தமிழக அரசு அரியர் தேர்வுக்கு விதிமுறைகளின்படி விலக்கு அளித்ததா? - தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் விளக்கம்

பட மூலாதாரம், Getty Images
சில இந்திய நாளிதழ்கள் மற்றும் அவற்றின் இணையப் பக்கங்களில் வெளியான முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தினத்தந்தி: அரியர் தேர்வுக்கு விலக்கு விதிமுறைகளின்படி அளிக்கப்பட்டதா?
பல்கலைக்கழக மானியக்குழு வகுத்துள்ள விதிமுறைகளின்படியே அரியர் தேர்வுக்கு விலக்கு அளிக்கப்பட்டு இருப்பதாக அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், கே.பி.அன்பழகன் ஆகியோர் விளக்கம் அளித்துள்ளனர் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.
"பேரறிஞர் அண்ணா வழியில் தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம் எனும் இரு மொழிக் கொள்கையில் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் உறுதியாக இருந்தனர். எனவே தமிழகத்தில் எந்த சூழ்நிலையிலும் மும்மொழிக் கொள்கையை ஏற்கவே மாட்டோம். எங்கள் நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
அந்த உணர்வை யார் வேண்டுமானாலும் வெளிப்படுத்தலாம். அது அவரவர் ஜனநாயக உரிமை. இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு தான் எதையும் செய்ய வேண்டும். இந்தியை எந்த நாளும் நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை," என அவர் கூறி உள்ளார்.
பேட்டியின் போது உடனிருந்த தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனிடம், 'மாணவர்கள் அரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றதாக அறிவித்துள்ளதை ஏற்க முடியாது என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தெரிவித்துள்ளதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா கூறியிருக்கிறாரே?,' என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

பட மூலாதாரம், Twitter/ K P Anbalagan
இதற்கு பதிலளித்த அமைச்சர் கே.பி.அன்பழகன், "கல்லூரி இறுதி பருவத்தேர்வு குறித்து நீதிமன்றத்தில் வழக்கு இருந்த காரணத்தால், நீதிமன்ற தீர்ப்பின்படி இறுதி பருவத்தேர்வு நடைபெறும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதன்படியே மாணவர்களுக்கு இறுதி பருவத்தேர்வு நடைபெறும். பல்கலைக்கழக மானியக்குழு விதித்த விதி முறைகளை பின்பற்றுவதாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழக மானியக்குழு வகுத்துள்ள விதி முறைகளை பின்பற்றி தான் மற்ற தேர்வுகளுக்கெல்லாம் தமிழக அரசு விலக்கு அளித்துள்ளது. மற்றபடி தற்போது அரியர் வைத்திருக்கும் மாணவர்கள் குறித்து வெளியாகும் தகவல்கள் உண்மையில்லை. அது தொடர்பாக எந்த கடிதமும் அரசுக்கு வரவில்லை. ஒருவேளை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தருக்கு கடிதம் வந்திருக்கிறது என்றால், அவர் இதுகுறித்து கவுன்சிலுக்கு என்ன கடிதம் எழுதியுள்ளார் என பார்க்க வேண்டும்," என்று அவர் கூறி உள்ளார்.
அமைச்சர் இவ்வாறாக கூற, அரியர் பாடத்தேர்ச்சி தொடர்பாக யுஜிசியிடம் இருந்து எந்த கடிதமும் வரவில்லை என்று சென்னை பல்கலை. துணைவேந்தர் கவுரி தெரிவித்தார் என்கிறது மற்றொரு நாளிதழ் செய்தி
இந்து தமிழ் திசை: யுஜிசியிடம் இருந்து எந்த கடிதமும் வரவில்லை
அரியர் பாடத்தேர்ச்சி தொடர்பாக யுஜிசியிடம் இருந்து எந்த கடிதமும் வரவில்லை என்று சென்னை பல்கலை. துணைவேந்தர் கவுரி தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவலால் கல்லூரிகளில் இறுதி பருவத்தேர்வு தவிர மற்ற அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் தேர்ச்சி செய்யப்பட் டனர். அதன்பின் அரியர் பாடத் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத் திய மாணவர்களுக்கும் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்களித்து தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்த அறிவிப்பு நீண்டகாலமாக அரியர் வைத்திருந்த மாணவர் களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அரி யர் பாடங்களுக்கு தேர்ச்சி வழங்கு வதற்கு அகில இந்திய தொழில் நுட்பக் கல்வி குழுமம் (ஏஐசிடிஇ) எதிர்ப்பு தெரிவித்து மின்னஞ்சல் வழியே கடிதம் அனுப்பியுள்ளதாக அண்ணா பல்கலை துணைவேந்தர் சுரப்பா தகவல் வெளியிட்டார்.
இதுதொடர்பாக சென்னை பல்கலை. துணைவேந்தர் எஸ்.கவுரியிடம் கேட்டபோது, "அரியர் பாடங்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி வழங்குவது குறித்து பல்கலை. மானியக் குழுவிடம் (யுஜிசி) இருந்து எந்தவொரு மின்னஞ்சல் கடிதமும் எங்கள் பல்கலை.க்கு வரவில்லை. இந்த விவகாரத்தில் அரசின் வழிகாட்டுதலின்படி முடிவு கள் மேற்கொள்ளப்படும்''என்றார்.
- இவ்வாறாக அந்நாளிதழ் விவரிக்கிறது.
தினமணி: ஐசிஐசிஐ கடன் மோசடி வழக்கு - தீபக் கோச்சார் கைது

பட மூலாதாரம், Getty Images
ஐசிஐசிஐ கடன் மோசடி வழக்கில் ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சார் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார் என்கிறது தினமணி நாளிதழ்.
ஐசிஐசிஐ வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியாக சந்தா கோச்சார் இருந்தபோது, வங்கி விதிமுறைகளை மீறி, விடியோகான் குழுமத்துக்கு ரூ.1,875 கோடி கடன் வழங்கியதாகவும், அதற்குப் பிரதிபலனாக, சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சாருக்குச் சொந்தமான நியூபவர் ரினியூவபிள்ஸ் நிறுவனத்தில், விடியோகான் குழுமம் முதலீடு செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடா்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கின் அடிப்படையில், சட்ட விரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கு தொடரப்பட்டு ஓராண்டு ஆன நிலையில், தீபக் கோச்சார் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தத் தகவலை அமலாக்கத் துறை உயர் அதிகாரி ஒருவர் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












