விவசாயிகள் போராட்டம்: வேளாண் சட்டங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த பாஜக திட்டம்

பட மூலாதாரம், Hindustan times via getty images
முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான செய்திகள் சிலவற்றைத் தொகுத்து வழங்குகிறோம்.
வேளாண் சட்டங்கள் - பாஜக விழிப்புணர்வு கூட்டம்
இந்திய அரசு புதிதாக கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதைச் சமாளிக்க உத்தரப் பிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகள் கூட்டத்தை நடத்த உள்ளதாக பாரதிய ஜனதா கட்சி ஞாயிறன்று தெரிவித்துள்ளது என்கிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி.
புதிய வேளாண் சட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 'கிசான் சம்மேளன்' (விவசாயிகள் கூட்டம்) எனும் நிகழ்வு டிசம்பர் 14 முதல் டிசம்பர் 18 வரை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடக்கும் என்று பாரதிய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.
இன்று திங்கட்கிழமை (டிசம்பர் 14) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் அடையாள உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
விவசாயிகளின் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கும் அதே நாளில் தனது விழிப்புணர்வு பிரசாரத்தை பாஜக தொடங்குகிறது.
விவசாயிகள் தாங்கள் போராடும் இடங்களிலேயே உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்வார்கள் என்று விவசாயிகள் தலைவர்களில் ஒருவரான குருனாம் சிங் சதூனி கூறியுள்ளார் என்கிறது அந்தச் செய்தி.
தமிழகத்தில் எப்போது மழை பெய்யும்?

பட மூலாதாரம், Getty Images
தமிழகம் மற்றும் புதுவையில் டிசம்பர் 16, 17 ஆகிய தேதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது என்கிறது தினத்தந்தி செய்தி.
இந்த மாதம் இறுதிவரை வடகிழக்கு பருவமழை தொடரும். எனவே இம்மாதம் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
கடந்த ஒரு வாரமாக வறண்ட வானிலை நிலவி வந்தாலும், வடகிழக்கு பருவ காற்றின் காரணமாக 16ம் தேதிக்கு பிறகு கனமழை பெய்யும் என்று அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
கேரளாவில் கொரோனா தடுப்பூசி - பினராயி விஜயன் மீது புகார்

பட மூலாதாரம், Google
கேரளாவில் அனைத்து மக்களுக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டும் என்று முதல்வர் பினராயி விஜயன் விடுத்த அறிவிப்புக்கு எதிராக, எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், பாஜக ஆகியவை மாநிலத் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளன என இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி தெரிவிக்கிறது.
மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடந்து வரும்போது, முதல்வர் பினராயி விஜயனின் அறிவிப்பு தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாகும் என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மூன்று கட்டங்களாக நடந்து வரும் கேரள உள்ளாட்சித் தேர்தலில் இருகட்டத் தேர்தல் முடிந்துள்ளது. வரும் 14-ம் தேதி இறுதிக்கட்டத் தேர்தல் நடைபெற உள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












