எட்டு வழிச்சாலை: முதல்வருக்கு எதிராக போராட்டத்தில் குதித்த சேலம் விவசாயிகள்

விவசாயிகள் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த மாவட்டமான சேலத்தில் தங்கி, கரூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா தடுப்பு மற்றும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தை கடந்த இரு தினங்களாக நடத்தினார்.

இதையொட்டி அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், "சென்னை - சேலம் எட்டு வழிச்சாலைக்கு 92 சதவீத விவசாயிகள் நிலம் கொடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்," என்று தெரிவித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் மாவட்டத்தில் எட்டு வழிச் சாலை நில அளவீடு செய்யப்பட்ட பாரப்பட்டி பகுதியில் விவசாயிகள் கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் கலந்து கொண்டவரும், எட்டு வழிச்சாலை திட்டத்தை ஆரம்பம் முதலே எதிர்த்து வருபவருமான மோகனசுந்தரமிடம் பிபிசி தமிழ் பேசியது.

விவசாயிகள் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம்

"சென்னை - சேலம் எட்டு வழிச் சாலைக்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்தியது தவறு என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதை அண்மையில் உச்சநீதிமன்ற தீர்ப்பும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தமிழக முதல்வர் 92 சதவீத விவசாயிகள் விருப்பப்பட்டு எட்டு வழிச்சாலைக்கான நிலங்களை வழங்குவதாக தெரிவித்துள்ளார். அது தவறான தகவல். இரண்டு சதவீத விவசாயிகள் கூட நிலங்களை தர சம்மதிக்காத நிலையில் முதல்வர் பொய்யான தகவலை வெளியிட்டுள்ளார். 92 சதவீத விவசாயிகள் என குறிப்பிடும் முதல்வர், அவர்களின் பட்டியலை வெளியிட முடிந்தால் நல்லது," என்று மோகனசுந்திரம் கூறினார்.

எட்டு வழிச்சாலை வழக்கு தொடர்பான வாதத்தின்போது உயர்நீதிமன்ற நீதிபதிகள், இதுபோன்ற விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்தினால் வருங்கால சந்ததியினரின் உணவுத்தேவையை எப்படி பூர்த்தி செய்வீர்கள் என்று கேள்வி எழுப்பினார்கள். மேலும், விவசாய நிலங்கள் பாதிப்பு இல்லாமல் திட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள்.

காணொளிக் குறிப்பு, எட்டு வழிச்சாலை: ''முதல்வர் எடப்பாடி இப்படி பொய் சொல்லலாமா?''

"இத்திட்டத்தைச் செயல்படுத்தினால், மூன்று லட்சத்துக்கு மேற்பட்ட மரங்கள் வெட்டப்படும். மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட கிணறுகள், போர்வெல்கள் அழிக்கப்படும். நூற்றுக்கணக்கான நீர் வழிப்பாதைகள், நீரோடைகள், குளங்கள், குட்டைகள் மூடப்படப்படும். பல ஆயிரம் டன் உணவுப்பொருள் உற்பத்தி பாதிக்கப்படும்."

"இத்திட்டத்தால் இயற்கை வளங்களும், சுற்றுச்சூழலும் பாதிக்கப்படும். இத்திட்டத்தால், 60 கிலோமீட்டர் தூரம் பயணத்தூரம் மிச்சமாகி என்கிறார் முதல்வர். ஆனால், மிச்சமாவது வெறும் 11 கிலோமீட்டர் தூரம் மட்டுமே. பயண நேரம் குறையும் என்ற தகவலும் தவறு. இதை எல்லாம் முதல்வர் அறியாமல் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதிலேயே முழு முனைப்பிலேயே உள்ளார்."

விவசாயிகள் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம்

" எட்டு வழிச்சாலையால், எட்டாயிரத்துக்கும் அதிகமான விவசாயிகள் தங்களுடைய நிலத்தை இழந்து சொந்த ஊரிலேயே அகதிகளாக மாறும் சூழல் ஏற்படும். ஆனால், இதை விவசாயி என்று சொல்லி வரும் தமிழக முதல்வர் அறிவாரா என்று தெரியவில்லை. ஏற்கெனவே உள்ள சாலைகள் விரிவுபடுத்தினாலேயே போதுமானது. ஆனால், அதை விட்டுவிட்டு புதியதாக எட்டு வழிச்சாலை போடுவது தேவையில்லாத ஒன்று. பொருளாதார இழப்பு மட்டுமல்ல, விவசாயிகள் வேளாண் நிலங்களும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரமும் பெரிய அளவில் பாதிக்கப்படவே செய்யும். இதனால் இத்திட்டத்தை முழுமையாக எதிர்க்கிறோம்."

முதல்கட்டமாக, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாய நிலங்களில் கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்துள்ளோம். எட்டுவழிச் சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் தங்களுடைய வீடுகளில் கருப்புக் கொடி கட்டி எதிர்ப்பு தெரிவிக்க உள்ளோம். தொடர் போராட்டங்களையும் தொடங்க தீர்மானித்துள்ளோம்" என்று மோகனசுந்திரம் தெரிவித்தார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :