எட்டு வழிச்சாலை: "உயர்நீதிமன்ற தீர்ப்பை ஏற்று திட்டத்தை கைவிடவேண்டும்" - விவசாயிகள் வலியுறுத்தல்

சென்னை - சேலம் 8 வழிச் சாலைக்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை ஏற்று, திட்டத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
இந்த வழக்கில் அரசு மேற்கொண்ட மேல்முறையீட்டு வழக்கு வேகமாக நடந்து வருவதால் விவசாயிகள் இந்தப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
ரூபாய் 10 ஆயிரம் கோடி செலவில் அமைக்கத் திட்டமிடப்பட்ட இந்த சாலை சென்னையிலிருந்து காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களின் வழியாக 277கிமீ நீளம் சென்று சேலத்தில் இணையும் என்று திட்டமிடப்பட்டது. இதற்காக 5 மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தும் பணிகளை தமிழக அரசு தொடங்கிய நிலையில், இந்த திட்டத்தில் நிலங்களை இழக்கும் விவசாயிகள் உள்ளிட்டோர் போராட்டத்தைத் தொடங்கினர்.
இந்த திட்டத்தின் பெரும்பகுதி சாலை திருவண்ணாமலை மாவட்டத்துக்குள் வரும். ஆகவே, இந்த 8 வழி திட்டத்தால் திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப் படுகின்றனர் என்று கூறி, அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.
குறிப்பாக, திருவண்ணாமலை மாவட்டத்தின், செய்யாறு, வந்தவாசி, செங்கம், ஆரணி உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் செல்லும் இந்த திட்டத்தால், 92 கிராமங்களில் உள்ள விளை நிலங்கள், ஏரிகள், குளங்கள், கிணறுகள், வீடுகள் இத்திட்டத்திற்காகக் கையகப்படுத்தப்பட உள்ளன.
இந்த திட்டத்திற்கு உயர் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெறப்பட்ட நிலையில், மத்திய அரசு இந்த திட்டத்தை மீண்டும் விரைவுபடுத்த நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இதை தொடங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. எனவே, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, செங்கம் பகுதி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கருப்புக் கொடி ஏந்தி, மடிப்பிச்சை எடுத்து அவர்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் : இதுவே கடைசி கொள்ளை நோய் அல்ல
- கொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன?

இதுகுறித்து, 8 வழிச் சாலை எதிர் இயக்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளரும், வழக்கறிஞருமான அபிராமன் கூறுகையில், "இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ச்சியாகப் போராட்டம் நடத்தி வருகிறோம். இதற்கிடையில், சென்னை உயர் நீதிமன்றம் மத்திய அரசு வெளியிட்ட 8 வழி பசுமை சாலைக்கான அறிவிக்கை செல்லாது என அறிவித்து, அதற்குத் தடை விதித்தது. மேலும், விவசாயிகளிடம் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது.

இதனையடுத்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு நிலுவையிலிருந்த நிலையில், மத்திய தரைவழி போக்குவரத்து துறை மேற்கொண்டு ஒரு மனு தாக்கல் செய்துள்ளது" என்றார் அவர்.
மேலும் அவர் கூறுகையில், "இந்த மனு மீதான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தற்போது நடந்து வருகிறது. ஆகவே, உயர் நீதிமன்றத்தில் இந்த திட்டத்திற்குத் தடை விதித்துள்ள நிலையில், மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து நீதிமன்றத்தில் இந்த திட்டத்தை விரைவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
ஆகவே, இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், உயர் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்று திட்டத்தைக் கைவிட வலியுறுத்தியும், போராட்டம் நடத்தினோம். இந்தப் போராட்டத்தில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கை (EIA) 2020ஐ திரும்பப்பெறவும் வலியுறுத்தினோம்," என்று தெரிவித்தார் அபிராமன்.
பிற செய்திகள்:
- எலி சைசில் ஒரு யானை - 50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கண்டுபிடிப்பு
- நீர் குறித்த தமிழர் அறிவு: கல்லணை முதல் முறைப்பானை வரை - இவற்றை நீங்கள் அறிவீர்களா?
- ஒரேவகை பட்டாம்பூச்சி, 67 தோற்றங்கள்: படம்பிடித்து சாதித்த புகைப்படக்கலைஞர்
- சுஷாந்த்சிங் ராஜ்புத் வழக்கு: சிபிஐ விசாரிக்க தடையில்லை என உச்ச நீதிமன்றம் உத்தரவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












