தண்ணீர் பிரச்சனை: "தினமும் இரண்டு பக்கெட் தண்ணீர் மட்டுமே பயன்படுத்துகிறேன்" - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில்

எடப்பாடி பழனிசாமி

பட மூலாதாரம், Facebook

என்னுடைய வீட்டில் நான் ஒருவர் தான் இருக்கிறேன். என்னால் ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீரை உபயோகப்படுத்திவிட முடியும்? என இன்று நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

குடிநீர் பிரச்சனை தொடர்பாக ஆலோசிப்பதற்காக இன்று சென்னையிலுள்ள தலைமை செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர்கள், துறை செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கக் கூடிய பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம் மற்றும் செங்குன்றம் ஏரிகள் மழையில்லாத காரணத்தால் முழுவதும் வற்றிவிட்டது. தொடர்ந்து சில ஆண்டுகளாக பருவ மழை பொய்த்துப்போனதால் நிலத்தடி நீரும் குறைந்துவிட்டது. இதனால் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் தண்ணீர் இன்றி தவிக்கின்றனர்" என்றார்.

மெட்ரோ குடிநீர்

சென்னை மாநகரின் தண்ணீர் பஞ்சத்தை போக்குவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, "சென்னை நகரத்தை பொறுத்தவரை 522 லிட்டர் தண்ணீர் மெட்ரோ குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வளவு கடுமையான தண்ணீர் பஞ்சத்திலும் கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டம் மூலம் 200 மில்லியன் லிட்டர் தண்ணீரும், நிலத்தடி நீரின் மூலம் பெறப்பட்ட தண்ணீரும், சென்னைக்கு அருகாமையில் உள்ள சிற்றூர்களிலிருந்தும் தண்ணீர் எடுக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்படுகிறது.

chennai water scarcity

பட மூலாதாரம், Getty Images

இதுபோக தினமும் 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு ரயில் மூலம் 6 மாதங்களுக்கு கொண்டுவர முடிவு செய்யப்பட்டிருக்கிறது. சென்னையில் தினமும் 9,800 லாரிகள் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கூடுதல் லாரிகள் விடலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேலும் கூறினார்.

நிதி ஒதுக்கீடு

தமிழகம் முழுவதுமுள்ள தண்ணீர் பஞ்சத்தை சமாளிப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பேசிய முதல்வர், "2019 ஜனவரி 31ஆம் தேதி நடந்த ஆலோசனை கூட்டத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து மாவட்ட ஆட்சியாளர்களுக்கு ஆணை பிறப்பித்து மற்ற நகரங்களுக்கும் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு வழங்க பெருநகர குடிநீர் மற்றும் கழிவு நீர் வாரியத்துக்கு 158.42 கோடியும் தமிழ்நாடு குடிநீர் வாரியத்துக்கு 36 கோடியும் நகராட்சிக்கு 56 கோடியும் பேரூராட்சிக்கு 148.32 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த குடிநீர் பஞ்சத்தை போக்க குடிமராமத்து திட்டம் மூலம் ஏரிகள் தூர்வாரப்படும். இந்த திட்டத்தின் சிறப்பு அம்சம் விவசாயிகளுக்கு பயனளிக்கும் படி முழு தொகையும் அவர்களிடமே கொடுத்து ஏரிகள், மதகுகள், கால்வாய்கள் என அனைத்தும் தூர்வாரப்படும். உள்ளாட்சி மற்றும் பொதுப்பணித்துறையின் கீழ் 39,222 ஏரிகள் உள்ளன. அதில் பொதுப்பணித்துறையிடம் மட்டுமே 14000 ஏரிகள் உள்ளன இவையனைத்தும் தூர்வாரப்படும். 2017ஆம் இதற்காக 100 கோடி ஒதுக்கப்பட்டு 1,519 ஏரிகள் தூர்வாரப்பட்டன. 2018ஆம் ஆண்டு 1,011 ஏரிகளில் பணிகள் தொடங்கப்பட்டு 90 சதவீத பணிகள் முடிவடைந்தது. இப்போது 2019-20 ல் 499.968 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

கேரளா குடிநீர்

mullai periyar dam

பட மூலாதாரம், facebook

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சத்திற்கு உதவும் வகையில் கேரள அரசு அளிக்க முன்வந்த தண்ணீரை தமிழக அரசு நிராகரித்ததாக வெளியான செய்தி குறித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, "கேரள அரசு தண்ணீர் பஞ்சத்தை போக்க 2 மில்லியன் லிட்டர் தண்ணீர் தருவதாக கூறியது. ஆனால் தினமும் இரண்டு மில்லியன் லிட்டர் என்றால் ஏற்று கொள்ளலாம், அதைவிடுத்து ஒருமுறை தந்தால் போதுமானதாக இருக்காது. முல்லைப்பெரியாறு அணையின் கொள்ளளவை 142 முதல் 182 அடியாக உயர்த்த ஆய்வுக்குழு அமைத்து அதற்கு அனுமதியும் வாங்கியது தமிழக அரசு. ஆனால் அதை தடுக்க போதிய முயற்சிகளை செய்யும் கேரள அரசு அதை நிறைவேற்ற வழிவகுத்தால் தமிழகத்திலுள்ள 6 மாவட்டங்கள் பலனடையும்" என முதல்வர் கூறியுள்ளார்.

'இரண்டுபக்கெட் தண்ணீர்'

ஆங்கில ஊடகம் வெளியிட்ட வீடியோ குறித்து கேட்டபோது, "அதெல்லாம் உண்மையில்லை. அமைச்சர்கள் வீட்டிலும் நான்கு பேர் தான் இருப்பார்கள். என்னுடைய வீட்டில் கடந்த இரண்டு மாதங்களாக நான் ஒருவர் தான் இருக்கிறேன். என்னால் ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் உபயோகப்படுத்த முடியும். மிஞ்சிப்போனால், ஒரு நாளுக்கு வெறும் இரண்டு பக்கெட் தண்ணீர் மட்டுமே பயன்படுத்துவேன். இந்த குற்றச்சாட்டையெல்லாம் ஏற்க முடியாது" என விளக்கம் கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :