விவசாயிகள் போராட்டம்: பஞ்சாப், ஹரியானாவில் தொடர்ந்து கோதுமை, நெல் மட்டுமே பயிரிடுவது யாருக்கு லாபம்? என்ன நஷ்டம்?

விவசாயி

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், சரோஜ் சிங்
    • பதவி, பிபிசி நிருபர்

பஞ்சாபில் பெரும்பாலான விவசாயிகள் கோதுமை, நெல் பயிரிடுகின்றார். இந்த இரண்டு பயிர்களுக்கும் குறைந்த பட்ச ஆதரவு விலை கிடைக்கிறது , மேலும் அரசாங்க கொள்முதல்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. பயிர் வருவாய் மற்றும் கொள்முதல் இரண்டும் உறுதி செய்யப்படும் போது, மூன்றாவது விளைச்சலுக்கு பின்னால் விவசாயி ஏன் ஓட வேண்டும்?

ஆனால் இந்த இரண்டு விளைசல்களின் வெற்றியினால் அவர்கள் ஒரு வட்டத்திற்குள் சிக்கியுள்ளனர், அவர்கள் விரும்பினாலும் அதை விட்டு அவர்களால் வெளியே வர முடியாது .

கடந்த மூன்று வாரங்களாக டெல்லியின் அனைத்து எல்லைகளிலும் நின்று கொண்டிருக்கும் விவசாயிகள், இது குறித்து பேசி வருகின்றனர், ஆனால் அடங்கிய குரல்களில்.

மூன்று முகங்கள், மூன்று பயிர்கள், மூன்றின் வலிகளும் வெவ்வேறு

தரந்தரன் என்ற பகுதியில் இருந்து வந்துள்ள மேஜர் சிங் கஸைல் கடந்த 20 நாட்களாக டெல்லியில் குளிரில் அமர்ந்திருக்கிறார் . சிங்கு எல்லையில் அவரை சந்தித்தோம்.

அவர் கூறினார், "நெல் மற்றும் கோதுமை தவிர, மற்ற பயிர்கள் பயிரிட நிறைய முயற்சி இருந்தது. ஒருமுறை சூரியகாந்தியை நடவு செய்தோம் . சந்தையில் ஒரு லிட்டர் எண்ணெய் விலை 100 ரூபாயாக இருந்த போது, எங்கள் விளைச்சல் ஒரு குவிண்டால் 1000 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கடுகு பயிரிடப்பட்ட போது, சந்தையில் ஒரு லிட்டர் கடுகு எண்ணெயின் விலை ரூ.150 மற்றும் ஒரு குவிண்டாலுக்கு 2000 ரூபாய் கிடைத்தது. ஒரு குவிண்டால் கடுகில் 45 கிலோ எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது. அதாவது, சந்தையில், 6,500 ரூபாய் விலையுள்ளது, எங்கள் பாக்கெட்டுகளுக்கு வந்தது பாதிக்கும் பாதி. எங்கள் கடின உழைப்பின் பலனை வேறு ஒருவர் அனுபவிக்கிறார், நாம் வேறு பயிர்களை பயிரிட்டு சிக்கிக் கொள்கிறோம்."

மேஜர் சிங் கஸைல் கோதுமை, நெல் தவிர மற்ற பயிர்களை பயிரிட இன்னும் தயாராக உள்ளார். அவர்களின் நிலங்களில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இன்று தரன்தரனில் 80 அடி தண்ணீர் உள்ளது. இதை சமாளிக்க, சூரியகாந்தி நட முடிவு செய்தார். ஆனால், பயிர் விலை சரியாக இல்லை என்று தெரிய வந்த போது, அவர்கள் தங்கள் முடிவை நினைத்து வருந்தினர். தற்போது மீண்டும் கோதுமை, நெல் பயிரிடுகின்றனர்.

மேஜர் சிங் கஸைலின் வலி, ஹரியானா மாநிலம் பிவானி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்பீர் கலீபாவுக்கும் உள்ளது .

விவசாயிகள்

பட மூலாதாரம், Getty Images

மேஜர் சிங் கஸைல் உடனான எங்கள் உரையாடலைக் கேட்டு, அவரே முன்வந்து தனது வலியைப் பகிர்ந்து கொண்டார். "இந்த முறை நான் கேரட் வளர்ந்தேன். ஆனால் மண்டியில் 5,ரூபாய் 7 ரூபாய் என விலை கிடைத்தது. அதே மண்டியில், பெரிய விவசாயிகளுக்கு, 20 ரூபாய் வரை விலை கிடைத்தது,'' என்றார்.

சுரேந்திர சிங், எங்கள் உரையாடலை மிகவும் கவனமாகக் கேட்டார். தன் வலியை வேறு விதமாக விளக்கினார். "நீங்கள் மற்றொரு பயிர் சாகுபடி செய்தால், பணம் பெற மாதங்கள் எடுக்கும். கோதுமை, கடுகு என்றால் நேரடியாக வாங்கி, உடனடியாக பணம் கிடைக்கும். நடு இரவில் வியாபாரியிடம் போனாலும், அல்லது அறுவடைக்காலத்தின் மத்தியில் போனாலும் உதவ அவர் எப்போதும் தயாராக இருக்கிறார். நானும் கேரட்டை வளர்க்க முயற்சி செய்தேன். சந்தையில் நல்ல விலை கிடைக்கவில்லை. யார் ரேட்டை முடிவு செய்கிறார்கள், எப்படி ரேட்டை நிர்ணயிக்கிறார்கள் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை" என்றார்.

மேஜர் சிங் கஸைல் அல்லது ராஜ்பீர் கலீஃபா அல்லது சுரேந்திர சிங்.... இந்த மூன்றும் வெறும் முகங்கள்தான். பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் பெரும்பாலான விவசாயிகளின் கதை இது போலத்தான். கோதுமை, நெல் சாகுபடி தவிர, மூன்றாவது வேறு ஏதாவது பயிர் செய்தால் சரியான விலை கிடைப்பதில்லை. இதை பற்றி அவர்களுக்கு அதிகம் தகவலும் இல்லை.

2015-16-ல் நடந்த வேளாண் கணக்கெடுப்புபடி, இந்தியாவின் 86 சதவீத விவசாயிகள் சிறு நிலங்களை சொந்தமாக வைத்திருக்கிறார்கள் அல்லது 2 ஹெக்டேருக்கும் குறைவான நிலம் கொண்ட விவசாயிகள்.

எனவே, பல ஆண்டுகளாக, பாரம்பரிய பயிர்களான கோதுமை, நெல், போன்றவற்றையே எல்லா பருவத்திலும் பயிரிடுகிறார்கள், ஒவ்வொரு முறையும் ரிஸ்க் எடுக்க விரும்புவதில்லை . இந்த பாரம்பரிய சாகுபடி முறை 'மோனோ கல்ச்சர்' என்று அழைக்கப்படுகிறது.

விவசாயிகள்

பட மூலாதாரம், Getty Images

பஞ்சாப்-ஹரியானாவில் கோதுமை-நெல் சாகுபடி ஏன் அதிகமாக உள்ளது?

பஞ்சாபில், 1970-71ல் 3.9 லட்சம் ஹெக்டேரில் நெல் பயிரிடப்பட்டது, இது 2018-19 ல் 31 லட்சம் ஹெக்டேர்கள் ஆனது . அதாவது, ஐந்து தசாப்தங்களில் எட்டு மடங்கு அதிகரிப்பு.

இதே போல், பஞ்சாபில், 1970-71ல், 22.99 லட்சம் ஹெக்டேரில், கோதுமை பயிரிடப்பட்டது. 2018-19-ம் ஆண்டில் இது 35.20 லட்சம் ஹெக்டேரக அதிகரித்தது . அதாவது 50 ஆண்டுகளில் 1.5 மடங்காக அதிகரிப்பு.

இந்த புள்ளிவிவரங்கள் 'எமர்ஜிங் வாட்டர் இன்செக்யூரிட்டி இன் இண்டியா: லெசன் ஃப்ரம் அக்ரிகல்சுரலி அட்வான்ஸ்ட் ஸ்டேட் ' என்ற புத்தகத்தில் உள்ளது .

பஞ்சாப் கோதுமை மற்றும் நெல் உற்பத்தியில் மிகப்பெரியது என்பதை நிரூபிக்க,

சி.ஆர்.ஆர்.ஐ.டி சண்டிகரில் பொருளாதாரப் பேராசிரியரான ஆர்.எஸ்.குமனின் இந்த புள்ளி விவரங்கள் போதுமானது:

இந்த இரண்டு பயிர்கள் விஷயத்தில் ஹரியானாவின் கதையும் பஞ்சாபிலிருந்து மிகவும் வேறுபட்டதல்ல. ஹரியானாவின் சில பகுதிகளில் தண்ணீர் பிரச்சினை உள்ளது. நெல் சாகுபடிக்கு அதிக தண்ணீர் தேவை , எனவே ஹரியானா , பஞ்சாபை விட குறைவான நெல் சாகுபடி செய்கிறது . ஹரியானாவில் கரும்பும் பெருமளவில் பயிரிடப்படுகிறது.

கோதுமை-நெல் சாகுபடியால் சேதம்?

2017-18ம் ஆண்டின் பொருளாதார ஆய்வறிக்கையின் படி, 'மோனோகல்ச்சர்' காரணமாக தற்போது பஞ்சாபில் பயிர் விளைச்சல் குறைந்து வருகிறது, உரம் போட்ட பின்னரும், விளைச்சலில் அதிக மாற்றம் இல்லை , மண்ணின் தரம் குறைந்து விட்டது. இவை அனைத்தும் சந்தை மற்றும் விலைகளில் நேரடியாக பாதிப்பை ஏற்படுத்துகிறது . இதனால் விவசாயம் ஒரு பெரிய லாபகரமான தொழிலாக இல்லை .

விவசாயிகள்

பட மூலாதாரம், Getty Images

நெல் சாகுபடி காரணமாக பஞ்சாபில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக க் குறைந்துள்ளது. 1970-71-ல் பஞ்சாபில் குழாய் கிணறுகளின் எண்ணிக்கை 2 லட்சமாக இருந்து, 2018-19-ல் இது 14 லட்சமாக உயர்ந்துள்ளது.

நெல் சாகுபடியில் முன்னணியில் உள்ள 12 மாவட்டங்களில், கடந்த மூன்று தசாப்தங்களில், நீர்மட்டம், 6.6 மீட்டரில் இருந்து 20 மீட்டர் வரை குறைந்துள்ளது.

2017-18-ம் ஆண்டில் மத்திய அரசு, பஞ்சாப் மாநிலத்திலிருந்து, 88 சதவீத நெல் கொள்முதல் செய்து வருகிறது என்று ஆர்.எஸ்.குமன் கூறுகிறார். நெல் சாகுபடி காரணமாக பஞ்சாபின் நீர்மட்டம் குறைந்து வருகிறது என்றால், மத்திய அரசு பஞ்சாபில் இருந்து நெல் அல்ல , நிலத்தடி நீரை விலைக்கு வாங்குகிறது என்று பொருள்.

மத்திய அரசு பஞ்சாப்பில் இருந்து வாங்கும் நெல் சாகுபடிக்கு 63,000 பில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது, இதில் 70 சதவிகிதம் நிலத்தடி நீர். பஞ்சாப் தனது நெல் அல்ல , அதன் நீர் மட்டத்தை மத்திய அரசுக்கு விற்று வருகிறது .

இதுதான் நெல் சாகுபடியின் மோசமான விளைவுகள் பற்றிய விஷயம் .

ஆனால் கோதுமை சாகுபடியிலும் எல்லாம் நன்றாக உள்ளது என்று சொல்ல முடியாது. பஞ்சாபின் பாரம்பரிய பயிர் கோதுமை என்று பேராசிரியர் குமான் கூறுகிறார். ஆனால் தற்போது அதன் விளைச்சலினால் மண்ணின் தரமும் பாதிக்கப்பட்டுள்ளது. மாசு அளவுகள் அதிகரித்து வருகின்றன. உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகள் கோதுமை பயிர்ல் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

யூரியா மற்றும் பிற ரசாயனங்கள் உள்ளூர் மக்களின் உணவு சங்கிலியில் நுழைந்துள்ளன. பஞ்சாபின் பட்டிண்டா, மன்சா போன்ற சில பகுதிகளில், தண்ணீர் தரம் குறைவாக இருப்பதால் பல்வேறு நோய்கள் இருப்பதாக புகார்கள் வருகின்றன.

தீர்வு என்ன?

இந்த புகார்கள் காரணமாக, நீண்ட காலமாக, பஞ்சாப் விவசாயிகளிடம் பல வகை பயிர்களை சாகுபடி செய்யும்படி அறிவுரை கூறப்படுகிறது.

பஞ்சாபில், முக்த்சாரைச் சுற்றியுள்ள 2.25 லட்சம் ஹெக்டேர் விவசாயப் பகுதியில் ஆண்டில் பெரும்பாலான நேரங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அங்கு நெற்பயிர் மட்டுமே சாகுபடி செய்ய முடியும்.

மற்ற பகுதிகளில், பருத்தி, மக்காச்சோளம், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள், காய்கறி சாகுபடி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாநில அரசும், பஞ்சாப் மாநில விவசாயிகளும் இதை புரிந்து கொள்ளவில்லை என்றால், 15 முதல் 20 ஆண்டுகளில் விவசாயத்தில் அதிக சிக்கல்கள் ஏற்படும் என்கிறார் பேராசிரியர் குமன்.

70களில் பஞ்சாபில் 66 சதவீத வயல்களில் மட்டுமே கோதுமை மற்றும் நெல் பயிரிடப்பட்டன. மீதமுள்ள 34 சதவீதத்தில் மீதமுள்ள பயிர்கள் பயிரிடப்பட்டன. ஆனால், 2020களில், 90 சதவீதம் கோதுமை, நெல் மட்டுமே சாகுபடி செய்யப்படுகிறது.

விவசாயிகள்

பட மூலாதாரம், Getty Images

இதற்கு பசுமைப் புரட்சிதான் காரணம் என்று பேராசிரியர் குமன் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், மத்திய அரசும், மாநில அரசும் வகுத்த பல்வேறு சட்டங்களினால் ,பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகளுக்கு கோதுமை மற்றும் நெல் பயிரிடுவது லாபகரமானதாக இருந்தது.

வயல்களில் நல்ல பயிர் கிடைப்பதை உறுதி செய்யும் பொருட்டு, உயர்தர விதைகள் ஆராய்ச்சி செய்யப்பட்டு, குறைந்தபட்ச ஆதரவு விலை மூலம் பயிர் விலை உறுதி செய்யப்பட்டது, இந்திய உணவுக் கழகம் மூலம் அரசு கொள்முதல் உறுதி செய்யப்பட்டது, மண்டிகள் கொள்முதல் செய்ய தனி இடங்களை தெரிவு செய்தன. மீதமுள்ள விஷயங்களை சரி செய்ய, அரசு பாசனத்திற்கான வசதி மற்றும் இலவச மின்சாரம் வழங்கியது.

இந்த வசதிகள் இல்லை என்றால், ஒவ்வொரு விவசாயியும் கோதுமை மற்றும் நெல் பயிரிடுவதில்லையா?"

இப்போது, பஞ்சாப் விவசாயிகள் இந்த வட்டத்தில் சிக்கி விட்டனர், அதிலிருந்து வெளியே வர வேண்டும் என்றால் வருவது எப்படி?

பஞ்சாப் அரசு அறிக்கை

கோதுமை மற்றும் நெல் ஆகியவற்றால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு பற்றி பஞ்சாப் அரசுக்குத் தெரியாது என்று கூறமுடியாது. 1986 மற்றும் 2002 ஆம் ஆண்டுகளில் பஞ்சாப் அரசாங்கம் பயிர்களில் பன்முகத்தனமையை கொண்டு வர, இரண்டு தனித்தனி குழுக்களை அமைத்தது. ஆனால், பேராசிரியர் எஸ்.எஸ்.ஜோஹல் தலைமையிலான இந்தக் குழுக்களின் அறிக்கை இன்றுவரை செயல்படுத்தப்படவில்லை.

இந்த குழுக்கள் விவசாயத்தில் 20 சதவீத பன்முகத்தனமையை பரிந்துரைசெய்து, விவசாயிகளுக்கு இழப்பீடாக 1,600 கோடி ரூபாயை அரசு வழங்கும் யோசனையை முன் வைத்தது .

பஞ்சாப் அரசு ஏன் ஜோஹல் கமிட்டி அறிக்கையை அமல்படுத்தவில்லை? இது பற்றி அறிய எஸ்.எஸ். ஜோஹலை தொடர்பு கொண்டோம்.

"2002ஆம் ஆண்டில், இந்தியா ரூ.1,500 கோடிக்கு பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களை உலகின் பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து வருகிறது. இந்தப் பணத்தை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்றும், பயறு வகை மற்றும் எண்ணெய் வித்துக்களை சாகுபடி செய்ய ஊக்குவிக்க வேண்டும் என்றும் நான் ஆலோசனை கூறினேன். இதனால், இந்தியா வெளியில் இருந்து பருப்பு வாங்க வேண்டியிருக்காது . வெறும் 1,600 கோடி ரூபாய் மட்டுமே செலவிட்டு , அந்த நேரத்தில் ஒரு மில்லியன் ஹெக்டேர் நெல் சாகுபடியை அரசு குறைத்திருக்க முடியும். மாநில அரசும் , என் யோசனையை ஒப்புக் கொண்டது . ஆனால், பின்னர், மாநில அரசு இந்த விவகாரத்தை மத்திய அரசிடம் முன்னெடுத்து செல்லவில்லை , இன்று வரை அந்த அறிக்கையை அமல்படுத்தவில்லை" என்று கூறினார்.

விவசாயி

பட மூலாதாரம், Getty Images

பேராசிரியர் ஜோஹல் , பயிர் விலை நிர்ணய கமிட்டியின் தலைவராகவும் இருந்திருக்கிறார்.

பஞ்சாப் விவசாயிகள் ஏன் இந்த கோதுமை-நெல் சுழற்சியில் சிக்கி உள்ளனர் என்றால் , அரசாங்கங்கள் வாக்கு வங்கி அரசியலை செய்து வருகின்றன என்று அவர் கூறுகிறார். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுத்து, அவர்களுக்கு தண்ணீர் இலவசமாக கொடுத்து, ஓட்டுகளை பெற்று, அரசுகள், பொருளாதாரத்தை அழித்து வருகின்றன.

பேராசிரியர் ஜோஹலின் கருத்துப்படி, பஞ்சாப் அரசு இலவச மின்சாரத்தால் ஆண்டுக்கு ரூ.5,000 கோடி இழப்பை ச் சந்திக்கிறது. இலவச மின்சாரம் காரணமாக நீர் இறைப்பதற்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது, மீண்டும் நீர் ஊற அரசு எந்த ஓர் ஏற்பாடும் செய்வதில்லை.

இலவச நீர் , மின்சாரத்திற்கு இடையே, பயிரில் எப்படி பன்முகத்தன்மையை கொண்டு வருவது

எனவே, கோதுமை மற்றும் நெல் சுழற்சியிலிருந்து பஞ்சாபை விடுவிக்கும் நடவடிக்கைகள் என்ன? இதற்கு பதிலளித்த பேராசிரியர் ஜோஹல், "இலவச மின் திட்டத்தை கைவிட வேண்டும். விவசாயிகளுக்கு அரசு செலவிடும் 'இலவச மின்சாரத்துக்கான' செலவை விவசாயிகளுக்கு , மானியமாக வழங்க வேண்டும். இதனால் விவசாயி தண்ணீர் மற்றும் மின்சாரத்தை செலவு செய்யும்போது கொஞ்சம் யோசிப்பார், கையில் வரும் பணத்தை சேமிக்க முயற்சி செய்வார். பயிர்களை மாற்றுவதன் மூலம், எந்த பயிரை குறைந்த செலவில் பயிரிடலாம் மற்றும் எது அதிக வருமானம் உள்ளது என்பதை அவரே செய்து பார்ப்பார் " என்கிறார் அவர்.

60களிலும் 70களிலும் இந்திய அரசு பிற நாடுகளிலிருந்து உணவு தானியங்களை இறக்குமதி செய்ய வேண்டியிருந்தது. பஞ்சாப்-ஹரியானாவில் உள்ள விவசாயிகள் தானியத் துறையில் இந்தியாவை த் தன்னிறைவு அடைய கோதுமை மற்றும் நெல் பயிரிட ஊக்குவிக்கப்பட்டனர். இன்று பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகள் காரணமாக இந்தியா தானியங்களில் தன்னிறைவு அடைந்து விட்ட நிலையில், அவர்கள் இப்போது அந்த பயிரை பல்வகையாக்க வேண்டும் என்று கூறப்படுகிறது .

இது பஞ்சாப் விவசாயிகளுக்கு அநீதி இல்லையா?

பேராசிரியர் குமன் , இந்தக் கேள்விக்கு பதிலளிக்கையில், பஞ்சாப் விவசாயிகள் கோதுமை மற்றும் நெல் பயிரிட முடிவு செய்யவில்லை என்று கூறுகிறார். இவற்றை மத்திய, மாநில அரசுகள் தான் முடிவு செய்தன. மற்ற மாநிலங்களைப் போல இந்த விவசாயிகள் மற்ற பயிர்களையும் பயிரிட வேண்டும் என்று அரசு இன்று விரும்பினால், பசுமைப் புரட்சியின்போது கொண்டுவந்ததைப் போல ஒரு கொள்கையை அரசாங்கம் கொண்டு வரவேண்டும். இல்லாமல், அது சாத்தியமில்லை. அப்போதுதான் விவசாயிகள் இந்த பயிர்களின் சுழற்சியிலிருந்து விடுபட முடியும்.

பசுமைப் புரட்சியின் போது புதிய நெல் வகைக்கான ஆராய்ச்சியை ஊக்குவித்தததை போல , தற்போது மற்ற பயிர்களுக்கும் செய்யப்பட வேண்டும் என்று பேராசிரியர் குமன் கூறுகிறார். பஞ்சாப் வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 30க்கும் மேற்பட்டவர்கள் , கோதுமை மற்றும் நெல்லின் புதிய ரகத்தை ஆராய்ச்சி செய்து வருகின்றனர். ஆனால், பயறு வகை, எண்ணெய் வித்துக்கள் பற்றி ஆராய்ச்சி செய்ய ஒரு பேராசிரியர் மட்டுமே உள்ளார்.

மற்றொரு வழி, மற்றும் பிற பயிர் விளைச்சலையும் குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்வது விவசாயிகளுக்கு சாதகமாக இருக்குமாறு அரசு உறுதி செய்ய வேண்டும். அரசாங்கம்தான் இதை வாங்க வேண்டும் என்று அர்த்தம் இல்லை, அரசாங்கம் அதை செய்ய இன்னும் பல வழிகள் உள்ளன.

புதிய பயிர்களுக்கு சந்தை இல்லை என்றால், அதிக அளவில் விளைச்சல் இருக்கும்போது , அதன் விலை குறையும், அடுத்த முறை விவசாயிகள் அதை பயிரிட மாட்டார்கள் .

பயிர் பல்வகைப் பெருக்கம்: முன்னணியில் கர்நாடகம்

மத்திய அரசு 2014-ல் மாநிலங்களின் பயிர் பன்முகத்தன்மை அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கையின்படி, கர்நாடக மாநிலம் இந்தியாவில் பயிர் பன்முகத்தன்மையில் முன்னணியில் உள்ளது. மகாராஷ்டிரா மற்றும் குஜராத் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன.

அதாவது விவசாயிகள் மற்றும் பஞ்சாப் மாநில அரசு ஆகியவை கர்நாடகாவிலிருந்து நிறைய கற்றுக் கொண்டு, பலவித பயிர் சாகுபடி செய்ய முடியும். எனவே பிபிசி கர்நாடக வேளாண் நிபுணர் டி என் பிரகாஷ் கம்மராடியிடம் பேசியது. மாநில அரசு மற்றும் கர்நாடக விவசாயிகளின் முயற்சிகளின் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக இது சாத்தியமாகியுள்ளது என்று அவர் கூறுகிறார் . அவர் இதற்கு பின்னால் மூன்று முக்கிய காரணிகள் இருந்ததாக கூறுகிறார்:

முதலாவதாக - கர்நாடகா 10 விவசாய-சூழலியல் மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது எந்த பகுதியில் எந்த பயிர் சாகுபடி செய்ய ஏற்றது? எந்த வானிலைக்கு எந்தப் பயிர் ஏற்றது? என்பது 'விவசாய-சூழலியல்' மண்டலத்திற்கு ஏற்ப தீர்மானிக்கப்படுகிறது.

இரண்டாவதாக, கர்நாடகாவில் வேளாண் ஆராய்ச்சிக்காக 4 பல்கலைக்கழகங்கள் உள்ளன. தோட்டக்கலைக்காக ஒரு தனி பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டுள்ளது. நெல் சாகுபடி எங்கு நல்ல நிலையில் இருக்கும், எங்கு கம்பு பயிரிடப்படும், எந்த பகுதி காப்பிக்கு நல்லது என்பவை குறித்தும், அதோடு விதைகள் பற்றியும் ஆராய்ச்சிகள் நடத்தப்படுகிறது .

மூன்றாவதாக, தோட்டக்கலையில் கர்நாடகா இந்தியாவில் மிகவும் முன்னணியில் உள்ளது. இங்கு விவசாயிகள் காபி மற்றும் மசாலாக்களை நிறைய பயிரிடுகின்றனர்.

நான்காவதாக கர்நாடகாவில் மேற்குத் தொடர்ச்சி மலைகளால் இரு பயிர் சாகுபடி செய்ய முடியாது. பல்வேறு வகையான பயிர்களை பயிரிடவேண்டியுள்ளது

இதனால், கர்நாடகா, பல்வேறு பயிர்களை சாகுபடி செய்து வருகிறது.

ஆனால், பல்வேறு பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகளின் வருமானம் அதிகரிப்பதில்லையா ?' என்ற கேள்வி எழுகிறது. பஞ்சாப் விவசாயிகள் இரண்டு பயிர்களை எப்படி பயிரிட்டு, கர்நாடக விவசாயிகளை விட செழிப்போடு உள்ளனர்?

இது குறித்து டி என் பிரகாஷ் கூறுகையில், நில மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி மற்றும் இதர துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால், இன்றும் கூட கர்நாடக விவசாயிகளுக்கு பாசனத்துக்கான தண்ணீர் ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது. பல்வேறு வகையான பயிர்கள் இருந்தாலும், கர்நாடக விவசாயியின் பொருளாதார நிலை பஞ்சாப் விவசாயிகளை விட சிறப்பாக இல்லை.

பஞ்சாப்-ஹரியானா விவசாயிகள் கர்நாடகாவில் இருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?

இந்த கேள்விக்கு பதிலளித்த கர்நாடக முன்னாள் விவசாய அமைச்சர் கிருஷ்ண பைரே கோடா, "பஞ்சாப் அரசாங்கம் சிறு நிலங்கள் உள்ள விவசாயிகளை படிப்படியாக சிறுதானியங்கள் மற்றும் இதர எண்ணெய் வித்துக்களை சாகுபடி செய்ய ஊக்குவிக்க முடியும். இதற்காக, விவசாயிகளுக்கு சந்தை உறுதி செய்யப்பட வேண்டும், அத்தகைய விவசாயிகளை அடையாளம் காண வேண்டும், அவர்களுக்கான விழிப்புணர்வு பிரசாரங்களை உருவாக்க வேண்டும். புதிய பயிர்களின் நன்மைகளை கணக்கிட்டு, ஐந்து முதல் பத்து ஆண்டு திட்டம் தயாரிக்க வேண்டும். இதை இரவோடு இரவாக செய்ய முடியாது. ஆனால், நீண்ட காலகட்டத்தில், அது நன்மை பயக்கும்."

மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரப் பிரதேசத்திலிருந்து கற்க வேண்டும்

வேளாண் தேசிய அறிவியல் அகாடமியின் செயலாளர் பிரமோத் குமார் ஜோஷி, பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகள் மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரப் பிரதேச விவசாயிகளிடமிருந்தும் கற்றுக் கொள்ளலாம், கோதுமை-நெல் சுழற்சியிலிருந்து வெளியேறலாம் என்று கூறுகிறார். ஆனால் அதற்கு அவர்கள் குறைந்தபட்ச ஆதரவு விலை மோகத்தை விட்டு வெளியேற வேண்டும்.

மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரப் பிரதேச உதாரணங்களை மேற்கோள் காட்டி, இந்த மாநிலங்கள் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளன, அதனால்தான் இன்று விவசாயிகள் தங்கள் பயிர்களை வெளியே ஏற்றுமதி செய்து வருகின்றனர் என்று அவர் கூறுகிறார்.

முதலாவதாக, ஆந்திரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா விவசாயிகள் தங்கள் சொந்த விவசாயி உற்பத்தி அமைப்பை உருவாக்கியுள்ளனர். இதன் பொருள், இந்த மாநிலங்களில் உள்ள விவசாயிகள் ஒரு தனி நிறுவனத்தை உருவாக்கியுள்ளனர். இதில் விவசாயி ஒரே பயிரை பயிரிடுகிறார். தானியங்களை வாங்குபவர்களுடன் நேரடியாக தங்கள் பயிரை விற்க பேச்சு நடத்துகிறார் .

இரண்டாவதாக, இந்த மாநிலங்கள் காண்டிராக்ட் அதாவது, ஒப்பந்த வேளாண்மையை ஏற்றுக் கொண்டுள்ளன. இது பயிர்களின் தரத்தையும், மகசூலையும் உறுதி செய்கிறது. ஒப்பந்தப் பண்ணைய முறையில் வணிகர் தானே விதைகளைக் கொடுக்கிறார். அதே போல விளைசல் இருக்கிறது . இதனால் விளைச்சல் நன்றாக இருக்கிறது. புதிய முறைகளையும், தொழில் நுட்பங்களையும் தெரிந்து கொள்ள முடிகிறது .

மூன்றாவதாக, இந்த மாநிலங்கள் ,'ஒரே மாவட்டம் ஒரே பயிர்' என்ற மத்திய அரசின் திட்டத்தை பின்பற்றுகின்றன. தனியார் துறையில், வாங்குபவர்களுக்கு அதிக அளவில் தானியங்கள் தேவைப்படுகின்றன. பல நேரங்களில், இந்த மாநிலங்கள், புதிய பயிர்களை, மாவட்டம் முழுவதும் பயிரிட ஊக்குவின்றன. இதனால், மகசூலும் அதிகரித்து , ஒன்றாக விற்பனையும் ஆகிறது.

எனவே, பஞ்சாப் விவசாயிகள் கோதுமை மற்றும் நெல் சுழற்சியிலிருந்து விடுபட வேண்டுமானால், தீர்வு குறைந்தபட்ச ஆதரவு விலையில் அல்ல, பயிர் பல்வகைப்படுத்தலில்தான் உள்ளது. இது விவசாய நிபுணர்களின் கருத்து.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :