பசுவை கொன்றால் 5 ஆண்டுகள் சிறை: கர்நாடகா அரசு நிறைவேற்றிய புதிய சட்டம்

கர்நாடகா அரசு

பட மூலாதாரம், Getty Images

(பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்! இந்திய, சர்வதேச மற்றும் தமிழ்நாடு சார்ந்த இன்றைய பல முக்கிய செய்திகளை இங்கே நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.முக்கிய நிகழ்வுகளும், செய்தி முன்னேற்றங்களும் இங்கே பகிரப்படும்.)

கர்நாடகாவில் பசு வதை தடுப்பு மற்றும் பராமரிப்பு சட்டம், பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் அம்மாநில சட்டமன்றத்தில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன்படி கர்நாடகாவில் இனி பசுக்களை சட்டவிரோதமாக விற்பதோ, வேறு இடத்துக்கு கொண்டு செல்வதோ, கொலை செய்வதோ தண்டனைக்குரிய குற்றமாகும். ஒருவேளை ஒரு பசுவுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டு அது மற்ற பசுக்களுக்கு பரவும் என தெரிய வந்தால், அந்த கட்டத்தில் மட்டுமே அது வெட்டப்படலாம் என்று புதிய சட்டம் கூறுகிறது. இந்த புதிய சட்ட மசோதாவின் பிரிவு (1)(2) ஆகியவற்றில் கால்நடை என்பது பசு, பசுக்கன்று என்று கூறப்பட்டுள்ளது.

பசுவதை அல்லது பசு கொல்லப்படுவதாக தெரிய வந்தால், உதவி ஆய்வாளர் அல்லது அதற்கு மேல் பதவியில் உள்ள அதிகாரி எந்தவொரு இடத்திலும் சோதனை நடத்த அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

குற்றம் செய்யும் நபருக்கு 3 முதல் 5 ஆண்டுகளுக்கு தண்டனை விதிக்கப்படும். சிறைக்காவலுடன் 50 ஆயிரம் முதல் 5 லட்சம்வரை அபராதம் விதிக்கப்படும்.

கர்நாடகா அரசு

பட மூலாதாரம், Getty Images

இதேவேளை, புதிய சட்டத்தில் கால்நடை இறைச்சி என்பது மாட்டிறைச்சி என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது எருமை மாட்டை வெட்டி இறைச்சித் தேவைக்கு பயன்படுத்த சட்ட தடங்கல் கிடையாது என்று அம்மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் பிரபு செளஹான் தெரிவித்தார்.

கர்நாடகா சட்டமன்றத்தில் இந்த சட்ட மசோதாவை நிறைவேற்றும் நடைமுறைகளை அம்மாநில சட்ட அமைச்சர் மதுசுவாமி புதன்கிழமை தொடங்கியபோது, அதன் நகல்கள் தங்களுக்கு வழங்கப்படவில்லை என்று முன்னாள் முதல்வர் சித்தராமையா குரல் எழுப்பினார்.

இதைத்தொடர்ந்து பேரவையில் அமளி ஏற்பட்டபோதும், பலத்த கூச்சல், குழப்பத்துக்கு இடையே இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.

கர்நாடகா அரசு

பட மூலாதாரம், Getty Images

கர்நாடகாவில் ஏற்கெனவே பசுவதை தடை சட்டம் அமலில் உள்ளபோதும், அதில் குற்றம் செய்வோருக்கு தண்டனை, அபராதம் உள்ளிட்டவை போதுமானதாக இல்லை. இதனாலேயே புதிய வடிவத்தில் தண்டனை நடவடிக்கையை கடுமையாக்கும் வகையில் புதிய மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. பழைய சட்டப்படி பசுவதை குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக ஆறு மாத சிறையும் அபராதமாக ரூ. 1000 மட்டுமே இருந்தது.

எருது, காளைகள், எருமை மாடு ஆகியவற்றை கொல்ல புதிய சட்டம் தடை விதிக்காதபோதும், 12 வயதுக்கு மேற்பட்ட எருமைகள் அல்லது இனப்பெருக்கத்துக்கோ பால் சுரக்கவோ தகுதியற்றதாக கால்நடை மருத்துவரால் சான்றளிக்கப்பட்ட எருமைகள் மட்டுமே வெட்டப்படலாம் என்று புதிய சட்டம் தெளிவுபடுத்தியுள்ளது.

இந்தியாவில் 24 மாநிலங்களில் பசுவதைக்கு சட்ட ரீதியாகவும் கால்நடை பராமரிப்பு விதிகள் மூலமாகவும் தடை உள்ளது. அருணாசல பிரதேசம், மிசோரம், மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா ஆகிய மாநிலங்களில் பசுவதைக்கு என தனி சட்டம் இல்லை.

Banner

ஊழல்வாதி யார்? தமிழக முதல்வருக்கு மீண்டும் சவால் விடும் ஆ. ராசா

ராசா

ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டவர்தான் ஜெயலலிதா என்று முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக துணை பொதுச்செயலாளருமான ஆ. ராசா மீண்டும் தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திராவிட முன்னேற்ற கழகம், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் செய்ததாக பேசினார். அதற்கு பதில் தரும் விதத்தில், கடந்த3ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, 2ஜி வழக்கில் என் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமாகாத நிலையில், விசாரணை நீதிமன்றம் விடுவித்து விட்டது. அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அந்த வழக்கு போடப்பட்டது. ஆனால், ஊழல் வழக்கில் ஜெயலலிதா ஒரு ஊழல் குற்றவாளி என்று நீதிமன்றமே தீர்ப்பளித்திருக்கிறது என்று தெரிவித்தார்.

மேலும், 2ஜி வழக்கு தீர்ப்பு தொடர்பாக தன்னோடு நேருக்கு நேர் விவாதம் செய்யவும் எடப்பாடி பழனிசாமிக்கு ராசா அழைப்பு விடுத்தார்.

அவரது கருத்துகள், சமூக வலைதளங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து ஜெயலலிதாவுக்காக நீதிமன்றங்களில் வழக்காடியவரான ஜோதி, இந்த விவகாரத்தில் ஜெயலலிதாவுக்காக ஆஜரானவர் என்ற முறையில் நான் விவாதிக்க தயார் என்று கூறினார்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

இந்த நிலையில், மீண்டும் செய்தியாளர்களை புதன்கிழமை சந்தித்த ஆ ராசா, ஜெயலலிதா ஒரு ஊழல் குற்றவாளிதான் என்பது உச்ச நீதிமன்றத்திலேயே நிரூபணமாகி இருக்கிறது. ஜெயலலிதா தான் பிரதான குற்றவாளி. அவர் குற்றவாளியாக இல்லாமல் அந்த வழக்கில் பிறருக்கு சிறை தண்டனை விதிக்கவே முடியாது என்று தெரிவித்தார். தன் மீதான 2ஜி அலைக்கற்றை வழக்கு காங்கிரஸ் கட்சியில் தொடரப்பட்டாலும், அதில் அச்சம் காரணமாக காங்கிரஸ் தலைவர்கள் ஒதுங்கிக் கொண்டார்கள். ஆனால், தான்தான் அந்த வழக்கில் வாதாடி வெற்றி பெற்றேன் என்று கூறய ராசா, தன் மீதான வழக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியால் போடப்பட்டது. ஆனால், ஜெயலலிதா மீதான வழக்கு ஊழல் வழக்கு என்று தெரிவித்தார். இந்த விவகாரத்தில் , முதல்வர் பழனிசாமிக்கு திறந்த மடல் ஒன்றை அனுப்பி உள்ளதாகவும் ராசா கூறியுள்ளார்.

2ஜி வழக்கு தொடர்பாக விவாதிக்க தான் தயாராக இருப்பதாக மீண்டும் ஆ. ராசா தெரிவித்தார்.

Banner

இந்தியா முழுவதும் பொது வைஃபை வசதி - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

வைஃபை

பட மூலாதாரம், Getty Images

இந்தியா முழுவதும் PM WANI என்ற பெயரில் பொது வைஃபை சேவை வழங்கும் திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.

பிடிஓ எனப்படும் பொது தரவு அலுவலகங்களில் இந்த ஒய்-ஃபை தொடர்கள் நிறுவப்பட்டு, ஒவ்வொரு பகுதிக்கும் வைஃபை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பொது தரவு அலுவலகங்கள், வைஃபை சேவையை இணைக்கும் செயலிகளின் பணிக்கு உரிமக்கட்டணமோ பதிவுக்கட்டணமோ கிடையாது. இந்த பிடிஓ அலுவலகங்கள், சிறு கடைகளாக இருக்கலாம் அல்லது பொது சேவை மையங்களாக இருக்கலாம் என்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

இந்தியா முழுவதும் ஒய்ஃபை சேவை வழங்க வேண்டும் என்பது மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமானது.

இந்த திட்டம் செயல்படுத்தப்படுவது குறித்து விளக்கிய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், "பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியா அல்லது வேறு இன்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனங்களிடம் இருந்து சேவையைப் பெற்று அதை தொழில் நிறுவனங்களோ கடைகளோ வைஃபை சேவையை வழங்கலாம். இதன் மூலம் தொழில் மற்றும் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும்" என்று கூறினார்.

பொது தரவு அலுவலகம்: இந்த திட்டத்தின்படி பிடிஓ எனப்படும் பொது தரவு அலுவலகங்கள் வைஃபை சாதனங்களை தங்களுடைய இடத்தில் நிறுவி தங்களுடைய சந்தாதாரர்களுக்கு சேவையை வழங்கலாம்.

பொது தரவு அலுவலக ஒங்கிணைப்பு: இது ஒவ்வொரு பிடிஓ சேவையாளர்களையும் ஒருங்கிணைப்பது. வைஃபை சேவையை வழங்குவதற்கான அங்கீகாரம், எவ்ளவு தரவுகளை பயன்பாட்டாளர் உபயோகிக்கிறார் போன்ற கணக்குகளை இது மேற்கொள்ளும்.

செயலிகள்: வைஃபை சேவை எங்கெல்லாம் உள்ளதோ அங்கெல்லாம் இன்டர்நெட் சேவையை பெற்றுத்தரும் பணியை இந்த செயலி மேற்கொள்ளும்.

மத்திய பதிவகம்: சென்ட்ரல் ரெஜிஸ்டரி எனப்படும் இந்த பதிவகத்தில் செயலி வழங்குநர்கள், பிடிஓஏக்கள் எனப்படும் ஒருங்கிணைப்பாளர்கள், பிடிஓக்கள் ஆகியவற்றின் தரவுகளும் சேவைகளும் பராமரிக்கப்படும். இந்திய அரசின் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப தரவுகளை கையாளும் மேம்பாட்டு மையம் இந்த பதிவகத்தை நிர்வகிக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Banner

'விவசாயிகளுக்கு எழுதித்தர தயார்' - தோல்வியடைந்த பேச்சுவார்த்தையில் அமித் ஷா

Amit Shah's Talks With Farmer Leaders Fail, No Meeting Today

பட மூலாதாரம், @AmitShah twitter page

விவசாய அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்களுக்கு ம் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் இடையே நேற்று பல மணிநேரம் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது.

இந்திய அரசின் புதிய விவசாய சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லி மாநில எல்லைப் பகுதிகளில் பல்லாயிரம் விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர்.

அமித் ஷா அழைப்பின்பேரில், நேற்று, செவ்வாய்க்கிழமை மாலை இரவு 7 மணிக்கு அமித் ஷாவுக்கும் 13 வெவ்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்த தலைவர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை தொடங்கியது.

இந்த பேச்சுவார்த்தை இரவு வரை நீடித்தது. இதன்பின்பு செவ்வாய் பின்னிரவில் செய்தியாளர்களைச் சந்தித்த வேளாண் அமைப்புகள் தலைவர்களில் ஒருவரான, அகில இந்திய கிசான் சபை எனும் அமைப்பின் பொதுச் செயலாளர் ஹன்னன் மொல்லா அமித் ஷா உடனான சந்திப்பில் இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை என்று தெரிவித்தார்.

டிசம்பர் 9ஆம் தேதி இந்திய அரசு மற்றும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் இடையே நடப்பதாக இருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

"புதிய சட்டங்கள் திருத்தம் செய்யப்படும் என்று எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளிக்க தயார் என்று அமித்ஷா எங்களிடம் தெரிவித்தார். ஆனால் எங்களுக்கு இந்த சட்டங்கள் திரும்ப பெற வேண்டும் என்பதே கோரிக்கை," என்று அவர் தெரிவித்தார் என்கிறது ஏ.என்.ஐ செய்தி முகமை..

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

இந்திய அரசு எழுத்துப்பூர்வமாக தனது முன்மொழிவை அளித்த பின்பு வேளாண் அமைப்புகளின் தலைவர்கள் தங்களது அடுத்த கட்ட திட்டம் குறித்து முடிவு செய்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

டெல்லி - ஹரியானா இடையிலான சிங்கு எல்லையில் இன்று புதன்கிழமை பகல் 12 மணி அளவில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து வேளாண் அமைப்புகளின் தலைவர்கள் கூடி விவாதிக்க உள்ளனர் என்றும் ஹன்னன் மொல்லா தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.

Banner

சூரப்பா மீதான விசாரணை நியாயமற்றது, விசாரணையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் - ஆளுநர் கடிதம்

கோப்புப்படம்
படக்குறிப்பு, கோப்புப்படம்

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் எம் கே சூரப்பா மீது, சுமார் 200 கோடி ரூபாய் ஊழல் செய்ததாகவும், நிதி முறைகேடுகளைச் செய்ததாகவும் புகார் எழுந்தது. எனவே தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் ஒரு விசாரணைக் குழுவை அமைத்திருக்கிறார்கள்.

இந்த விசாரணைக்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைதளங்களில் பல்வேறு குரல்களைப் பார்க்க முடிகிறது.

சில தினங்களுக்கு முன், நடிகர் கமல் ஹாசன், அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பாவை ஆதரித்து ஒரு வீடியோ பதிவை, தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். அந்த பதிவை பலரும் கடுமையாக விமர்சித்து இருந்தார்கள்.

அறத்தின் பக்கம் நிற்பவனைப் பார்த்து 'சங்கி', 'பி டீம்' என்பதா?" என கமல் ஹாசன் மீண்டும் தன் கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்தார்.

இப்போது அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தரை, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தும் ஆதரித்து இருக்கிறார். சில தினங்களுக்கு முன், தமிழக ஆளுநர், தமிழக முதல்வருக்கு ஒரு கடிதம் எழுதினார்.

அதில் "எம் கே சூரப்பா மீதான விசாரணை நியாயமற்றது, விசாரணையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்" என சூரப்பாவுக்கு ஆதரவாகவும், தமிழக அரசின் மீதான அதிருப்தியையும், தன் கடிதத்தில் வெளிபடுத்தி இருந்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.

'100 நாட்களில் 100 மில்லியன் தடுப்பு மருந்து' - ஜோ பைடன்

biden

பட மூலாதாரம், Reuters

அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் தாம் பதவியேற்ற முதல் 100 நாட்களில் 100 மில்லியன் (10 கோடி) மக்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து வழங்க இலக்கு வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வந்தபின், அதை உடலில் செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அமெரிக்கர்கள் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் என்று இந்த மாதத் தொடக்கத்தில் அவர் கூறியிருந்தார்.

தமது புதிய நிர்வாகத்தின் சுகாதாரத்துறை செயலாளராக மற்றும் அதிகாரிகளாக பொறுப்பேற்கவுள்ளவர்களை, செவ்வாயன்று அறிமுகம் செய்து வைத்துப் பேசிய ஜோ பைடன், ஜனவரி 20ஆம் தேதி தாம் அதிபர் பொறுப்புக்கு வந்த பிறகு "100 நாட்களுக்கு மக்கள் முகக் கவசம் அணிய வேண்டும்," என்று தெரிவித்தார்.

Banner image reading 'more about coronavirus'
Banner

"நான் பொறுப்புக்கு வந்த முதல் 100 நாட்களில் கோவிட்-19 நெருக்கடி முடிவுக்கு வராது; என்னால் அதை உறுதி அளிக்க முடியாது; இந்த சிக்கலுக்குள் நாம் மிகவும் வேகமாக நுழையவில்லை; அதனால் அதிலிருந்து மிகவும் வேகமாக வெளிவர முடியாது," என்று ஜோ பைடன் தெரிவித்தார்.

இதனிடையே 'ஆபரேஷன் வார்ப் ஸ்பீட்' எனப்படும் கோவிட்-19 தொற்றுக்கான தடுப்பு மருந்து விநியோகம் தொடர்பான தமது திட்டத்தின் கூட்டமொன்றில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று கலந்து கொண்டார்.

அமெரிக்காவில் இதுவரை 1.5 கோடிக்கும் அதிகமானவர்கள் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 2,85,000-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர் என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் தெரிவிக்கின்றன .

கொரோனாவால் இறந்தவர்கள் மற்றும் பலியானவர்கள் ஆகிய இரண்டு எண்ணிக்கையிலும் உலகில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: