தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு ரூ.2,500: அதிமுக பிரசாரத்தை தொடங்கியபின் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

எடப்பாடி பழனிசாமி

பட மூலாதாரம், Edappadi Palaniswamy FB

படக்குறிப்பு, எடப்பாடி பழனிசாமி

சேலம் மாவட்டத்தில் வரும் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான பிரசாரத்தை சனிக்கிழமை தொடங்கி வைத்த முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி அடுத்து நடந்த விழாவில் தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகை இந்த ஆண்டு ரூ.2,500 ஆக வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

எடப்பாடி தொகுதி நங்கவள்ளி ஒன்றியம், பெரிய சோரகை கிராமத்தில் உள்ள சென்றாய பெருமாள் ஆலயத்தில் வழிபாடு நடத்திய பின் தன் முதல் பிரச்சாரத்தைத் தொடங்கினார் பழனிசாமி.

பிறகு, இருப்பாளி என்ற இடத்தில் நடந்த மினி கிளினிக் தொடக்க விழாவில் அனைத்து ரேசன் அட்டைக்காரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ. 2500 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

முன்னதாக தனது பிரசாரத்தைத் தொடங்கிய பழனிசாமி, சிறப்பாக வடிவமைப்பட்ட வேனில் ஏறி பொது மக்களிடையே உரையாற்றினார்.

"எடப்பாடி தொகுதி அதிமுக-வின் எஃகு கோட்டை. இங்குக் கனிமொழி பிரச்சாரத்தைத் தொடங்கி இருக்கிறார். இங்கு திமுக-வின் அனைத்து தலைவர்களும் பிரசாரத்தைத் தொடங்கினாலும், திமுக வெற்றி பெற முடியாது. கடந்த 43 ஆண்டுகளாக, அதிமுக-வும், அதிமுக கூட்டணிக் கட்சிகளுமே எடப்பாடி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளன.

நான் பதவியேற்ற போது ஒரு வாரமோ, ஒரு மாதமோ, ஆறு மாதமோ என்று ஆட்சி கவிழ்ந்து விடும் என்று சொன்னார்கள். தற்போது நான்கு ஆண்டுகளாகச் சிறந்த முறையில் ஆட்சியிலேயே இருக்கிறோம்.

இன்றைக்கு பழனிசாமி என்றால் யாருக்கும் தெரிவதில்லை. எடப்பாடியார் என்றுதான் அழைக்கிறார்கள்" என்று அவர் பேசினார்.

உரையின் முக்கிய அம்சங்கள்

பழனிசாமி ஆற்றிய உரையில் இருந்து:

"பதவியேற்றபோது தமிழகத்தில் வறட்சி ஏற்பட்டது. அதைத் திறம்பட சமாளித்து குடிநீர் பிரச்சனையை தீர்த்துள்ளோம். காவிரி ஆற்றில் வெள்ளக்காலத்தில் வீணாகக் கடலில் கலக்கும் நீரை தடுத்து நிறுத்தி பல பகுதிகளில் தண்ணீர் பிரச்னையை தீர்க்கும் வகையில் கதவணைகளையும், தடுப்பணைகளையும் அமைத்துள்ளோம். இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

பிரசாரப் பயணம் தொடங்கிய எடப்பாடி பழனிசாமி.

பட மூலாதாரம், G.Sakthivel Murugan

படக்குறிப்பு, பிரசாரப் பயணம் தொடங்கிய எடப்பாடி பழனிசாமி.

புயல், வெள்ளம் என இயற்கை சீற்றங்களால் தமிழகம் பாதிக்கப்பட்டாலும் உடனடியாக அரசு துரித நடவடிக்கை எடுத்து அனைவருக்கும் நிவாரணம் வழங்கியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று 2020 மார்ச் மாதம் பரவத் தொடங்கியது. இன்று வரை இந்த நோய் உலகத்தை மிரட்டி வரும் வேளையில் தமிழக அரசு சிறப்பாக தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டதால் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.

அண்மையில், பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் கடந்த சில நாள்களாக கொரோனா பாதிப்பே பதிவாகவில்லை என்ற தகவலைத் தெரிவித்தார்கள். இதற்குக் காரணம் தமிழக அரசு மேற்கொண்ட பணிகளுக்குக் கிடைத்த பலனே" என்று அவர் குறிப்பிட்டார்.

'பிரதமரே கூறினார்'

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றினை சிறப்பாகக் கட்டுப்படுத்துகிறார்கள் என்று பிரதமர் நரேந்திர மோதியே பாராட்டினார் என்று கூறிய பழனிசாமி, தமிழ்நாட்டைப் பின்பற்றி மற்ற மாநில அரசுகளும் வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் கூறியதாகவும். தெரிவித்தார்.

"நாட்டு மக்களுக்குப் பெரிய அளவில் அதிமுக அரசு நல்லது செய்து வருகிறது. ஆனால், அதற்கு மாற்றாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டி வருகிறார். எங்களது ஆட்சியின் சாதனைகள் ஏராளம்" என்றார் அவர்.

உள்ளாட்சித் துறையில் நூற்றுக்கும் மேற்பட்ட விருதுகளைத் தமிழக அரசு வாங்கியுள்ளது. நீர் மேலாண்மை மேற்கொண்டதன் காரணமாகத் தமிழகம் முழுவதும் அனைத்து ஏரிகளும் குடிமராமத்து முறையில் தூர் வாரப்பட்டுள்ளன.

இதனால் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. 406 கோடி ரூபாயில் புதிய கதவணை கட்ட தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது .நீர் மேலாண்மையைச் சரியாகச் செயல்படுத்தத் தமிழக அரசு முழுவீச்சில் செயல்பட்டு நீர் மேலாண்மையில் 2019, 2020 ஆம் ஆண்டுகளுக்கான தேசிய விருதை தமிழக அரசு பெற்றுள்ளது என்றார் அவர்.

"திமுக ஆட்சிக்காலத்தில் மின் தட்டுப்பாடு அதிகமாக இருந்தது. ஆனால், அதிமுக அரசு பதவியேற்ற பின் இந்தியாவில் உபரி மின்சாரம் செய்யும் மாநிலமாக தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. மின் மிகை மாநிலமாகத் தமிழகம் தொடர்ந்து இருப்பதால், உலகில் உள்ள பெரு நிறுவனங்கள் தமிழ்நாட்டைத் தேர்ந்தெடுத்து தொழில் துவங்க முன்வந்துள்ளன.

உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தியதன் மூலம், 304 தொழிற்சாலைகள் அமைக்க இதுவரை ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காலத்தில் கூட தமிழ்நாட்டில் மட்டும்தான் தொழில் தொடங்க தொழிலதிபர்கள் முன்வந்தார்கள். படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தருவதில் அரசு முக்கிய பங்கு வகிக்கிறது" என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.

கடந்த ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த மாணவர்கள் ஆறு பேர் மட்டுமே. ஆனால், அரசுப் பள்ளியில் படிக்கும் 41% மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கியதன் மூலம், அரசுப்பள்ளி மாணவர்கள் 313 பேர் மருத்துவப்படிப்பில் சேர்ந்துள்ளனர். இதில் சேலம் மாவட்டத்தில் மட்டும் 26 பேர் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். இன்று ஏழை மாணவர்கள் எண்ணற்றோர் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் சூழலை அதிமுக அரசு உருவாக்கியுள்ளது என்றார் அவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :