை தருவதே இந்த விளையாட்டின் நோக்கம்.
அந்த நிறுவனதத்தின் சில பங்குகளை சீன நிறுவனமான டென்சென்ட் வாங்கியதை அடுத்து, பப்ஜி மொபைல், பப்ஜி மொபைல் லைட் ஆகிய செயலிகள், டென்சென்ட் கூட்டுடன் அறிமுகமாயின. இதனால் பப்ஜி விளையாட்டு செயலியை சீன தொடர்பு நிறுவன தயாரிப்பாகக் கருதி இந்தியா நடவடிக்கை எடுத்திருப்பதாக கருதப்படுகிறது.
இந்த நிலையில், டென்சென்ட் நிறுவனத்துடன் ஆன தமது தொழில்முறை உறவுகளை தொடரப்போவதில்லை என்று பப்ஜி நிறுவனம் அறிவித்துள்ளதால் விரைவில் அந்த நிறுவனம் மீதான தடையை அகற்றுவது குறித்து இந்திய அரசு பரிசீலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், பப்ஜி நிறுவனத்தின் இந்த அறிவிப்பு குறித்து டென்சென்ட் நிறுவனம் இதுவரை தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தவில்லை.
இனி என்ன நடக்கும்?
இந்தியாவில் தரவுகள் திருட்டு, பயனர்களின் தனி விவரங்கள் கசிவு உள்ளிட்ட புகார்களைத் தொடர்ந்து பப்ஜி உள்பட 118 செயலிகளை இந்தியாவில் முடக்கி கடந்த வாரம் இந்திய தகவல் தொழில்நுட்பத்துறை நடவடிக்கை மேற்கொண்டது.
இதில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தங்கள் மீதான நடவடிக்கையை திரும்பப்பெற, உரிய ஆவணங்களையும் பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்து மீண்டும் அனுமதி கோரலாம். பொதுவாக ஆன்லைன் செயலிகளின் செயல்பாட்டுக்கு இந்தியாவில் அதிக கட்டுப்பாடுகள் இருக்காது.
எனினும், தேசிய பாதுகாப்பு விவகாரம் என வரும்போது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி அத்தகைய நிறுவனங்களின் செயலிகளை இந்திய தொலைத்தொடர்பு நெட்வொர்க் வரம்புக்குள் பயனர்கள் அணுக முடியாதவாறு இந்திய அரசால் முடக்க முடியும்.
தற்போதைக்கு நடவடிக்கைக்கு உள்ளான செல்பேசி விளையாட்டு நிறுவனங்கள், அவற்றின் மீதான இந்திய அரசின் குற்றச்சாட்டுகளுக்கு முறைப்படி எழுத்துப்பூர்வ விளக்கம் தர வேண்டும், அதன் அடிப்படையில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்து அளிக்கப்படும் விண்ணப்பம், இந்திய தகவல் தொழில்நுட்பத்துறை பரிசீலனைக்கு அனுப்பப்படும். அந்தத்துறையின் அமைச்சகங்களுக்கு இடையிலான குழு நிறுவனங்களின் பதிலை சரிபார்த்து, புதிய கேள்விகள் அல்லது சந்தேகங்கள் எழுந்தால் அவற்றுக்கு விளக்கம் கோரும். அதன் பிறகே, இந்தியாவில் அந்த செயலிகளை இயங்க அனுமதிக்கலாமா அல்லது முடக்கத்தை தொடருவதா என்பது தீர்மானிக்கப்படும்.
இந்த நடைமுறைகளை மேற்கொள்வது அவ்வளவு சாதாரணமான செயல் அல்ல என்பதால், குறைந்தபட்சம் ஒரு சில மாதங்களுக்காவது இந்த முடக்கத்தை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் எதிர்கொள்ள நேரிடும் என்றே கருதப்படுகிறது.
இந்தியாவிலேயே மிகப்பெரிய ஆன்லைன் விளையாட்டு சந்தையாக பப்ஜி விளையாட்டு உள்ளது. அந்த விளையாட்டில் 1.30 கோடி பேர் தீவிர பங்கேற்பாளர்களாக உள்ளனர். இந்தியாவில் மட்டும் அந்த விளையாட்டு செயலியை 17.5 கோடிக்கும் அதிகமானோர் பதவிறக்கம் செய்துள்ளனர்.
பிற செய்திகள்:
- 'இந்திய படையினர் துப்பாக்கியால் சுட்டனர்; பதில் நடவடிக்கை எடுத்தோம்' - சீன ராணுவம்
- வீட்டிலிருந்து வேலை: நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனர் கூறுவதும், ட்விட்டர் நிறுவனத்தின் முடிவும்
- கொரோனாவில் இந்தியா 2ஆம் இடம்: Go Corona Go முதல் PMCares வரை - கடந்து வந்த பாதை
- அரியர் தேர்வுக்கு விதிமுறைகளின்படி விலக்கு அளிக்கப்பட்டதா? என்ன நடக்கும்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












