'இந்தியாவில் ஜனவரி மாதம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட வாய்ப்பு' - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன்

பட மூலாதாரம், Getty Images
முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.
இந்தியாவில் வரும் ஜனவரி மாதம் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட வாய்ப்புள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார் என்கிறது தினத்தந்தியின் செய்தி.
இந்தியாவிலும் விரைவில் கொரோனா தடுப்பு மருந்து மக்களுக்கு செலுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. பாரத் பயோடெக், சீரம் இன்ஸ்ட்யூட் ஆப் இந்தியா மற்றும் பைசர் ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ள தடுப்பு மருந்துகளை இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு ஆய்வு செய்து வருகிறது.
இந்நிலையில் இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், தடுப்பூசிகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் ஆகியவற்றில் நாங்கள் சமரசம் செய்ய விரும்பவில்லை என்று தெரிவித்தார். மேலும் வரும் ஜனவரி மாதத்தின் எந்த வாரத்திலும் இந்திய மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட வாய்ப்புள்ளது என்று அவர் கூறியுள்ளார் என்று விவரிக்கிறது அச்செய்தி.
'பாரதியின் விருப்பத்தை மோடி நிறைவேற்றுகிறார்' - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

பட மூலாதாரம், Getty Images
பாரதியின் விருப்பத்தை பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றி வருகிறார் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார் என்கிறது தினமணியின் செய்தி.
வானவில் பண்பாட்டு மையம் சார்பில் இணையவழியில் நடைபெற்று வந்த பன்னாட்டு பாரதி விழா, ஞாயிற்றுக் கிழமை நிறைவடைந்தது. இதில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று சிறப்பு உரை யாற்றினார்.
"பன்னாட்டு பாரதி விழாவின் தொடக்க நிகழ்வில், பாரதியின் கவிதைகளை தனது உரையின் ஓர் அங்கமாக்கினார் பிரதமர். இதன்மூலம் பாரதியின் கவிதைகள் அவர் மனதில் ஆழப் பதிந்துள்ளதை நாம் அறிகிறோம். இது பாரதியின் கவிதைகளுக்குள் இருக்கும் காந்த சக்திக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும். என பாரதி கூறியிருந்தார். அதை பிரதமர் செய்து வருகிறார். மேலும் எங்கெல்லாம் பாரதையை எடுத்துச் சொல்ல முடியுமோ அங்கெல்லாம் சொல்லி வருகிறார்." என்று பேசினார் மத்திய அமைச்சர்.
ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார்மயமாக்கும் நடவடிக்கை நடப்பு நிதியாண்டில் இல்லை
ஏர் இந்தியா விமான நிறுவனத்தைத் தனியார்மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கை நடப்பு நிதியாண்டுக்குள் முடிய வாய்ப்பில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன என்கிறது இந்து தமிழ் திசை செய்தி.
நடப்பு நிதியாண்டு முடிய இன்னும் 3 மாதங்கள் மட்டுமே இருப்பதால், அதற்குள் ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை முழுமையாக விற்பனை செய்து தனியாரிடம் வழங்குவது கடினமான செயல் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நடப்பு நிதியாண்டில் ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு தீவிரம் காட்டியது. கடந்த 2018-ம் ஆண்டில் இதேபோன்று ஏர் இந்தியா நிறுவனத்தை விற்க அரசு முனைப்பு காட்டியது. அது தோல்வியில் முடிந்தது.
ஆனால், இந்த முறை எடுத்த முயற்சியின் காரணமாக டாடா குழுமம், அமெரிக்காவைச் சேர்ந்த இன்டர் அப்ஸ் நிறுவனம் உள்ளிட்டவை விருப்பம் தெரிவித்துக் கடந்த வாரம் கடிதம் எழுதியுள்ளன. இது தவிர ஏர் இந்தியாவின் 200 ஊழியர்களும் பங்குகளை வாங்கிக்கொள்வதாக விருப்பம் தெரிவித்துள்ளனர்.
ஏர் இந்தியா நிறுவனத்தின் ஏலத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவிக்கும் தகுதியான நிறுவனங்கள் கடிதம் வழங்க 2021 ஜனவரி 6-ம் தேதி கடைசியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் தகுதியான நிறுவனங்களைத் தேர்வு செய்து, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, நிதி தொடர்பான பரிமாற்றங்கள் நடந்து முடிய அடுத்த நிதியாண்டு தேவைப்படும். ஆதலால், இந்த நிதியாண்டில் ஏர் இந்தியா நிறுவனம் தனியார்மயமாக்க சாத்தியம் குறைவு என்று அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர் என விவரிக்கிறது அச்செய்தி.
பிற செய்திகள்
- பாஜகவுக்கு தாவும் மம்தா கட்சி தலைவர்கள்: பிரசாந்த் கிஷோர் ஆலோசனையால் வந்த சிக்கலா?
- நேபாளத்தில் அரசியல் சிக்கல்: நாடாளுமன்றத்தை கலைத்தார் குடியரசுத் தலைவர்
- எச்.ராஜா நேர்காணல்: "தேர்தலுக்கு பிறகு பாஜக தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கும்"
- பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் தொடர்ந்து கோதுமை, நெல் மட்டுமே பயிரிடுவது யாருக்கு லாபம்? என்ன நஷ்டம்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












