பாண்டியன் ஸ்டோர்ஸ் 'முல்லை' சித்ரா மரண வழக்கு: தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் ஹேமந்த் கைது

'பாண்டியன் ஸ்டோர்ஸ்' முல்லை

பட மூலாதாரம், @alex_judeson via CHITHUVJ instagram page

சின்னத்திரை கலைஞர் சித்ரா மரண வழக்கில் அவரது கணவர் ஹேமந்த் நசரத்பேட்டை காவல்துறையினரால் திங்கட்கிழமையன்று இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தற்கொலைக்குத் தூண்டியதாக அவர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

சின்னத்திரைக் கலைஞரான சித்ரா கடந்த டிசம்பர் 9ஆம் தேதி நசரத்பேட்டை அருகில் உள்ள தங்கும் விடுதியின் அறை ஒன்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவர் தூக்கிலிட்டு, மரணமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

அவருக்கு ஹேமந்த் என்பவருடன் சில நாட்களுக்கு முன்புதான் திருமணமாகியிருந்தது. இதையடுத்து இந்த மரணம் குறித்து கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

இந்த மரணம் தொடர்பாக அவரது கணவர் ஹேமந்த்திடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவந்தது.

இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூர் ஆர்டிஓ அலுவலகத்தில் கோட்டாட்சியர் விசாரணை திங்கட்கிழமையன்று துவங்கியது. அந்த விசாரணைக்கு ஆஜராக வந்த சித்ராவின் தாயார் விஜயா, தன் மகளின் மரணத்திற்கு ஹேமந்த்தான் காரணம் என ஊடகங்களிடம் குற்றம்சாட்டினார். ஆனால், இதனை ஹேமந்த்தின் பெற்றோர் மறுத்தனர்.

இந்த நிலையில், சித்ரா கணவர் ஹேம்நாத் திங்கட்கிழமையன்று இரவு கைதுசெய்யப்பட்டார்.

மருந்தகம் தொடர்புடைய தொழிலில் ஈடுபட்டுள்ள ஹேமந்த், சித்ராவுடன் நிச்சயதார்த்தம் நடந்த பிறகு அவரை பதிவுத் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களின் திருமணத்தை முறைப்படி அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடத்த இரு வீட்டாரும் திட்டமிட்டிருந்தனர். இந்த நிலையில், சென்னையை அடுத்த பெங்களூரு நெடுஞ்சாலையில் உள்ள திரைப்பட நகரில் தொலைக்காட்சி தொடர் ஒன்றில் நடித்து வந்த சித்ரா, தினமும் கோட்டூர்புரத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து நீண்ட தூரம் பயணம் செய்வதை தவிர்க்க விரும்பினார்.

'பாண்டியன் ஸ்டோர்ஸ்' முல்லை

பட மூலாதாரம், @CHITHUVJ INSTAGRAM PAGE

அதனால் நசரத்பேட்டையில் உள்ள விடுதியில் ஹேமந்துடன் தங்க அவர் திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

மேலும் சித்ராவுக்கு நிதிப்பிரச்னை இருந்ததாகவும், தங்களின் திருமணத்தை மிகப்பெரிய அளவில் நடத்த அவர் திட்டமிட்டதால் பணப் பிரச்னை இருந்ததாக காவல்துறையினரிடம் ஹேமந்த் கூறியதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த நிலையில், சித்ரா இறந்த நாளுக்கு முன்தினம் படப்பிடிப்பு தளத்துக்கே சென்று சித்ராவுடன் ஹேமந்த் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக படப்பிடிப்பு தளத்தில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொலைக்காட்சி தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை சித்ரா விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: