கொரோனா பெருந்தொற்று காலத்தில் பணி மீதான நமது பார்வை எவ்வாறு மாறியுள்ளது?

பட மூலாதாரம், Getty Images
பெருந்தொற்று காலத்தில் நம் வேலைகளை செய்ய உட்காரும் இடம் மாறிவிட்டது, வேலைகளை முடிப்பதற்கான நடைமுறைகள் மாறிவிட்டன. ஆனால் பொதுவாக நமது வேலைகள் நிலைமாற்றம் அடைந்துள்ளது பற்றி நமது சிந்தனையும் மாறியுள்ளது.
சமையலறை மேசைகளில் அமர்வது, வாழ்க்கைத் துணைவர் மற்றும் குழந்தைகளுடன் சேர்ந்து இடத்தைப் பகிர்ந்து கொள்வது, புதிய சூழலில் வேலை பார்க்கும் கட்டாயம் ஏற்பட்டிருப்பது ஆகியவை நமது வேலைபார்க்கும் முறையில் புதுமையான வழிமுறைகளை உருவாக்கியுள்ளது. எதிர்பாராத இடங்களில் வேலை பார்ப்பதில் புதிய வெற்றிகள் கிடைத்திருப்பதாக பலர் உணர்கிறார்கள். தங்கள் திறன்களை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள் அல்லது உற்பத்தித் திறன் மற்றும் ஆரோக்கியம் மேம்பட்டிருக்கிறது. இருந்தும், பெரிய மாற்றங்கள் சவால் நிறைந்தவையாகவும் இருக்கலாம்.
பழக்கம் இல்லாத தொழில்நுட்பங்களைக் கையாள்வதற்குக் கற்றுக் கொள்வது, அல்லது தொழில்முறை விஷயங்கள், மாண்புகள் மற்றும் வாழ்க்கைமுறை பாதைகள் குறித்து கேள்வி எழுப்புதல் ஆகியவை சவால்களாக உள்ளன.

பட மூலாதாரம், Getty Images
தொலைதூரத்தில் இருந்து வேலை பார்ப்பதே புதிய நடைமுறையாக மாறிவிடக் கூடிய வாய்ப்புகள் உள்ளதாக, புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. உலக அளவில் வேலை பார்ப்போரில் 20 சதவீதம் பேர் வீட்டில் இருந்தே வேலை பார்ப்பவர்களாக, வாரத்தில் 3 முதல் 5 நாட்கள் இப்படி செய்பவர்களாக இருப்பார்கள் என்று மெக்கின்சே நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பழைய வேலை நடைமுறைகளுக்கு நாம் சீக்கிரத்தில் திரும்புவதற்கான வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ் : இதுவே கடைசி கொள்ளை நோய் அல்ல
- கொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன?

இந்தப் பெருந்தொற்று காலத்தில் நமது வேலை நடைமுறையுடன் உள்ள தொடர்பில் ஏற்பட்டுள்ள மாற்றம் நிரந்தரமானதாக இருக்கும். தங்கள் வேலை நடைமுறை குறித்து, கடந்த சில மாதங்களில், மனநிலையில் என்ன மாற்றம் நிகழ்ந்துள்ளது என்று தன் வாசகர்களிடம் பிபிசி வொர்க்லைஃப் கேட்டது. ``வாழ்க்கையின் முழு அர்த்தமும் மாறிவிட்டது. எனவே வேலைக்கான முறையும் மாறிவிட்டது'' என்று இந்தியாவின், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பாக்யேஷ் ஷா தெரிவித்தார்.
இந்தப் புதிய சூழ்நிலையில் வாழ்வதில் சிலர் திரில்லாக உணர்கின்றனர். ``என் வாழ்க்கையில் அதிக மகிழ்ச்சியாக, மன அழுத்தம் இல்லாமல் இருக்கிறேன்'' என்று டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டனைச் சேர்ந்த ட்ரேக் பெட்டிஸ் தெரிவித்தார். ``நான் எப்போதும் `வேலை பார்ப்பதற்காக கம்ப்யூட்டருடன் ஓர் இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்குச் செல்வது போரடிக்கிறது' என்று கூறி வந்தேன்'' என்று அவர் தெரிவித்தார்.
தொலைதூரத்தில் இருந்து வேலை பார்ப்பது, அலுலகத்தில் இருந்து வேலை பார்ப்பதைக் காட்டிலும் சுதந்திரமானதாக உள்ளதாக பலர் ஒப்புக்கொள்கின்றனர். ``என்னைப் பொருத்த வரையில், நாம் பார்க்கும் பல வேலைகளை எங்கிருந்தும் செய்யலாம் என்பதை இது உறுதி செய்திருக்கிறது'' என்று டென்னிஸ்ஸி மாகாணம் மெம்பிஸ் நகரைச் சேர்ந்த ஏஞ்செலா லோவே தெரிவித்தார். சில நிறுவனங்கள் இதை ஒப்புக்கொள்ளத் தொடங்கியுள்ளன. ட்விட்டர் மற்றும் முகநூல் போன்ற பெரிய நிறுவனங்கள் `எப்போதும்' தொலைதூரத்தில் இருந்தே பணியாற்றும் திட்டங்களை அறிவித்துள்ளன.

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்காவில் மின்னெசோட்டாவைச் சேர்ந்த மரியா எல். ஸ்லெட்டெனுக்கு, அலுவலக முறையில் இருந்து வீட்டில் இருந்தே பணியாற்றும் முறை மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. தன்னுடைய வேலை எந்த அளவுக்கு நிறைவாக இருக்கிறது என்பதை உணரும் வாய்ப்பை இது ஏற்படுத்திக் கொடுத்துள்ளது என்கிறார்.
``வீட்டில், சிந்தனைத் திறன் அதிகரிப்பதாக உணர்கிறேன். மகிழ்ச்சியாக இருக்கிறேன். பெரிய விஷயங்களைச் செய்ய விரும்புகிறேன். புதிய ஐடியாக்களை முயற்சிக்கிறேன். தகவல் பதிவு கடன் வசூல் செய்யும் எனது வேலை எந்த அளவுக்கு மோசமானது, சகிப்புத்தன்மை அற்றது என்று உணர்கிறேன். எனக்குப் பிடித்த விஷயத்துக்கு எனக்கு சம்பளம் கிடைப்பதில்லை. அது உண்மையில் பயங்கரமானது,'' என்று அவர் கூறினார்.
அதனால் தான் புதிய திறன்களைக் கற்றுக் கொண்டு, தங்கள் வேலையில் பிடித்தமான அம்சங்களைப் புகுத்திக் கொள்ள பலரும் முயற்சிக்கிறார்கள் என்பது தெரிகிறது. ``தொழில் முயற்சியில் ஈடுபட அல்லது டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் புதிய திறன்களை, கிராபிக் டிசைன் போன்றவற்றைக் கற்க இந்தப் பெருந்தொற்று காலம் வாய்ப்பு அளித்துள்ளது,'' என்று கென்யாவில் கேமரா ஆபரேட்டர் மற்றும் வீடியோ எடிட்டராக இருக்கும் ரிச்சர்ட் ஓமோன்டி தெரிவித்தார்.
``இந்தப் புதிய பணிச் சூழலில் கிடைக்கும் கற்றல் அனுபவம் உண்மையில் பிடித்திருக்கிறது'' என்று அமெரிக்காவில் நியூஜெர்சியைச் சேர்ந்த அம்துல் சையத் கூறினார். மதம் சார்ந்த கல்வி கற்பிக்கும் ஆசிரியராக இருக்கும் சையத், இந்த முறை கேளிக்கை மற்றும் கலந்தாடல் முறையில் பாடங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ``ஆப்கள், ஆன்லைன் கட்டுரைகள் மற்றும் யூடியூப் மூலம் புதிய உத்திகளை நான் கற்றுக் கொண்டேன்,'' என்று சையத் கூறுகிறார்.
அதனால் தான் சிலர் முற்றிலும் புதிய வேலையைத் தேட முற்படுகிறார்கள். தங்களுடைய வேலைகள் மற்றும் மதிப்புகளை மறுமதிப்பீடு செய்வதற்கு தங்களின் வாடிக்கையாளர்கள் இந்தக் காலத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று, சுயவிவரக் குறிப்பு தயாரிப்பை ஆய்வு செய்யும் மான்செஸ்டரைச் சேர்ந்த ஜோஷப் ராபர்ட்ஸ் கூறினார். ``வழக்கமான பயண முறைக்குத் திரும்புதல், பழையபடி ஒரே மாதிரியான வேலைகளைச் செய்தல் அல்லது பணத்துக்காக ஒருவருடைய மதிப்புகள் மற்றும் நம்பிக்கைகளை விட்டுக்கொடுத்தல் ஆகியவை குறித்த சிந்தனைகளால் புதிய வேலைவாய்ப்புகளை அவர்கள் நாடுகிறார்கள், வேலை பார்க்கும் துறையையே மாற்றிக் கொள்ளவும் விரும்புகிறார்கள்,'' என்று அவர் தெரிவித்தார்.
புதிய வேலை தேடுவதற்கு இது சரியான காலம் அல்ல என்றாலும், சில நிறுவனங்கள் இப்போதும் பணி நியமனங்கள் செய்கின்றன. பிரிட்டனில் கடந்த ஆண்டு சராசரியைவிட இப்போது வேலை பதிவுகள் 70% அதிகரித்துள்ளது என்று தேசிய புள்ளிவிவர அலுவலகத்தின் நவம்பர் மாத அறிக்கையின் மூலம் தெரிய வருகிறது.
இங்கிலாந்தில் விற்பனைப் பிரிவு இயக்குநராக இருந்த பௌலா கிரேடி என்பவர் இதை உணர்ந்து, வேறு தொழில் திறன் பயிற்சி பெற்று, புதிய தொழிலைத் தொடங்கியுள்ளார். மான்செஸ்டரில் கோனோர் சீகெர் என்பவரும் வீட்டில் இருந்து பணியாற்றும்போது, புதிய நிறுவனம் தொடங்கி வேறு பாதையில் பயணத்தைத் தொடங்கியுள்ளார். ``அது வழக்கத்திற்கு மாறான தொடக்கம். ஆனால் என் மீது நிறுவனம் நம்பிக்கை வைத்தது. வேலைக்கான ஒப்பந்தத்தின்படி நடந்து கொண்டது. ஸ்கைப், தொலைபேசி அழைப்புகள், இமெயில்கள் மூலம் உண்மையில் உதவியாக இருந்தனர்'' என்று அவர் கூறினார்.
இருந்தாலும், புதிய வேலையின் சூழல் சிரமங்கள் இல்லாமல் அமைந்துவிடவில்லை. ``கடந்த ஒன்பது மாதங்களாக பெருந்தொற்று காலத்தில் குழுக்களாக வேலை பார்க்க வேண்டியிருந்தது'' என்று கனடாவில் அல்பெர்ட்டாவை சேர்ந்த லியானா டீன்-ரைட் தெரிவித்தார். ``பெருந்தொற்றின் பாதிப்பு வந்துவிட்டது. அர்த்தமுள்ள வேலை மற்றும் கலந்துரையாடல்களில் பங்கேற்க அலுவலர்கள் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. சில நேரங்களில் நம்பிக்கையற்ற நிலை போல தோன்றுகிறது,'' என்கிறார் அவர்.

பட மூலாதாரம், Getty Images
எங்கே கேட்பது என்று தெரியாத கேள்விகளை பலர் சந்தித்துள்ளனர். சக அலுவலர்களுடன் எப்படி பிணைப்பு ஏற்படும்? சேர்ந்து பழக விரும்பும் இளவயது அலுவலர்கள் எப்படி அந்த வாய்ப்பைப் பெறுவார்கள்? தொழிலில் உறுதியான அடித்தளத்தை எப்படி அமைத்துக் கொள்வார்கள்? தொலைதூரத்தில் இருந்து பணியாற்றுவது இப்போதுள்ள சமத்துவமற்ற நிலையை எப்படி தீவிரமாக்கும், குறிப்பாக வீட்டில் இருந்து வேலை பார்க்கும் வாய்ப்பு இல்லாதவர்களுக்கு என்ன நடக்கும்? நமது மன ஆரோக்கியத்தில் என்ன தாக்கத்தை அது ஏற்படுத்தும்? பிறரைப் போல தொலைதூர செயல்பாட்டு வசதியை உருவாக்க முடியாதவர்களுக்கு என்ன நடக்கும்?
புதிய வேலை சூழலில் சமன்பாட்டை உருவாக்குவது என்ற கேள்வியும் இடம் பெறும். அதை நம்மால் அளிக்க முடியுமா? சிறுவயதுக் குழந்தைகளின், வேலைக்குப் போகும் பெற்றோர்களுக்கு முக்கியமானதாக இருக்கும் கேள்விகளில் ஒன்றாக இது இருக்கிறது. தங்கள் பிள்ளைகளால் ஒரு மணி நேரத்துக்கு 15 முறைகள் வரை பெற்றோர்களுக்கு இடையூறு ஏற்படும். இது உற்பத்தித் திறனை பாதிப்பது மட்டுமின்றி - மன ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியையும் பாதிக்கும்.
``இரண்டு சிறுவயதுக் குழந்தைகளுடன், வீட்டில் இருந்து வேலை பார்ப்பதற்கு, எல்லைகள் வகுத்துக் கொள்வது முக்கியமான சவாலாக உள்ளது'' என்று டிரினிடாட் மற்றும் டொபாகோவைச் சேர்ந்த அஞ்செலி நரீன் தெரிவித்தார். ``நான்கு வயதுக் குழந்தையை அல்லது வாடிக்கையாளரை கவனிக்காமல் விடுவது எல்லைகளை கடைபிடிப்பதாக இருக்கும்.” என்கிறார் அவர்.
``வீட்டில் இருந்து வேலை பார்க்கும் போது உண்மையில் நான் ஒருபோதும் `லாக் ஆஃப்' செய்வதில்லை என்பது போல தோன்றுகிறது. அதனால் வேலையில் இருந்து `விலகி இருக்கும்' நேரத்தை உருவாக்குவதற்கு மிகவும் சிரமப்படுகிறேன். என் குழந்தையைப் பொருத்த வரையில், பள்ளிக்கூடத்தில் இருந்து அவன் வீட்டுக்குத் திரும்பியதும் அம்மாவின் வேலை நேரம் முடிந்துவிட்டது என்று நினைக்கிறான். வேலை நேரத்தைக் கடந்துவிட்டதால் அது சரியானது தான். ஆனால் அம்மாவுக்கான நேரம் மற்றும் வேலைக்கான நேரம் ஆகியவற்றுக்கு இடையில் ஒரு சமன்பாட்டை உருவாக்க இன்னும் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்'' என்று அவர் கூறினார்.
சவால்கள் பெரியவையாக இருக்கின்றன. ஆனால் அதே சமயத்தில், ஆதாயங்களும் இருக்கின்றன. தகவமைப்பு செய்து கொள்ள கற்றுக் கொள்தல், மதிப்புகள் மற்றும் இலக்குகளை மறு ஆய்வு செய்ய கற்றுக் கொள்வதால், அதிக நிறைவான வாய்ப்பை பெற முடிகிறது. அதிக சமன்பாட்டையும் எட்ட முடிகிறது.
``பெருந்தொற்று காலத்தில் வேலை குறித்த என் பார்வை பெருமளவு மாறிவிட்டது. முன்பு அறிந்திராத திறன்களைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்து'' என்று பார்படோசை சேர்ந்த மாயா எல். கெல்மன் தெரிவித்தார். ``எல்லைகளை வகுத்துக் கொண்டு, அதைப் பின்பற்றுவதன் மூலம் வேலை மற்றும் வாழ்க்கைக்கு இடையில் சமன்பாட்டை உறுதி செய்வது அதிக சவால் நிறைந்ததாக இருக்கிறது. மிக முக்கியமாக, என்னுடைய புதிய சிந்தனைகளை உருவாக்க, தொழில்முனைவு முயற்சிகளை மேற்கொள்ள, என் தனிப்பட்ட பிராண்ட்டை பிரபலப்படுத்த கூடுதலாக கற்பது ஆகியவை தேவைப்படுகின்றன,'' என்று அவர் கூறினார்.
வேகமாக மாறிவரும் நிகழ்கால மற்றும் நிச்சயமற்ற எதிர்காலத்துக்கு ஏற்ப தகவலமைப்பு செய்து கொள்ள நாம் முயற்சிக்கும் நிலையில், ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது: பல விஷயங்கள் இன்னும் அறியப்படாதவையாகவே உள்ளன என்பதே அந்த விஷயமாக இருக்கிறது. ஆனால் எல்லா மாற்றங்கள் குறித்தும் நாம் கலந்து உரையாடல்கள் செய்து கொண்டிருந்தால், புதிய உலகின் வேலைச் சூழல் நாம் நினைத்திருப்பதைவிட எளியதாக இருக்கும்.
``நம் வாழ்க்கையை நம்மால் கட்டுப்படுத்த முடியாது என்பதை பெருந்தொற்று தெளிவாகக் காட்டிவிட்டது. இருந்தாலும் அதில் இருந்து நாம் கற்றுக் கொள்வதற்குப் பல விஷயங்கள் இருக்கின்றன'' என்று இத்தாலியில் லம்பார்டியைச் சேர்ந்த ஆசிரியர் லோரியா டி லாண்ட்ரி தெரிவித்தார். ``மாற்றத்தை திறந்த மனதுடன் ஏற்று கொள்ளுங்கள். உங்களுக்குப் பழகிவிட்ட எல்லையில் இருந்து வெளியே காலடி எடுத்து வைக்க பயப்பட வேண்டாம். புதிய சவால்களை ஏற்றிடுங்கள். உங்களுக்கு நீங்களே உற்சாகமாகப் பேசிக் கொள்ளுங்கள். என்னைப் பொருத்த வரை சக ஆசிரியர்களுடன் சேர்ந்து அறிவைப் பகிர்ந்து கொள்வது, சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்வது, பழகுவது போன்றவை வளர்ச்சிக்கு உதவியாக உள்ளன. மாற்றத்துக்கு உத்வேகம் கொடுக்க, முன்னேறிச் செல்ல உதவியாக இருக்கின்றன'' என்று அவர் கூறுகிறார்.
பிற செய்திகள்
- சனி - வியாழன் நேர்க்கோட்டில் வரும் அதிசயம்: இன்று எப்போது தெரியும்? வெறும் கண்களால் காண இயலுமா?
- பாஜகவுக்கு தாவும் மம்தா கட்சி தலைவர்கள்: பிரசாந்த் கிஷோர் ஆலோசனையால் வந்த சிக்கலா?
- நேபாளத்தில் அரசியல் சிக்கல்: நாடாளுமன்றத்தை கலைத்தார் குடியரசுத் தலைவர்
- எச்.ராஜா நேர்காணல்: "தேர்தலுக்கு பிறகு பாஜக தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கும்"
- பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் தொடர்ந்து கோதுமை, நெல் மட்டுமே பயிரிடுவது யாருக்கு லாபம்? என்ன நஷ்டம்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












