விவசாயிகள் போராட்டத்துக்கு முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா ஆதரவா? உண்மை என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஷ்ருதி மேனன்
- பதவி, பிபிசி ரியாலிட்டி செக்
மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து, போராடி வருகிறார்கள் இந்திய விவசாயிகள். இருப்பினும், வேளாண் சட்டங்களை, அரசு திரும்பப் பெறுவது போலத் தெரியவில்லை.
இந்த விவசாயிகள் போராட்டம் மிகப் பெரிய அளவில் அரசியலாகி வருகிறது.
விவசாயச் சட்டங்களை ஆதரிப்பவர்கள் மற்றும் எதிர்ப்பவர்கள் என இரு தரப்பில் இருப்பவர்களும், தங்களுக்குச் சாதகமாக சமூக வலைதளங்களில் பிரசாரங்களை மேற்கொள்ள முயன்று வருகிறார்கள்.
பிரபலமானவர்ளைக் குறித்து, தவறான செய்திகளைப் பரப்ப, நடந்த முயற்சிகளைக் பிபிசி கவனித்தது.
மோதியைச் சந்தித்தது வெட்கக்கேடானது என ஒபாமா கூறினாரா?
முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, பதவியில் இருந்த போது, அந்நாட்டின் அதிபர் என்கிற முறையில், பல முறை நரேந்திர மோதியைச் சந்தித்தார். 2014-ம் ஆண்டு முதல், நரேந்திர மோதிதான் இந்தியாவின் பிரதமராக இருந்து வருகிறார்.
"இந்த நபருடன் கை குலுக்கியதை நினைத்து, இன்று நான் வெட்கப்படுகிறேன்" என, பிரதமர் மோதியும் ஒபாமாவும் கை குலுக்குவது போன்ற படத்துடன், பராக் ஒபாமா தன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கடந்த 05 டிசம்பர் அன்று பகிர்ந்து இருப்பது போன்ற படங்கள் (ஸ்கிரீன் ஷாட்கள்) சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இது போன்ற பதிவுகளில், விவசாயப் போராட்டங்களை ஆதரிப்பதாக ஹேஷ்டேகுகள் இருக்கின்றன.
இந்த ஸ்கிரீன் ஷாட்டில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் படம், உண்மையாகவே 2014-ம் ஆண்டு மோதியும், ஒபாமாவும் சந்தித்துக் கொண்ட போது எடுக்கப்பட்ட படம். இந்த ஸ்கிரீன் ஷாட் பார்ப்பதற்கு உண்மை போலவே இருக்கிறது.
ஆனால் உண்மையில் இந்த ட்விட்டர் பதிவு போலியானது. ஸ்கிரீன் ஷாட்டில் இருக்கும் ஆங்கிலம் மோசமாக இருக்கிறது. அதில் எழுத்துப் பிழை வேறு இருக்கிறது.
ஒபாமாவின் ட்விட்டர் பதிவை, பொய் பிரசாரம் செய்தவர்கள் திருத்தி இருப்பது போலத் தெரிகிறது.
ஒபாமாவின் ட்விட்டர் பதிவுகளை தேதி வாரியாக வரிசையாகப் பார்த்தால், கடந்த மாதம் விவசாயிகள் போராட்டம் தொடங்கியதில் இருந்து, ஒபாமா இப்படி ஒரு விஷயத்தை ட்விட்டரில் பதிவிடவில்லை. எனவே இது தவறாக பரப்பப்பட்டு வருகிறது என்பது உறுதியாகிறது.

ஜஸ்டின் ட்ரூடோ விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து சீக்கியர்களுடன் அமர்ந்தாரா?
கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்திய விவசாயிகள் போராட்டத்தைக் குறித்து, தன் கருத்தை வெளியிட்டார். இந்திய அரசு சார்பில் இதை கடுமையாக மறுத்தார்கள்.
இது போக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, சீக்கிய விவசாயிகளை ஆதரிக்கும் விதத்தில், சீக்கியர்களுடன் அமர்ந்து இருப்பதாக ஒரு படம் சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டு இருக்கிறது. இது தவறாக சித்தரிக்கப்பட்டு இருக்கிறது.

இந்தபடம் குறைந்தது ஐந்து ஆண்டுகள் பழமையான படம். இதை கனடா நாட்டின் பிரதமர் அலுவலகமே உறுதி செய்து இருக்கிறது.
தற்போது ஜஸ்டின் ட்ரூடோ தாடி வளர்த்து வருகிறார். ஆனால் மேலே சீக்கியர்களுடன் அமர்ந்து விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதாகக் குறிப்பிடப்படும் படத்தில், பிரதமர் தாடி இல்லாமல் இருக்கிறார் என்பதையும் கனடாவின் பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டு இருக்கிறது.
ஜஸ்டின் ட்ரூடோ கடந்த நவம்பர் 2015-ல், ஒட்டாவாவில் இருக்கும் சீக்கிய மத மையத்துக்குச் சென்று இருந்த போது, ஒரு உள்ளூர் செய்தி நிறுவனத்தால் எடுக்கப்பட்ட படம் அது.
இந்திய விவசாயிகள் போராட்டம் குறித்து, ஜஸ்டின் ட்ரூடோவின் கருத்து என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால், இந்தப் படம் தவறான கண்ணோட்டத்தில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

கனடா நாட்டில், இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட மக்கள் அதிக அளவில் இருக்கிறார்கள். குறிப்பாக சீக்கியர்கள்.
பாஜகவைச் சேர்ந்த இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவா?
இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் மற்றும் பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ராஜ்நாத் சிங், விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துப் பேசி இருப்பதாக சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ பரவி வருகிறது.

பட மூலாதாரம், Getty Images
அந்த வீடியோவில் "இந்தப் போராட்டம் குறித்து எனக்கு முன்பே தெரிந்திருந்தால், நான் அன்றே என் ஆதரவைத் தெரிவித்து இருப்பேன்" எனக் கூறுகிறார் ராஜ்நாத் சிங்.
விவசாயிகள் போராட்டம், பாஜகவை இரண்டாகப் பிளந்து இருப்பதாக, இந்த வீடியோ தொடர்பான சில சமூக வலைதளப் பதிவுகள் குறிப்பிடுகின்றன.
இந்த வீடியோ கடந்த 2013-ம் ஆண்டு வெளியானது என்கிறது கூகுள். ராஜ்நாத் சிங் எதிர்கட்சியாக இருந்த போது, காங்கிரஸ் ஆட்சியை எதிர்த்து நிலையான வருமானம் வேண்டும் என விவசாயிகள் நடத்திய போராட்டத்துக்கு அவர் ஆதரவளித்திருந்தார்.
இந்த வீடியோவை, ராஜ்நாத் சிங்கின் அதிகாரப்பூர்வ வலைதளத்திலும் பார்க்க முடிகிறது.
பாஜக அரசு, விவசாயிகளின் நலன்களுக்கு எதிராக எதையும் செய்யாது என, கடந்த அக்டோபர் மாதம் ராஜ்நாத் சிங் கூறியதும் இங்கு நினைவுகூரத்தக்கது.
விவசாயிகளுக்கு எதிராக பஞ்சாப் முதல்வர் செயல்படுகிறாரா?
முகேஷ் அம்பானி மற்றும் பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் கை குலுக்கிக் கொண்டு இருப்பது போன்ற படத்துடன், பாரத் பந்துக்கு ஒரு நாளுக்கு முன் சந்தித்துப் பேசியதாக சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியாயின.
ஒரு பக்கம் காங்கிரஸ் கட்சி, விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்துக் கொண்டு இருக்கிறது, மறுபக்கம் முகேஷ் அம்பானி போன்ற தொழிலதிபர்களுடன் காங்கிரஸ் சந்தித்துக் கொண்டு இருக்கிறது. என்ன மாதிரியான அரசியல் இது என ஒரு சமூக வலைதளப் பதிவு கேள்வி எழுப்பி இருக்கிறது.
அமரீந்தர் சிங் பொதுவெளியில் விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்தாலும், தனிப்பட்ட முறையில், விவசாயச் சட்டங்களின் மாற்றத்தினால் நன்மை அடைய தொழிலதிபர்களுக்குச் சாதகமாக, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகப் பொருள்படுகிறது இந்தப் பதிவு.
விவசாயச் சட்டங்கள் குறித்து மத்திய அரசு முன்மொழிந்த திருத்தங்களை விவசாயிகள் நிராகரித்த போதும், அமரீந்தர் சிங் ஏற்றுக் கொண்டதாக சில சமூக வலைதளப் பதிவுகளைக் காண முடிகிறது. இது தவறானது.


உண்மையில் இந்தப் படம் கடந்த அக்டோபர் 2017-ல் எடுக்கப்பட்டது. பஞ்சாப் மாநிலத்தில் முதலீட்டு வாய்ப்புகளைக் குறித்து, முகேஷ் அம்பானி உடன் சந்தித்துப் பேசிய போது எடுக்கப்பட்ட படம் இது.
உண்மையில் அமரீந்தர் சிங், புதிய வேளாண் சட்டங்களை முழுமையாக நீக்க வேண்டும் என, விவசாயிகள் போராட்டத்துக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:








