"நான் தமிழன் இல்லை; ஆனால் தமிழை மதிக்கிறேன்" - ராகுல் காந்தி பேச்சு

ராகுல் காந்தி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ராகுல் காந்தி

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், 'தமிழ் வணக்கம்' என்ற பெயரில் நேரடிப் பிரசாரத்தை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடங்கியிருக்கிறார்.

இந்த நிலையில், தேர்தல் பிரசாரத்திற்காக இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஈரோடு மாவட்டம் ஊத்துக்குளி வந்தடைந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி, தமிழ் உணர்வையும் தமிழர் கலாசாரத்தையும் தான் மதிப்பதாக கூறினார்.

"டெல்லியில் ஆட்சி நடத்துபவர்கள் தமிழ் கலாசாரத்திற்கும், தமிழ் பண்பாட்டிற்கும் மரியாதை செலுத்துவதில்லை. தமிழில் பேசுவதால், தமிழ் மக்களை ஏமாற்றிவிடலாம் என நினைக்கிறார்கள். ஆனால், தமிழ் மக்கள் ஏமாற மாட்டார்கள்" என்று கூறினார்.

"தமிழ் மக்களுடனான என்னுடைய பிணைப்பு பற்றி உங்களுக்கு தெரியும். எனது குடும்பத்தினருக்கு நீங்கள் காட்டிய அன்பும் மரியாதையும் பற்றி எனக்கு நன்றாக தெரியும். நான் உங்களில் ஒருவன். உங்களுக்கு எதையும் சொல்ல நான் இங்கு வரவில்லை, உங்களை சந்தித்து பிரச்சனைகளை தெரிந்துகொள்ளவே வந்துள்ளேன்."

தமிழக வரலாற்றிலிருந்தும், தமிழ் மொழியில் இருந்தும் இந்தியாவின் மற்ற மாநிலங்கள் கற்றுக்கொள்ள ஏராளமான விடயங்கள் இருப்பதாக ராகுல் காந்தி மேலும் கூறினார்.

"நான் தமிழன் இல்லை. ஆனால், தமிழர் உணர்வையும், தமிழர் கலாசாரத்தையும் நான் மதிக்கிறேன். பாஜகவும், பிரதமரும் தமிழர் உணர்வுகளை மதிக்காமல் இருப்பதை எந்த வகையிலும் நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன்."

வளங்கள் பல இருந்தபோதும், பெட்ரோல் விலை, பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி வரி விதிப்பு ஆகியவை தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுத்து வருவதாக கூறிய ராகுல் காந்தி, "புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால், ஐந்து பெரும் பணக்காரர்களாக செயல்பட்டு விவசாயிகளை வஞ்சித்து வருகிறது."

மேலும், தமிழ்நாட்டின் இளைய தலைமுறையினரை முன்னேற்ற காங்கிரஸ் கட்சி பாடுபடும் என்று ராகுல் காந்தி மக்களிடையே உறுதியளித்தார்.

ராகுல் காந்தி

இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் இரண்டாம் நாளாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வரும் தமிழக முதல்வர் இன்று சிங்காநல்லூர், கோவை வடக்கு மற்றும் தொண்டாமுத்தூர் ஆகிய தொகுதிகளில் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

இன்றைய பிரசார உரையில், திமுக தலைவர் ஸ்டாலின் கையில் வேலோடு நிற்பது குறித்து பேசிய அவர், "மனதில் பக்தி இல்லாமல் இறைவனை வணங்குபவர்களுக்கு இறைவன் வரம் அளிக்க மாட்டார். கையில் வேலை எடுத்து ஸ்டாலின் புதிய நாடகத்தை துவங்கி இருக்கிறார்" என பேசினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :